அகன்ற நெற்றியா... நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி! சாமுத்ரிகா லட்சணம் சொல்லும் அபூர்வ தகவல்கள்!

Sep 10, 2026 - 11:31
0
அகன்ற நெற்றியா... நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி! சாமுத்ரிகா லட்சணம் சொல்லும் அபூர்வ தகவல்கள்!

நாரதர், வசிஷ்டர், அத்ரி, பிருகு, வாமதேவர், ரோமர், மரிசி முதலான மஹரிஷிகள் மூலம் ஜோதிடம் குறித்த ஞானம் உலகுக்கு அருளப்பட்டது என்பர். இவர்களில் பிருகு முனிவர் அருளியது பிருகு சம்ஹிதை.

அங்க லட்சணம்
அங்க லட்சணம்

இது நமது எதிர்காலத்தைத் தெரிவிக்கும் ஜோதிட சாஸ்திர நூல் எனில், மனிதனின் அவயவங்களின் லட்சணத்தைக் கொண்டு அவனது குணநலன்களை விரிவாக விளக்கும் வகையில் பிருகு முனிவர் அருளிய நூல், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் ஆகும். மனித அங்க லட்சணத்தை விவரிக்கும் மிக அற்புதமான சாஸ்திர நூல் இது.

நிலவுபோன்று மிக அழகிய முகத்தைக் கொண்ட பெண் லட்சியவாதியாகத் திகழ்வாள்; விசாலமான நெற்றி ஞானத்தின் சின்னம், ஆழ்ந்த கண்களைக் கொண்டவர்கள் லட்சுமிகடாட்சம் மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள், நாக்கில் மச்சத்துடன் திகழும் அன்பர்கள் பெரும் ஞானிகளாகவும், அறிஞர்களாகவும் புகழ்பெறுவார்கள்... எனப் போன்ற தகவல்களைச் சொல்கிறது இந்த நூல். அந்த வகையில் நெற்றி, புருவம் பற்றி இந்நூல் குறிப்புகள் சுவாரஸ்யமானவை.

நெற்றி சற்று மேடாக அகன்று அமைந்திருப்பது, லட்சுமியின் அருள் சின்னமாகும். இத்தகைய அமைப்பைப் பெற்ற பெண்கள் பிறக்கும் குடும்பம், செல்வச் செழிப்புடன் திகழும். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த சூழலில் கவலையற்று வளருவார்களாம்.

சுருக்கம் நிறைந்த நெற்றியைக் கொண்டவர்கள், சஞ்சல சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். சந்தேகம் இவர்களுடைய இயல் பாக இருக்கும். எனினும், சொந்தக் காலில் நிற்பார்கள். குழந்தைகள் மூலம் இவர்களின் வாழ்வு உயர் நிலை அடையும்.

எப்போதும் வியர்வை நிரம்பிய நெற்றியைக் கொண்டவர்கள், நாவன்மை மிக்கவராகத் திகழ்வார்களாம்.

புருவம்

புருவத்தை எடுத்துக்கொண்டால்... புருவம் பிறை வடிவில் இருந்தால், மிக மென்மையான உணர்வு படைத்தவர்களாகவும், செல்வந்தர்களாகவும், கல்வியில் உயர் தகுதியைப் பெற்றவர்களாகவும் திகழ்வார்களாம்.

வில் போன்ற வளைந்த புருவம் பெண்களுக்கு இருந்தால், அவர்கள் அழகுணர்ச்சியும் அன்பும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். குடும்பத்தாரிடம் பாசம் மிகுந்திருக்கும். ஓவியம். சிற்பத்தில் அதிக நாட்டம் இருக்கும்.

அதிகம் வளையாமல் நீண்டு இருக்கும் புருவ அமைப்பைப் பெற்றவர்கள், சற்று முரட்டுக் குணமும், பிடிவாதமும் கொண்டவர்களாக விளங்குவர். இவர்களுக்கு ராணுவம், காவல்துறை போன்ற துறைகள் சிறந்தவை. பெரிய பொறுப்புகளை வசப்படுத்துவார்கள். கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பார்கள். நிம்மதிக்குக் குறைவிருக்காது.

ஒரு மெல்லியக் கோடு போன்று புருவம் அமையப்பெற்றவர்கள், கபடு, சூதுகள் அறியாத அப்பாவிகளாக இருப்பார்கள். மற்றவர்கள் ஆட்டி வைத்தபடி எல்லாம் ஆடுவார்கள். அனைத்தையும் எளிதில் நம்பி விடுவார்கள்.

புருவங்கள் இரண்டுக்கும் மத்தியில் உள்ள இடைவெளி, குறுகி நெருக்கமாக இருந்தால், அது நட்புறவுக்கான அடையாளம். இவர்களை நண்பர்களாகப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

புருவங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருந்தால், அத்தகைய அன்பர்கள் பொறியியல் துறை மற்றும் கலைத் துறையில் வல்லுநராகத் திகழ்வார்கள்.

பெண்களுக்கு புருவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் இருப்பது சுபலட்சணம். அவர்களின் வாழ்வில் நிறைந்த சௌபாக்கியம் நிலவும். புருவ இடைவெளி அதிகம் இருப்பின், அரசபோக வாழ்க்கை கிடைக்கும் என்கின்றன அங்கலட்சண சாஸ்திர நூல்கள்.

புருவங்களைப் போன்றே கண்களின் அமைப்புகளைக் கொண் டும் சில விளக்கங்களைச் சொல்கின்றன அங்கலட்சண சாஸ்திர நூல்கள்.

கண்கள்

கண்கள் உட்புறமாக ஆழ்ந்திருப்பின் தாராள மனம் படைத்தவர் களாகவும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வாக்கு சாதுர்யத்தால் சாதிப்பார்கள்.

ஆழ்ந்த கண்களைக் கொண்ட பெண்கள் எனில், லட்சுமி கடாட்சம் மிக்கவர்களாகத் திகழ்வர். இவர்கள், சுகபோக வாழ்க்கையில் திளைப்பார்கள்.

அளவுக்கு அதிகமாக அகன்றும், சற்று கோணலாகவும் அமைந்த கண்களைக் கொண்டவர்கள், சந்நியாசியைப் போன்று எதிலும் பற்றற்று வாழ்வார்கள். பதவியில் பற்று ஏற்படாது. குடும்ப வாழ்விலும் ஆழமான பிடிப்பு ஏற்படுவது கடினம். மருத்துவம், ஜோதிடம், மந்திர-தந்திரங்களில் அதீத நம்பிக்கையும், சிலருக்கு இவற்றில் பயிற்சியும் இருக்கும்.

பூனைக் கண்ணைப் பெற்றிருப்பவர் எனில், அது அதிர்ஷ்ட அமைப்பு. எதிர்பாராத மாற்றங்களால் வாழ்க்கை உயருமாம்!

கண்களின் அமைப்பு மட்டுமின்றி, கண்களுக்கு அருகில் மச்சங்கள் அமைந்திருக்கும் பாங்கைக்கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஒருவருக்கு வலது கண் புருவத்தில் மச்சம் அமைவது, மிக அற்புதமான அமைப்பாகும். இப்படியான நபர்களுக்கு, அவருடைய 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் ஏற்படும்.

பெரும்பாலும் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். இடது கண் அருகில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகத் திகழ்வார்கள்; மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User