பட்டியல் சாதியினரின் உடல் பொது சுடுகாட்டில் அடக்கம்; வாழ்வாதாரத்தை முடக்கி வஞ்சிக்கும் ஆதிக்கச்சாதி?

Oct 16, 2026 - 21:00
0
பட்டியல் சாதியினரின் உடல் பொது சுடுகாட்டில் அடக்கம்; வாழ்வாதாரத்தை முடக்கி வஞ்சிக்கும் ஆதிக்கச்சாதி?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள பெரும்பாளி பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களில் பலர் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.

ஆதிக்கச் சாதியினரான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் தோட்டங்களில் கூலி வேலை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பல தலைமுறைகளாகப் பல்வேறு விதமான சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

பெரும்பாளி கிராமத்தில் உள்ள பொது மயானத்தில் பட்டியல் சமுதாய மக்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என அங்குள்ள ஆதிக்க சாதியினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

பொது மயான பிரச்சனை
பொது மயான பிரச்சனை

இதற்குப் பயந்து அந்த மக்கள், அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்து வந்திருக்கிறார்கள். அங்கும் இடப்பற்றாக்குறை பிரச்னை எழ ஆரம்பித்திருக்கிறது.

​இந்த நிலையில், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சென்னி என்பவரின் உடலை ஊரில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். எதிர்ப்பு வரும் என்பதை அறிந்த பட்டியல் சமுதாய மக்கள், முன்கூட்டியே காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவித்துப் பாதுகாப்பிற்காக வரவழைத்திருக்கிறார்கள். எதிர்பார்த்தபடியே ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த சிலர் ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கூட்டத்திற்குள் நுழைந்த ரிதுவரன் என்ற இளைஞன், "ஊர் பொது மயானத்தில் நீங்கள் உடல்களை அடக்கம் செய்வதாக இருந்தால், எங்களின் தோட்டத்திற்கு உங்களை வேலைக்கு அனுமதிக்க முடியாது. இதுதான் ஊர் மக்களின் தீர்மானம். மற்றபடி நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இருவர், கையெடுத்துக் கும்பிட்டும் இளைஞனின் காலில் விழுந்தும் கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால், அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சென்னியின் உடலை அதே பொது மயானத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள். மேலும், இந்தத் தீண்டாமை கொடுமை குறித்து காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர்‌.

பொது மயான பிரச்சனை
பொது மயான பிரச்சனை

இது தொடர்பாக திங்களூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனச் சமூகநீதித்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களாக பட்டியல் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, வெளிப்படையாகவே வஞ்சித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துப் பகுஜன் சமாஜ் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில், "பெரும்பாளி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பட்டியல் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் வெறும் 15 குடும்பங்கள்தான் இருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் ஊர்க் கட்டுப்பாடு எனச் சொல்லிச் சாதிய அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், இந்த மக்களுக்காக அரசு நிதி ஒதுக்கி பொது மயானம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அதை இந்த மக்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தடுத்து வருகிறார்கள். அரசு நிர்வாகமும் உரிமையை மீட்டுக்கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

முதியவர் சென்னியின் உடலை அடக்கம் செய்தபோது, வாழ்வாதாரத்திற்கு வழிவகை இல்லாமல் செய்துவிடுவோம் எனப் பகிரங்கமாகவே மிரட்டி காலில் விழச் செய்தார்கள். அந்தக் கொடுமையை வீடியோ பதிவு செய்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணுக்கு முன்னால் நடக்கும் சாதியக் கொடுமையை வேடிக்கை பார்த்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர்களையே விசாரணை அதிகாரிகளாக நியமித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். மதுபோதையில் காலில் விழுந்துவிட்டதாக எழுதி வாங்கியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

பகுஜன் சமாஜ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்
பகுஜன் சமாஜ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்

தடையை மீறி உடல் அடக்கம் செய்யப்பட்ட காரணத்தால், கடந்த 10 நாள்களாக வேலை தர மறுத்து வருகிறார்கள். அந்த மக்கள் அனைவரும் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு ஏற்பாட்டை அரசு செய்து கொடுத்து நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறது சட்டம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இன்றுவரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் என யாரும் எட்டிப் பார்க்கவில்லை. அரசின் பொது மயானத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தக் கூடாது என இத்தனை ஆண்டுகளாக வெளிப்படையாகத் தடுத்து வருகிறார்கள் என்றால், இதற்கு முழு காரணம் அரசுத்துறையின் பாராமுகம்தான். அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்" என்றார்.

பெரும்பாளி பட்டியல் சமுதாய மக்கள் சிலரிடம் பேசுகையில், "விவசாய வேலையை விட்டால் வேறு வேலை தெரியாது. நிலம் இல்லாத எங்களுக்கு இவர்களைவிட்டால் பிழைப்புக்கும் வழியில்லை. எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்றுதான் அமைதியாகப் போகிறோம்" என்றனர்.

​பெரும்பாளி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் தரப்பில், "மயானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால்தான் இப்படிச் சொன்னோம். சாதி பாகுபாடு பிரச்னை எதுவும் இல்லை. அவர்களாகத்தான் 10 நாள்களாக தோட்ட வேலைகளுக்கு வருவதில்லை" என்றனர். ​

திங்களூர் காவல்துறையினர் கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞர் ரிதுவரன் உட்பட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ மற்றும் எஸ்பி ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அந்த மக்களை வேலைக்கு அனுமதிக்காதது குறித்து விசாரிக்கிறோம். ஈரோட்டில் உள்ள சில மயானங்களில் பட்டியல் சமுதாய மக்களை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பதாகப் புகார்கள் வருகின்றன. அது குறித்தும் கமிட்டி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User