கோவை: சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் உயிரை மாய்த்த விவகாரம்; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

Oct 23, 2026 - 20:30
0
கோவை: சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் உயிரை மாய்த்த விவகாரம்; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர், கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். “நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா?” என வகுப்பறையில் கேட்டு ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் இழிவுபடுத்தியதால் அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சக மாணவர்கள் இருவர், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நான்கு பேர் மீதும் 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு அமைப்பினர் போராட்டம்
பல்வேறு அமைப்பினர் போராட்டம்

இதனிடையே சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் அருண் குமாரைக் கைதுசெய்யும் வரை, அகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும், கே.கே.நாயுடு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவரின் பெற்றோர், உறவினர்களுடன் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு அமைப்பினர் போராட்டம்
பல்வேறு அமைப்பினர் போராட்டம்

இந்த நிலையில் ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கே.கே. நாயுடு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அகிலனிடம் சாதிய பாகுபாடு காட்டி துன்புறுத்திய இரண்டு சக மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோவை மாநகரக் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User