`கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து குவியும் ஆதரவாளர்கள்?' - சர்ச்சையும் பின்னணியும்

May 22, 2026 - 13:02
0
`கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து குவியும் ஆதரவாளர்கள்?' - சர்ச்சையும் பின்னணியும்

வெறும் ஆறு நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற நையாண்டிக் குழு, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) விட அதிக ஃபாலோயர்களைப் பெற்றுள்ள நிலையில், இந்தக் குழுவின் ஆதரவாளர்களின் இருப்பிடம் குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களில் பெரும் பகுதியினர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் துருக்கி போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சமூக வலைதள பயனர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் காணொளிகள் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராமில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

`கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'
`கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'

இந்தக் குற்றச்சாட்டுகளின்படி, கட்சியின் மொத்த ஆதரவாளர்களில் இந்தியர்கள் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு எக்ஸ் பயனர், "அவர்களின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் 77% பேர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் பங்களிப்பு வெறும் 9% மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "CJP-யின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் சுமார் 63% பேர் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். இது கவலைக்குரிய விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் வளர்ச்சி, வெளிநாடுகளில் இருந்து 'பாட்' (bot) கணக்குகள் மூலம் ஃபாலோயர்கள் செயற்கையாக அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் சரிபார்க்கப்படவில்லை. மேலும், இந்தக் கணக்கின் பின்தொடர்பவர்களின் புவியியல் விவரங்கள் குறித்து மெட்டா அல்லது இன்ஸ்டாகிராம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தரவுகளும் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

குற்றச்சாட்டுகளுக்கு CJP நிறுவனர் பதில்

சமூக வலைதளங்களில் பரவும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எங்கள் கணக்கை ஹேக் செய்ய நீங்கள் தீவிரமாக முயற்சிப்பது எனக்குத் தெரியும், ஆனால் அதில் நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள். உண்மையான தரவுகளை நான் பகிர்கிறேன். 94% இந்திய இளைஞர்களை நீங்கள் ஏன் பாகிஸ்தானியர்கள் என்று கூறுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பி, தனது தரப்பு புள்ளிவிவரங்களையும் பகிர்ந்துள்ளார்.

`கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'
`கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'

சர்ச்சையின் பின்னணி

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அரசியல் ஆலோசகரான அபிஜீத் திப்கே என்பவரால் மே 16 அன்று 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தொடங்கப்பட்டது. வேலையில்லாத இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் குறிப்பிட்டதாக வெளியான செய்திக்கு எதிர்வினையாக இந்த நையாண்டி இயக்கம் தொடங்கப்பட்டது. பின்னர், தனது கருத்து ஊடகங்களால் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக நீதிபதி விளக்கம் அளித்திருந்தார்.

தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே, இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் 14.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று, பாஜகவின் 8.8 மில்லியன் ஃபாலோயர்களை முந்தியது. இதற்கிடையே, "தேசிய பாதுகாப்பு கவலைகள்" காரணமாக இந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது 'Cockroach Is Back' என்ற புதிய கணக்கை அவர் தொடங்கியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மஹுவா மொய்த்ரா போன்ற அரசியல்வாதிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் இந்த இயக்கத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User