Bharathiraja : "வாட்சை வித்து, ஊர் வந்து சேர்ந்தேன்!" - ராணுவப் பயிற்சி பற்றி பாரதிராஜா
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு.
நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன.

அவர் ராணுவத்தில் சேர்ந்த விஷயம் குறித்தும், அங்கிருந்து அவர் வெளியே வந்த கதை பற்றியும் 2018-ல் விகடன் தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார்.
“அது ஒரு பெரிய கதை. ‘மெட்ராஸ் இன்ஜினீயரிங் குரூப்’ங்கிற பேரைப் பார்த்துட்டு, இன்ஜினீயரிங் படிக்கலாம்னு பெங்களூர் கிளம்பிப் போய்ட்டேன். போனதுக்கு அப்புறம்தான் தெரியும், அது ராணுவத்துக்கு ஆள் எடுக்கிற இடம்னு.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு நான்கு மொழிக்காரனுங்களும் இருக்கோம். பயிற்சி முடிச்சவங்க, வளாகத்துக்குள்ள வெளியில சுதந்திரமா இருப்பாங்க. எங்களைப் போல புது ஆள்களை இருட்டுன உடனே உள்ள தள்ளிப் பூட்டி, விளக்கை அணைச்சிருவாங்க.
நம்ம கையும் காலும் சும்மா இருக்குமா? ராத்திரி ஆச்சுனா, இருக்கிற பெட்டுகளையெல்லாம் அடுக்கி மேடையாக்கி, நாடகம், பாட்டு, கூத்துனு ஏதாவது பண்ணிக்கிட்டிருப்பேன். அங்கே, உயர் அதிகாரிகளெல்லாம் எப்படி அதிகாரமா நடந்துக்கிறாங்க, பேசுறாங்க, கோபப்படுறாங்கனு நடிச்சுக்காட்டுவேன். அதகளம் பண்ணுவோம்.

ஒருநாள் நான் நடிச்சிக்கிட்டிருக்கிறப்போ, அதிகாரி வந்துட்டான். பயங்கரமான பனிஷ்மென்ட் கொடுத்துட்டான். அந்த நேரத்துல கோவாவுல போர் நடந்துக்கிட்டிருந்தது.
லாரியா லாரியா சோல்ஜர்ஸ் ஏறிப் போறாங்க. என்னடா இது ஜெயில் மாதிரி, சுதந்திரமில்ல... காம்பவுண்ட், துப்பாக்கி, ராணுவம், பனிஷ்மென்ட்னு இது ஒரு கலைஞனுக்கான இடமா இல்லையேனு தோணுச்சு.
வீட்டுக்கு லெட்டர் எழுதினேன். பழைய, சுகாதாரத் துறை ஆபீஸிலிருந்து ‘முறையா எதையும் ஒப்படைக்கல. உடனே அனுப்பிவைக்கவும்’னு ஒரு லெட்டர் வந்தது. தப்பிச்சோம்னு வெளியே வந்தேன்.
கையில காசு இல்ல. வாட்சை வித்து, ஊர் வந்து சேர்ந்தேன். இதெல்லாம் நடந்தது ஒரு மாச காலத்துக்குள். அங்கே இன்னும் பல விஷயங்கள் நடந்துச்சு. அதையெல்லாம் வெளியில சொல்ல முடியாது.” எனக் கூறிச் சிரித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)