``நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா?'' - ராணுவ அதிகாரி மனைவி கைதின் அதிர்ச்சி பின்னணி!
ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி வரும் மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் முகவர்களிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தப் பெண், தற்போது ஜம்முவில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் (Academicians) என்ற போர்வையில் பலர் இந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர்.

தொடக்கத்தில் அந்தப் பெண்ணிடம் சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) தொடர்பான கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பின்னர், மெல்ல மெல்ல நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ உத்திகள் சார்ந்த உணர்வுபூர்வமான தலைப்புகளில் கட்டுரைகளை எழுத வைத்து, ராணுவ ரகசியங்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பது புலனாய்வு அமைப்புகளின் முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தம்மிடம் உரையாடியவர்கள் கல்வித்துறை சார்ந்த பேராசிரியர்களோ அல்லது ஆராய்ச்சியாளர்களோ அல்ல என்பதை அறியாமல் இந்த 'பொறியில்' சிக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நம்பகமான உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்தப் பெண் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய உணர்வுபூர்வமான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் மின்னணுத் தரவுகளை ரகசியமாகச் சேகரித்து வெளிநாட்டு முகவர்களுக்கு அனுப்பியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், பகிரப்பட்ட ஆவணங்களின் துல்லியமான விவரங்கள், தொடர்பு கொண்ட வெளிநாட்டு முகவர்களின் அடையாளங்கள் போன்றவற்றை காவல்துறை இன்னும் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. முதற்கட்ட சோதனைகள் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை ரகசியமாக வைத்துள்ள புலனாய்வுத் துறையினர், வெளிநாட்டு முகவர்களுடன் அந்தப் பெண்ணுக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக, ஜம்மு காந்தி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தகவல்களைச் சேகரித்தல் அல்லது பரிமாறுதல் தொடர்பான அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் (Official Secrets Act, 1923) பிரிவுகள் 3 மற்றும் 5 ஆகியவற்றின் கீழும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவுகள் 152 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழும் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)