Ben Stokes: தோல்விகள், சர்ச்சைகளை வென்ற ஃபீனிக்ஸ் பறவை அவன் - ஸ்டோக்ஸ் சாதனைகளும், சறுக்கல்களும்!

Jun 29, 2026 - 16:32
0
Ben Stokes: தோல்விகள், சர்ச்சைகளை வென்ற ஃபீனிக்ஸ் பறவை அவன் -  ஸ்டோக்ஸ் சாதனைகளும், சறுக்கல்களும்!

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அவரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவரது கிரிக்கெட் பயணத்தில் சாதனைகள், சறுக்கல்கள், சர்ச்சைகள், அத்தனையையும் கடந்து ஃபீனிக்ஸ் பறவையாய் பென் ஸ்டோக்ஸ் மீண்டெழுந்திருக்கிறார்.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

ஆரம்பகால சவால்களும் சர்வதேச அறிமுகமும்!

நியூசிலாந்தில் பிறந்து, பின்னர் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்த பென் ஸ்டோக்ஸ், சிறு வயது முதலே ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரராக வளர்ந்தார். 2011-ல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும், 2013-ல் ஆஷஸ் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். 

தனது அறிமுக ஆஷஸ் தொடரிலேயே பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து, தான் ஒரு அசாத்திய திறமைசாலி என்பதை உலகிற்கு நிரூபித்தார். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்றிலும் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த ஒரு பெரும் பொக்கிஷமாக அவர் பார்க்கப்பட்டார்.

தாங்க முடியாத தோல்விகளும், சர்ச்சையும்

ஸ்டோக்ஸின் வாழ்க்கையில் வெற்றிகள் எவ்வளவு பிரம்மாண்டமானவையோ, அதே அளவு அவரது தோல்விகளுக்கும் அதில் சமபங்கு உண்டு.

2016 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப்போட்டியின் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லோஸ் பிராத்வெயிட், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு கோப்பையை வெஸ்ட் இண்டீஸுக்கு வென்று கொடுப்பார்.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

மைதானத்திலேயே மண்டியிட்டு ஸ்டோக்ஸ் அழுத அந்தக் காட்சி, அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான தருணம். அவரது ரசிகர்களையும் அந்த நிகழ்வு கண்கலங்க வைத்தது.

2017-ல் ஒரு இரவு விடுதிக்கு வெளியே நடந்த சண்டையில் கைதாகி, நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். அவரது கரியரே முடிந்துவிட்டது என்று விமர்சகர்கள் எழுதத் தொடங்கினர்.

இதுபோன்ற சர்ச்சைகள் பென் ஸ்டோக்ஸை சூழ்ந்தாலும் அதில் இருந்து மீண்டு வந்து விளையாடியதுதான் அவரை ஒரு லெஜண்ட்டாக மாற்றியது.

பொற்காலமாக அமைந்த 2019-ம் ஆண்டு

2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டியில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். 2016-ல் விட்டதை 2019-ல் உலகக்கோப்பையோடு மீட்டெடுத்தார்.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

அதே ஆண்டில் நடைபெற்ற ஹெடிங்லி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 9 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, கடைசி விக்கெட்டுக்கு ஜாக் லீச் உடன் இணைந்து ஸ்டோக்ஸ் ஆடிய 135 ரன்கள் இன்னிங்ஸ், கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனியொருவனாக நின்று ஆஸ்திரேலியாவிடமிருந்து வெற்றியைப் பறித்தார்.

2016-ல் டி20 உலகக்கோப்பையைத் தவறவிட்ட அதே ஸ்டோக்ஸ், 2022 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து இங்கிலாந்திற்கு டி20 கோப்பையையும் வென்று தந்தார். தனது வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தையும் பிடித்தார்.

'பாஸ்பால்' (Bazball) அறிமுகமும், கேப்டன்சியும்

2022-ல் ஜோ ரூட்டிற்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உடன் இணைந்து 'பாஸ்பால்' என்ற அதிரடி ஆட்டமுறையை அறிமுகப்படுத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை சலிப்பில்லாமல், மிகவும் விறுவிறுப்பாக மாற்றிய பெருமை இவரையும் சேரும்.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், எப்போதுமே ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்துவது மற்றும் ஆக்ரோஷமான ஃபீல்டிங் வியூகங்களை அமைப்பதுதான் இவருடைய கேப்டன்சி ஸ்டைல்.

எந்தச் சூழ்நிலையிலும் தனது வீரர்களுக்கு முழு சுதந்திரமும் ஆதரவும் வழங்கி, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதுதான் ஸ்டோக்ஸின் கேப்டன்சி பண்பு.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிறந்த வீரராக எப்போதும் நினைவுகூரப்படுவார்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User