"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

Mar 30, 2026 - 12:31
 0
"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, திருச்சூர் பி.ஜே.பி வேட்பாளர் பத்மஜா வேணுகோபால், மணலூர் தொகுதி வேட்பாளர் கே.கே. அனீஷ் குமார், நாட்டிகா தொகுதி சி.பி.ஐ கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து வேட்பாளரான சி.சி.முகுந்தன் ஆகியோரும் பிரதமரின் ரோடு ஷோ வாகனத்தில் இருந்தனர்.

பாலக்காட்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கேரளத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தின் இளைஞர்களும், பெண்களும், விவசாயிகளும் பி.ஜே.பி பக்கம் நிற்கிறார்கள். நமது எத்தனையோ நிர்வாகிகள் அரசியல் தாக்குதலால் உயிரை தியாகம் செய்தனர். அந்த நிர்வாகிகளை வணங்குகிறேன். கேரளத்தின் நுழைவு வாயிலாக பாலக்காடு அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக கேரளா இடது-வலது கட்சிகளின் வஞ்சனையில் சிக்கிக்கிடக்கிறது.

ஒன்று ஊழல் கட்சி, மற்றொன்று மகா ஊழல் கட்சி. ஒன்று வகுப்புவாதம் மற்றொன்று பயங்கர வகுப்புவாதம். எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகிய கூட்டணிகளின் கொள்கைகள் வாக்கு வங்கி அரசியலாகும். கேரளாவின் வளர்ச்சியைப் பற்றி அவர்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. இங்கு அமைய உள்ள பி.ஜே.பி அரசு கேரளாவில் வேகமான வளர்ச்சிப்பணிகளை ஏற்படுத்தும். கேரளம் வளரும், மாறாதது இனி மாறும். பல தசாப்தங்களாக எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகியவை மாறி மாறி கேரளாவை கொள்ளையடித்து வருகிறது.

பாலக்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி

காங்கிரஸ் பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று சி.பி.எம் கூறுகிறது. சி.பி.எம் கட்சி பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று காங்கிரஸ் கூறுகிறது. எனவே கேரளாவில் 'ஏ' டீம் பி.ஜே.பி மட்டும்தான் என்பதை இரு கூட்டணிகளும் ஒப்புக்கொள்கின்றன. கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம். இரண்டு ஊழல் கட்சிகளும் பி.ஜே.பி-யைக் கண்டு பயப்படுகின்றன. ஏனென்றால் கேரளாவில் பி.ஜே.பி ஆட்சி வந்ததும், அவர்களின் ஊழல் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவரும். பல ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்தாலும், மாறி மாறி சட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். கேரளத்தில் பி.ஜே.பி அரசு அமைந்தால், சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுகளின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். இதனால்தான் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பி.ஜே.பி-யைப் பார்த்து பயப்படுகின்றன.

வளர்ந்த கேரளம் - மோடியின் உத்தரவாதம்!

ரோடு ஷோ-வில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி

மேற்கு ஆசியாவில் யுத்தம் நடக்கிறது. கேரளத்தில் இருந்து நிறையபேர் யுத்த பூமியில் சிக்கி உள்ள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நம் நாட்டு தூதரகங்கள் அங்கு தீவிரமாக வேலைசெய்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆபத்தான விஷயங்களை பேசுகிறார்கள். வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சுமார் ஒருகோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்படவேண்டும், அதன்மூலம் அரசியல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது.

காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் நாடு முழுவதும் ஒன்றாக உள்ளன. பீகார், ஆந்திரா, மணிப்பூர், திரிபுரா, அசாம் மற்றும் தமிழ்நாட்டிலும் இவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். கேரளாவில் மட்டும் பரஸ்பரம் மோதிக்கொள்வார்கள். எனவே இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரளத்தில் சாலை, ரயில்வே வளர்ச்சி, ஜல் ஜீவன் மிஷன், பி.எம் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்காக வழங்கப்பட்ட பணம் மக்களைச் சென்றடையவில்லை. வளர்ந்த கேரளம் என்பது மோடியின் உத்தரவாதம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0