Neymar : `பிரேசில் அணியுடனான காலம், இனி கடந்த காலமே.!' - ஓய்வை உறுதி செய்த நெய்மர்

Jul 30, 2026 - 13:00
0
Neymar : `பிரேசில் அணியுடனான காலம், இனி கடந்த காலமே.!' - ஓய்வை உறுதி செய்த நெய்மர்

பிரேசில் அணியின் வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரரான 'நெய்மர்' சர்வதேச கால்பந்துப் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஐந்து முறை FIFA உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணிக்காக 16 ஆண்டுகளாக நீடித்து ஆடி தனது அணியுடனான சர்வதேச கால்பந்துப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

34 வயதே ஆன நெய்மர் பல சாதனைகளை கால்பந்தின் மூலம் நிகழ்த்தியுள்ளார்.

வெனிசுலாவின் யுனிவர்சிடாட் சென்ட்ரல் அணிக்கு எதிராக சாண்டோஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவிய பிறகு தனது முடிவை அறிவித்தார். 2026 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பிறகு அவரது எதிர்காலம் பற்றிய பல்வேறு குழப்பங்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.

நெய்மர் பங்கேற்ற கடைசி ஆட்டமும் தோல்வியை தழுவியது, இதனால் ரசிகர்களிடையே எழுந்த உற்சாகமும் எதிர்பார்ப்பும் உடைந்து போனது. நார்வேக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 'ரவுண்ட் ஆஃப் 16' (Round of 16) சுற்றிலேயே பிரேசிலின் பயணம் முடிவுக்கு வந்தது.

``தேசிய அணிக்கான எனது காலம் முடிந்துவிட்டது. நான் வரலாற்றைப் படைத்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்; எனது ரத்தத்தையும் உயிரையும் அர்ப்பணித்தேன், அந்த மஞ்சள் ஜெர்சிக்காக எப்போதும் போராடினேன். ஆனால் இப்போது நான் அதைத் தொடர விரும்பவில்லை," என்று ஆட்டத்திற்குப் பிறகு நெய்மர் கூறினார்.

பிரேசில் அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையுடன் நெய்மர் விடைபெறுகிறார். 130 ஆட்டங்களில் 80 கோல்கள் மற்றும் 59 'அசிஸ்டுகளுடன்' தனது சர்வதேசப் பயணத்தை அவர் நிறைவு செய்கிறார். நார்வேக்கு எதிரான ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பெனால்டி மூலம் அவர் அடித்த கோலே அவரது கடைசி சர்வதேச கோலாக அமைந்தது. எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் இறுதியில் அடித்த இரண்டு கோல்கள் பிரேசிலின் ஆறாவது உலகக் கோப்பை கனவை தகர்த்த நிலையில், நெய்மரின் இந்தக் கோல் மட்டும் கொஞ்சம் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமைந்தது..

ரியோ 2016 ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டிற்குத் தலைமை தாங்கி தங்கப் பதக்கம் வென்று கொடுத்து, பிரேசில் அணியில் இருந்த காலத்தில்,நெய்மர் 2013 FIFA கூட்டமைப்பு கோப்பையை வெல்ல பிரேசிலுக்கு உதவினார். மேலும், நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் தனது இடத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.

தனது சர்வதேச ஓய்வை உறுதிப்படுத்திய அதே வேளையில், சமீபத்திய லீக் போட்டிக்குப் பிறகு இளம் சான்டோஸ் அணி வீரர்களை விமர்சித்ததாகவும், மிரட்டியதாகவும் கூறப்படும் செய்திகளுக்கும் நெய்மர் விளக்கமளித்தார்.

"இது வருத்தமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது, ஆனால் இது என் தவறல்ல. இந்தக் கதைகள் பலரைச் சென்றடைகின்றன," என்று நெய்மர் கூறினார்.

களத்திற்கு வெளியே நிலவிய ஊகங்களுக்கு மத்தியிலும், யுனிவர்சிடாட் சென்ட்ரலுக்கு எதிரான சாண்டோஸின் 4-2 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் நெய்மர் தனது பங்களிப்பைச் சிறப்பாக ஆற்றினார். இதன் மூலம் அந்த பிரேசிலிய அணி, கோபா சுடாமெரிக்கானா தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இடத்தைப் பிடித்தது, அங்கு அவர்கள் ஈக்வடார் கிளப்பான மாகாராவை எதிர்கொள்வார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User