‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Oct 19, 2026 - 07:31
0
‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “வடகிழக்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையான அளவு செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளில் 1 லட்சத்து 4,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கும் இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 250 படகுகளுகளும், மீனவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

அ.தி.மு.க-விலிருந்து 15 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க-வில் இணைய உள்ளதாக பேசியது குறித்த கேள்விக்கு, “15 பேர் வருவார்கள் என்றுதான் கூறினேனே தவிர, 15 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை. அவ்வாறு நான் கூறியதாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் சுட்டிக்காட்டட்டும். அவர்களாகவே ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்” என பதிலளித்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

தொடர்ந்து பேசிய அவர், ”உலகத்தை சில தலைவர்கள் வென்று காட்டியிருக்கிறார்கள், ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது. அந்தக் காலத்தையே வென்று காட்டியவர் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர். அ.தி.மு.க-வில் இருந்து தன்னை நீக்கியது ஒரு வகையில் தனக்குச் செய்த நன்மையே. அங்கிருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று அமைச்சராகியிருக்க முடியாது. என்னைத் தாங்கிப் பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கும் கழகத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அ.தி.மு.க-வினர் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் குறித்துக் கேட்டபோது, ”அவர்களுக்கு இதுவே வாடிக்கையாகப் போய்விட்டது, மக்களுக்கு விரைந்து சென்று பணியாற்ற வேண்டிய இந்த முக்கிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறி நேரத்தை விரயம் செய்யத் தேவையில்லை” என்றார். அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”அது அ.தி.மு.க-வின் இரு பிரிவுகளிடமும் கேட்க வேண்டிய கேள்வியே தவிர, என்னிடம் கேட்க வேண்டியது அல்ல” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User