”உங்கள் மீதான நம்பிக்கையே வெற்றிக்கு வழி வகுக்கும்”- முன்னாள் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் ரவி பேச்சு!
ஆனந்தவிகடன், கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து வழங்கும் ”நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்- UPSC/TNPSC வழிகாட்டி நிகழ்ச்சி” இன்று (26.04.2026) தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்பதிவு செய்த மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அரங்கிற்கு வருகை புரிந்தனர். முதலில் பேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு, “நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கினை எப்படி அடைவது என சிந்திக்க வேண்டும். பின், அதற்காக செயலாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் உழைப்பு தேவை. உழைப்பு, கடின உழைப்பு என்பதையும் தாண்டி தற்கால போட்டி உலகில் ”ஸ்மார்ட் வொர்க்” எனப்படும் சமயோஜிதத்துடன் கூடிய எளிமையான உழைப்பும் அவசியம்” என்றார்.
தொடர்ந்தவர், ”ஸ்மார்ட் வொர்க்” என்பதை மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகளின் ஒரு நாள் வேலை மூலம் உணர்த்தி மேற்காட்டிப் பேசினார். அடுத்துப் பேசிய கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன், “நாம் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரி பட்டப்படியில் எவ்வளவோ கூடுதல் நேரமும், கவனமும் செலுத்தியிருக்கிறோம். அதே கவனத்தை, அதே நேரத்தை அதிகபட்சம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் செலவழித்தால் நம் இலக்கினை அடையலாம்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவதற்கோ, நேர்முகத்தேர்வினை எதிர்கொள்வதற்கோ மொழி ஒரு தடை அல்ல. நம் தாய்மொழியான தமிழ் மொழியில் எழுதலாம், நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளலாம். இங்கு மாணவர்களுடன் அதிக எண்ணிக்கையில் பெற்றோர்களும் வந்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சிபடக்கூடியதுதான். கடந்த ஆண்டு ஐ.ஏ,.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவரின் தாயார், அவரின், மகனின் பாராட்டுவிழாவில் பேசும்போது, “நான் கருவுற்ற மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டதுமே எனக்கு பிறப்பது மகனோ, மகளோ அந்தக்குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி ஐ.ஏ.எஸ் ஆக்குவேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். 
எனக்கு மகன் பிறந்ததும் மெளலீஸ்வரன் என்ற பெயர் சூட்டியதுடன், அப்பெயருடன் ஐ.ஏ.எஸ் என்பதையும் சேர்த்துதான் கூப்பிடுவேன். நான் நினைத்தபடி என் ஆசை நிறைவேறியது” எனக்கூறி விம்மி அழுதார். மாணவர்களே, நீங்கள் யூ.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற வேண்டும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் போன்ற உயர் பதவிகளை அடைய வேண்டும் என, உங்கள் பெற்றோர்களும் கனவுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கனவை நனவாக்குங்கள்” என்றார்.
அடுத்துப் பேசிய, தமிழக காவல்துறையின் ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆணையர் முனைவர். ரவி பேசுகையில், “போட்டி நிறைந்த உலகம் இது. இந்தப் போட்டியில் நாம் வெற்றி பெற வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடக்கூடாது. யூ,பி.எஸ்.சி தேர்வில் நேர்முகத் தேர்வில் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்ததன் மூலம் நான் சோர்வடைந்திருந்தால், இந்த உயரிய பதவியை அடைந்திருக்க முடியுமா? முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். யானையின் பலம் தும்பிக்கையில் என்பார்கள். உங்களின் பலம் உங்கள் மீதான, நீங்கள் உங்கள் மீது வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான் உங்களின் வெற்றிக்கு வழி வகுக்கும். வங்கிப் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்த என்னால் மட்டும் எப்படி ஐ.பி.எஸ் ஆக முடிந்தது? 
காரணம், என் மீது நான் வைத்த நம்பிக்கை. நீ எதுவாக ஆகிறாயோ அதுவாகவே மாறுகிறாய் என்கிறார்கள். அது உண்மைதான். உங்களின் எண்ணம்தான் உங்களை மேன்மைப்படுத்தும், வழிநடத்தும். நாம் நம்மை நாமே விளம்பரப்படுத்தக் கூடாது, பேசக்கூடாது. பிறர் நம்மைப்பற்றி பேச வைக்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு வர வேண்டும். அது நமக்கு மட்டுமல்ல. நம் மாநிலத்திற்கும் பெருமை” என்றார். இறுதியாகப் பேசிய கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் பயிற்சியாளரான ஆதில் பெய்க், “வாசிப்பு என்பதே நம் அனைவரிடமும் குறைந்துவிட்டது. வாசிப்பு வெறும் நாட்டு நடப்பினை தெரிந்து கொள்ள மட்டுமல்ல. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் உதவும். 
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் இடம்பெற்ள்ள தலைப்புகள் சம்மந்தமான கட்டுரைகள், தகவல்களை படித்து, குறிப்பெடுத்துக் கொள்வது மிக அவசியம்” என்றவர், யூ.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கான பாடத்திட்டங்கள், தயாரிப்புமுறைகள், தேர்வு முறைகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ, மாணவிகள் இத்தேர்வுகள் குறித்து பல்வேறு வினாக்களை எழுப்பினார்கள். அவற்றிற்கு முறையாக பதில் அளிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0