444 கிடாய்கள்; 1,800 சேவல்கள்; 16 ஆயிரம் பேர்... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரமாண்ட கறி விருந்து!
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பித்தளை மற்றும் வெண்கல மணிகள் கட்டப்பட்ட கருவேல மரத்தையே மாடசாமியாக வழிபட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள். இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புரட்டாசி கொடை விழா மிகவும் சிறப்பு பெற்றது.

இங்கு சமைக்கப்படும் கிடாய்க் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் முறை உள்ளதால் அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் சிறுவர்களே கலந்துகொண்டு விருந்தில் பங்கேற்பார்கள். தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிவிட்டால், மரத்திற்கு ரோஜா மாலை அணிவித்து, பன்னீர் தெளித்து, கற்பூரம் ஏற்றி வழிபடுவதுடன், மணிகளையும் கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நிலம், வீடு வாங்குதல் மற்றும் திருமணம் போன்ற முக்கிய காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பாகச் சுவாமியிடம் பூக்கட்டிப் பார்த்து உத்தரவு பெறும் வழக்கமும் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கு சுவாமிக்குப் படைக்கப்படும் தேங்காய் மற்றும் பழங்களைப் பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. அவை கோயிலின் ஒரு பகுதியில் தனித்தனியாகக் குவித்து வைக்கப்படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காயைச் சிறு துண்டுகளாக உடைத்து உண்ணுகின்றனர்.

ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால் மாடசாமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயில் விழாவில் உச்சிக்கால பூஜையில் மட்டுமே பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது கோயிலின் கட்டுப்பாடாகக் கூறப்படுகிறது. கோயிலின் வழக்கமான பூஜைகள் மற்றும் கொடை விழாவின்போது மேளதாளங்கள் இசைக்கப்படுவதில்லை. மணி ஓசையுடன் மட்டுமே பூஜைகள் நடைபெறுகிறது. இந்தாண்டு கடந்த 15-ம் தேதி புரட்டாசி கோயில் கொடை விழாவில் மதியம் உச்சிக்கால பூஜைக்குப் பிறகு பெண்களுக்கு சாம்பார், கூட்டுப் பொரியலுடன் சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது.

அன்றிரவு முதல் மறுநாளான காலை வரை கிடா விருந்துக்காக 444 ஆடுகளும் 1,800 சேவல்களும் பலியிடப்பட்டு வெட்டப்பட்டது. சுமார் 100 பேர் இறைச்சி வெட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3,000 கிலோ அரிசியில் உணவு சமைக்கப்பட்டு சுமார் 15,000 பேருக்கு பிரம்மாண்டமான கறிவிருந்து நடைபெற்றது. காலையில் தொடங்கிய விருந்து இரவு வரை நடைபெற்றது. கிடா விருந்தில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லாததால், ஆண்களும் சிறுவர்களும் நீண்ட வரிசையில் நின்று உணவருந்தினர். கறி விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பக்தர்களின் பைக்குகள், கார், வேன்கள் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு சாலையின் இரு புறமும் வரிசைக்கடி நின்றன.
மாடசாமியிடம் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, சேவல் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாகக் கோயிலில் விட்டுச் செல்கின்றனர் பக்தர்கள். அவை ஊருக்குள் சுற்றித் திரிந்தாலும், மாலையில் கோயில் எல்லைக்குள் வந்து சேர்ந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் அவை சுவாமிக்குச் செலுத்தப்பட்ட நேர்த்திக்கடன் என்பதால், யாரும் அவற்றைத் தொந்தரவு செய்வதில்லை எனவும் கூறுகின்றனர்.

மணிகட்டி மாடசாமி கோயில் வரலாறு குறித்து பூசாரி கண்ணனிடம் பேசினோம், “ஆடு, மாடு மேய்க்கும் தொழிலே இந்த ஊரின் முக்கியத் தொழில். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட மாடுகளை மேய்ச்சலுக்காக ஏரல் அருகேயுள்ள வாழவல்லான் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் மாதக் கணக்கில் மேய்ச்சல் செய்தும் தாகத்திற்கு தாமிரபரணி தண்ணீர் காட்டியும் மாடுகளைக் காப்பாற்றி வந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் தொடர் மழை பெய்யவே துரைச்சாமிபுரத்திலுள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பின.
ஊரில் தண்ணீர் செழிப்பான தகவல் கிடைத்ததும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மாடுகளை மீண்டும் ஊருக்கே அழைத்து வந்துள்ளனர் ஊர் மக்கள். ஊருக்கு நடுவே உள்ள கண்மாயில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த நேரத்தில் இடி, மின்னலுடன் பெருமழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை வெள்ளத்தில் சிக்கிவிடாமல் இருக்க, மாடுகளை வேக வேகமாக ஊருக்குள் அழைத்துச் சென்றனர் ஊர்மக்கள். மழை நின்றதும் மாடுகளின் எண்ணிக்கையை சரிபார்த்துள்ளனர்.

அதில், ஒருவரின் மந்தையில் இருந்த மாடுகளில் ஒரு மாட்டைக் காணவில்லை. ஊர் முழுக்க தேடி அலைந்துள்ளார் அந்த மாடு மேய்ப்பவர். அப்போது கண்மாய் தண்ணீரில் இருந்து காணாமல் போன காளை மாடு துள்ளிக்குதித்து கரைக்கு வந்து கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியை ஆட்டி ஒலி எழுப்பியுள்ளது. “உன்ன எங்கல்லாம் தேடுறது… வெள்ளம் இழுத்துட்டுப் போயிடுச்சா.. இவ்வளவு தண்ணியில உயிரோட வந்திருக்க..” என ஆச்சர்யத்துடன் காளை மாட்டிடம் கேட்டபடியே கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை இழுத்துப் பிடித்தபடியே ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார் அந்த மாடுமேய்ப்பவர்.
”என்னை தேடாதே.. நான் மக்களைக் காக்கும் மாடசாமி. நான் ஊருக்குள் வர மாட்டேன். இதுதான் என் கோட்டை. என்னை நாடி வந்து வேண்டும் மக்களின் குறைகளை தீர்ப்பேன். ஊரைக் காப்பேன்” எனச் சொன்னபடியே கண்மாய் கரையில் இருந்த ஒரு கருவேல மரத்தின் அடியில் சென்று மாயமாகியது. அந்த மரத்தின் கீழ், காளை மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி மட்டும் கிடந்துள்ளது.

அந்த மணியை, அதே மரத்தில் கட்டி மாடசாமியாக வழிபட ஆரம்பித்துள்ளனர். கருவேல மரமே மாடசாமியாக பாவித்து வழிபடுகிறார்கள். மாலை சாற்றுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மரத்தின் அடியில் கல் பீடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சொத்துப் பிரச்னை, நீதிமன்ற வழக்கில் இழுபறி, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் என வேண்டுதல்கள் நிறைவேற மாடசாமியை மனமுருக வேண்டிக் கொண்டு ரோஜாமாலை சாற்றி, பன்னீர் தெளித்து கற்பூரம் ஏற்றி பித்தளை மணியை மரத்தில் கட்டி வழிபட்டால் நிறைவேறும்.” என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)