BB Tamil: 'ரெட் டீம் அலப்பறை; ரம்யா கிருஷ்ணனின் ஹோஸ்டிங்; ஜேசனின் ‘துரந்தர்’ ஆட்டம் - நடந்தது என்ன?

Oct 26, 2026 - 16:00
0
BB Tamil: 'ரெட் டீம் அலப்பறை; ரம்யா கிருஷ்ணனின் ஹோஸ்டிங்; ஜேசனின் ‘துரந்தர்’ ஆட்டம் - நடந்தது என்ன?

மறுபடியும் அதேதான். ஒவ்வொரு சீசனிலும் நிகழும் கசப்பான விபத்து இந்த முறையும் நிகழ்ந்தி்ருக்கிறது.  நன்றாக ஆடாத போட்டியாளர்கள் இன்னமும் உள்ளே இருக்க ஒரு நல்ல போட்டியாளரான ஷமா எவிக்ட் ஆகியிருக்கிறார். இதெல்லாம் மக்களின் வாக்கு மூலம்தான் நிகழ்கிறதா  என்று சந்தேகப்படத் தோன்றுகிறது. 

எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஷமா ஏன் பயன்படுத்தவில்லை? தன் ஆட்டத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்த ஒரு நல்ல பிளேயருக்கு பிக் பாஸ் டீம் தந்த அநீதியான பரிசு இது. 

BB Tamil 10
BB Tamil 10

7வது வாரத்தில் என்ன நடந்தது?


இந்த வார எவிக்ஷன் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னால் முத்தழகி, அஷ்மிதா, அக்ஷிதா ஆகியோர்களின் முகங்களில் சுரத்தே இல்லை. தாங்கள் வெளியேற்றப்படக்கூடும் என்கிற அச்சமும் சந்தேகமும் அவர்களின் முகங்களில் படர்ந்திருந்தன. முகேஷிடம் ஆக்ரோஷமாக மோதிய வாசனுக்கு ரெட் கார்ட் தரப்படலாம் என்கிற நிலைமையில் ‘saved’ என்கிற அறிவிப்பைக் கேட்டு ‘ஹப்பாடா’ என்று ஆசுவாசமானார். முனியம்மாளின் முன்னால் நாக்கை துருத்தி முறைத்த ஜேசன் கூட தப்பித்து விட்டார்.

‘யார் வெளியேறக்கூடும்?’ என்கிற கேள்விக்கு பலரும் பெரும்பான்மையாக முத்தழகியின் பெயரைச் சொன்னார்கள். அவருமே தன் எவிக்ஷனை எதிர்பார்த்து பரிதாபமாக அமர்ந்திருந்தார். ஆனால் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதுதானே பிக் பாஸின் வழக்கமான வசனம்?. ஷமாவின் பெயர் அறிவிக்கப்பட்ட போது அவர் மட்டுமல்ல, சக போட்டியாளர்களே வாயைப் பொத்தி அதிர்ச்சியில் உறைந்தார்கள். 

ஷமாவின் பரம விரோதியான ஜேசன் கூட எழுந்து வந்து அணைத்துக் கொண்டு ‘நீ ஒரு நல்ல பிளேயர். இத்தோடு நமக்குள்ள வெறுப்பு போகட்டும்’ என்பது மாதிரி சொன்னது சிறப்பு. பிருத்விக்கும் ஷமாவிற்கும் இடையிலான உன்னதமான நட்பு, இந்தப் பிரிவின் போது உருக்கமாக வெளிப்பட்டது. 

காமன்மேன் தகுதிச் சுற்றுகளின் போதே தன் திறமையை அபாரமாக வெளிப்படுத்திய ஷமா,  பிக் பாஸ் ஆட்டத்திற்குள் நுழைந்த பிறகு ஆரம்பத்திலிருந்தே ஜொலித்தார். வீட்டின் தலைவராக இருந்த போதும் சரி, ஹோட்டல் டாஸ்க்கில் மேனேஜராக இருந்த போதும் சரி, பம்பரமாக சுற்றி ஆடினார். பிஸிக்கல் டாஸ்க்குகளில் அடிபட்டாலும் கூட அதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டு உடனே களத்தில் இறங்கியது ஷமாவின் தனித்தன்மையாக பார்க்கப்பட்டது. பலரும் எதிர்க்கத் தயங்கிய ஜேசனுடன் நேருக்கு நேர் பல முறை மோதினார். ஜேசனுக்கான பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும் போது உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் மகிழ்ந்தார். 

பதவியின் போது தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, LP-ன் தனிப்பட்ட கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டது போன்ற சறுக்கல்கள் ஷமாவிடம் தென்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த நோக்கில் ஷமா ஒரு நல்ல பிளேயர். அவர் மக்கள் வாக்கெடுப்பில் கடைசியாக இருப்பார் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. ‘அடடா.. இப்படிப் பண்ணிட்டாங்களே’ என்று பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் பிக் பாஸின் வழக்கமான தந்திரமாக இது இருக்கலாம். 

LP போல ஷமாவும் உடனே வீட்டுக்குத் திரும்பலாம் அல்லது சீக்ரெட் ரூம் ஆப்ஷன் தரப்படலாம் என்று தோன்றுகிறது. 

BB Tamil 10
BB Tamil 10

ரம்யா கிருஷ்ணனின் ஹோஸ்டிங் சுவாரசியமாக இருந்ததா?


விஜய்சேதுபதிக்கு தொண்டை பிரச்சினை என்பதால் ரம்யா கிருஷ்ணனின் ஆச்சரிய வருகை நிகழ்ந்தது. இதற்கு முன்னரே கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்த போது RK தற்காலிகமாக வந்திருந்தார். அப்போது பார்வையாளர்கள் பலரும் அவருடைய ஹோஸ்டிங்கை ரசிக்கவில்லை. கமல் முன்னால் RK எடுபடுவது சிரமம்தான். ஆனால் இந்த முறை நல்ல முன்னேற்றம். தனது கம்பீரமான தோற்றத்தாலும் குரலாலும் போட்டியாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். 

RK பேசும் மாடுலேஷனைக் கவனிக்கும் போது ‘மக்களே இதைச் செய்வீர்களா.. செய்வீர்களா?” என்று ஜெயலலிதா தோ்தல் பிரச்சாரங்களின் போது பேசுவது நினைவிற்கு வருகிறது. நேரடியான கேள்விகளை கறார் பாணியில் வைக்கும் RK, சரியான பதில்களை எதிர்பார்க்கிறார். வராத போது சரியாக சுட்டிக் காட்டுகிறார். பெண் போட்டியாளர்களின் பிரத்யேக பிரச்சினைகளை ஒரு பெண்ணாக RK முன்வைக்கும் போது கூடுதல் அழுத்தம் பெறுகிறது.

‘Am a man..’  என்று தொடர்ந்து கத்திய ஜேசனின் ஆக்ரோஷத்தை தானும் அதே மாதிரி வெளிப்படுத்தியது ஓவர் ஆக்ட் மாதிரி தெரிந்தாலும் அதுவே சரியான பாணி என்று தோன்றுகிறது. ஒருவேளை விஜய் சேதுபதி இருந்து இந்தப் பிரச்சினையைப் பேசியிருந்தால் ஜேசன் உடனே ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டிருப்பாரோ?

கறாரான முறையில் பேசினாலும்  இலகுத்தன்மை RK-விடம் இல்லை. நகைச்சுவையின் மூலம் போட்டியாளரின் தவறுகளை சுட்டிக் காட்டும் திறமை இல்லை. “ஹாண்டில் பண்ணத் தெரியாததாலதான் ஹாண்டிலை உடைச்சீங்களா?” என்று அவினாஷிடம் கேட்ட கேள்வி சுவாரசியமானது என்றாலும் அது பிக் பாஸ் டீமால் தரப்பட்டதோ என்று தோன்றுகிறது. தான் சொதப்பி விடுவோமே என்கிற மெல்லிய பதட்டம் தென்படுகிறது. 

நகைச்சுவையாக பேசாவிட்டாலும் RK பயங்கரமான நகைச்சுவைத்தன்மை உடையவர் என்பது பலமுறை வெளிப்பட்டிருக்கிறது. பீறிட்டு சிரிக்க வேண்டிய தருணங்களில் பொதுவாக பிரபலங்கள் தங்களை அடக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் RK இதில் வித்தியாசமானவர். ஒரு காமெடி ஷோவில் KPY பாலா, தொடர்ந்து செய்த ரகளைகளுக்கு சிரிப்பு தாங்காமல் ஏறத்தாழ இருக்கையில் இருந்தே விழுந்து விட்டார். பிக் பாஸ் ஷோவிலும் வினோத் பாபு செய்த காமெடிகளுக்கு RK-வால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இதுவொரு சுவாரசியமான அம்சம். 

விஜய்சேதுபதியை விடவும் RK சிறப்பான ஹோஸ்ட்டா என்றால் உறுதியாக சொல்ல முடியவில்லை. தன்னுடைய கறார்த்தனத்தோடு சமயோசிமான நகைச்சுவை, லாஜிக்கான கேள்விகளின் மூலம் மடக்குவது போன்றவற்றைக் கூட்டிக் கொண்டால் RK ஜொலிப்பார் என்று தோன்றுகிறது. 

‘நாங்கதான் உண்மையான சர்வைவர்ஸ்’ - அலப்பறை செய்த ரெட் டீம்

வழக்கம் போலவே இந்த வாரமும் வீக்லி டாஸ்க்தான் ஹைலைட். ‘Survival Battle’ என்று இந்த டாஸ்க்கிற்கு தலைப்பிட்டது, பிக் பாஸ் ஆட்டத்தின் மையக்கருத்தாக்கத்தின் பிரதிபலிப்பு. வீடு இரண்டு அணியாகப் பிரிக்கப்பட்டது. நீலம் மற்றும் சிவப்பு. டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பே இரு அணிகளும் அடித்துக் கொண்டார்கள். உணவு பதுக்கல்கள் நடந்தன. 

ஒரு சமூகம் இனத்தால், மொழியால், நிறத்தால், மதத்தால் பிரியும் போது அவர்களிடையே தன்னிச்சையான பகைமை உருவாகி விடுகிறது. உதாரணத்திற்கு இந்தியர்களான நாம், ஓர் அண்டை நாட்டின் பெயர் சொல்லப்படும் போதே உஷ்ணமாகி விடுகிறோம். கண்ணுக்குத் தெரியாத நபர்களின் மீது எரிச்சல் வந்து விடுகிறது. இதற்குப் பின்னால் ஏராளமான அரசியல் காரணங்களும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் இருக்கின்றன.  ஒரு சிறிய கலவரம் ஏற்பட்டால் கூட அது உடனே பற்றிக் கொண்டு உயிர்பலிகள் நிகழ்கின்றன. அதுவரை பழகிய பக்கத்து வீட்டுக்காரரின் மீது தன்னிச்சையான வன்மம் வந்து விடுகிறது. 

பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்ததும் ஏறத்தாழ இதுவே. நாம் ஒரு கேம் ஷோவிற்குள் இருக்கிறோம், இந்த ஆட்டத்தின் சூழ்ச்சிகளுக்கு எளிதில் பலியாகிறோம் என்கிற தன்னுணர்வு எந்தவொரு போட்டியாளர்களிடமும் இல்லை. நிதானமான தருணங்களில் சிலர் மட்டுமே இதை உணர்கிறார்கள். அது வரை நண்பர்களாக பழகிக் கொண்டிருந்தவர்கள், அணியாகப் பிரிந்தவுடன் பரம்பரை விரோதிகள் போல மோதிக் கொள்கிறார்கள். 

BB Tamil 10
BB Tamil 10

வாசனின் ‘இரை கவர்தல்’ அட்டகாசங்கள்

இந்த சர்வைவல் போரில் பெரும்பாலான டாஸ்க்குகளில் நீல அணி வெற்றி பெற்றாலும்  உண்மையாக ஸ்கோர் செய்தது சிவப்பு அணிதான். குறிப்பாக ‘நிரை கவர்தல்’ என்கிற பெயரில் இரை கவர்ந்த வாசனின் லூட்டிகளை எதிரணியால் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். 

‘நம்ம டீம் சமைச்சு சாப்பிட முடியாதுன்னுதானே பிக் பாஸ் சொல்றாரு. அவங்க சமைச்சத எடுத்து சாப்பிடுவோம், என்ன இப்ப?” என்று விதிகளுக்குள் இருந்த ஓட்டையை முதலில் கண்டுபிடித்தவர் வாசன்தான். இத்தகைய விதிமீறலை முனியம்மாள்தான் வழக்கமாக செய்வார். இந்த வாரத்தில் இத்தகைய அழிச்சாட்டியங்களை அதிக அளவில் ஜாலியாக செய்தது வாசன்தான். ‘கேம் புரியல’ என்று சொல்லப்பட்டவர், வைரம் திருடிய டாஸ்க்கில் வென்றது, ஒரு முறை மட்டுமே நிகழ்ந்த அதிசயமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த வாரத்திலேயே ஆட்டத்தின் சூட்சுமங்களை தன்னால் புரிந்து கொண்டு  ஜாலியாக ஆடி பார்வையாளர்களைக் கவர்ந்தது சிறப்பு. 

வாசனின் ‘இரை கவர்தல்’ அட்டகாசத்தைப் பார்த்தவுடன்தான் சிவப்பு அணியில் உள்ள மற்றவர்களுக்கும் துணிச்சல் வந்தது. ‘இவரை எப்படி சமாளிக்கறதுன்னே தெரியல’ என்று நீல அணியே அலுத்துக் கொள்ளுமளவிற்கு வாசனின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. 

வாசனும் மற்றவர்களும் உணவு எடுத்தது விதி மீறல் இல்லையா என்றால் ஆம். ஆனால் சர்வைவலுக்கான போட்டியில் நாகரிக உலகின் விதிகள் செல்லுபடியாகாது. ‘பசி வந்தால் பத்தும் பறக்கும்’ என்கிற பழமொழி போல பசிக்கு முன்னால் எந்தவொரு விதியும் பறந்து விடும். 

குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தருவதை விடவும், குற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன என்கிற காரணங்களைக் கண்டுபிடிப்பதும் அவற்றை சரி செய்வதுமே உண்மையான சமூக மாற்றம். பசுமைப் பிரதேசங்களில் இருப்பவர்கள் செல்வந்தவர்களாகவும் வறண்ட பிரதேசங்களில் இருப்பவர்கள் வறுமையானவர்களாகவும் இருப்பது நில அமைப்பால் விளையும் கொடுமை. 

உணவு விளைவிக்க முடியாத பஞ்ச சூழல்களில் இருப்பவர்கள், வளமையானவர்களிடம் இருந்து கவர்வது இயல்பாக உருவாகிய விதிமீறல். இந்த நோக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே ‘குற்றப் பரம்பரை’ என்று முத்திரை குத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். இதற்காகவே பிரத்யேகமான சட்டங்கள் கடுமையாக உருவாக்கப்பட்டன. வட இந்தியாவில் துவங்கிய இந்தக் கொடுமை தென்னிந்தியாவிற்கும் பரவியது. 

பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த உணவுப் போராட்டத்தை இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே கலகங்களை உருவாக்கும் முனியம்மாள், பசி தாங்க முடியாமல் உணவுப் பறிமுதல்களில் ஈடுபட்டார். அவை தடுக்கப்படும் போது சுயபச்சாதாபத்தால் தனிமையில் அழுதார். 

‘உழைச்சு சாப்பிடுங்கடா.. திருடாதீங்க’- வினோத்தின் கோபம்

ஒருவரின் உணவு, உடைமை, உறக்கம் போன்றவற்றை பறித்தால் என்னவெல்லாம் கலகம் நிகழும் என்கிற நோக்கில்தான் இந்த டாஸ்க் உருவாக்கப்பட்டிருப்பது வெளிப்படை. ஆகவே எது நிகழ வேண்டுமோ, அதுவே நிகழ்ந்தது. நீல அணியின் தலைவரான வினோத், ‘இரை கவர்தல்’ பிரச்சினையை மிக மோசமாக கையாண்டார். எப்போதுமே நிதானமாகவும் தர்க்கபூர்வமாகவும் அணுகக்கூடிய வினோத், எதிரணியின் அட்டகாசங்களைக் கண்டு தன் இயல்பை இழந்தார். அவருடைய இன்னொரு பக்கம் வெளிப்பட்டது. ‘உழைச்சு சம்பாதீங்கடா.. திருடிச் சாப்பிடாதீங்க’ என்கிற கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார். இது வாசனை தனிப்பட்ட அளவில் காயப்படுத்தியது. ‘திரும்பத் திரும்ப திருடன்னு சொல்றாங்க. வலிக்குது’ என்று குறும்புகளுக்கு இடையே வாசன் வேதனைப்பட்டது பரிதாபம். 

‘எங்களுக்கு ஏதாச்சும் வேலை செய்ங்க. அப்புறம் நாங்க உணவு தரோம்’ என்று அன்சர் சொன்ன யோசனை சரியானது. இதன் மூலம் எதிரணி பசியில் இருக்கத் தேவையில்லை. ஆனால் சிவப்பு அணி இதை ஈகோ பிரச்சினையாக எடுத்துக் கொண்டு மறுத்தது தவறான அணுகுமுறை. ஆட்டத்தில் தோற்று அடிப்படை வசதிகளை இழந்தவர்கள், எதையாவது ஈடுகட்டித்தான் அவற்றை பெற முடியும். 

“நாம டாஸ்க்ல ஜெயிச்சோம், சரி. ஆனா எதிரணியை எப்படி ஹாண்டில் பண்ணோம்ன்னு வீக்கெண்ட்ல கேப்பாங்களே. என்ன பதில் சொல்லப் போறோம்?” என்று நீல அணியினர் தங்களுக்குள் பேசிக் கொண்டதில் இருந்தே அவர்களின் தோல்வியை அவர்களே உணர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது.  வார இறுதி கேள்விகளின் மீது ஒட்டுமொத்தமாக லீடர் வினோத் பாபுவை கை காட்டியது அநியாயம். ஒட்டுமொத்த அணியும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். 

‘ஜெயிச்சு சம்பாதிச்சது நாங்க.. ஆனா சாப்பிட்டதெல்லாம் அவங்க’ என்று வினோத் காமெடியாகச் சொன்னதைப் போல, நீல அணி டாஸ்க்கில் வெற்றி பெற்றாலும் அதன் மூலம் கிடைத்த ஆதாயங்களை பாதுகாப்பதற்குள் திணறிப் போனார்கள். பெட்ரூம் வசதியையும் இழந்து கார்டன் ஏரியாவில் படுத்த சிவப்பு அணி “நல்லா சாப்பிட்டு உள்ளே நிம்மதியா தூங்கற அவங்க சர்வைவர்களா… கிடைச்சத சாப்பிட்டு வெளில தூங்கற நாங்க சர்வைவர்களா?’ என்று கேட்ட கேள்வி நியாயமானது. 

BB Tamil 10
BB Tamil 10

ஜேசனின் ‘துரந்தர்’ ஆட்ட பாணி ஜெயித்ததா?

ஆரம்பத்தில் சிவப்பு அணியில் இருந்த ஜேசன், அவினாஷின் தலைமை பிடிக்காத காரணத்தினால் அங்கிருந்து வெளியேறி நீல அணியில் சேர்ந்தார். மட்டன், சிக்கன் உணவுகளை ருசித்த பிறகு, ஆள் பற்றாக்குறை காரணமாக மீண்டும் சிவப்பு அணிக்குச் சென்றார். பிறகு மீ்ண்டும் குழப்பம். வினோத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓர் உண்மையை பொதுவில் வெளியிட்டார். 

‘எங்களின் ஆளாகவே இருந்து கொண்டு சிவப்பு அணிக்குச் சென்று ஆடு’ என்று வினோத் முன்பே ஒரு டீல் பேசினார். நானும் அதை ஒப்புக் கொண்டேன்’ என்கிற உண்மையை ஜேசன் சொன்னவுடன் இரு அணிக்குமே அதிர்ச்சி. ‘இதைத்தான் உழைச்சு ஆடி ஜெயிச்சோம்ன்னு பீத்திக்கிட்டீங்களா?” என்று சிவப்பு அணி கேள்வி கேட்க “எங்க கிட்டயே இதைச் சொல்லலையே” என்று நீல அணியினர் வருத்தப்பட ரகளைகள் ஆரம்பம். 


“நீ இப்படி மாத்தி மாத்தி ஆடறதால உன் மேல இருக்கற நம்பத்தன்மை போயிடும். மக்கள் பார்க்கறாங்க” என்று ஜேசனிடம் அப்போதே எச்சரித்தார் பிருத்வி. கடைசியில் அப்படித்தான் ஆனது. தன்னையொரு மாஸ்டர் மைண்ட் என்று நம்பிக் கொண்டு ஜேசன் ஆடிய ‘டபுள் கிராஸ்’ ஆட்டம், அவருக்கே வினையாக வந்தது. என்ன பிரச்சினை வந்திருந்தாலும், டாஸ்க் முடியும் வரை வினோத்திடம் போட்ட டீலை அவர் வெளியில் சொல்லியிருக்கக்கூடாது. அதுதான் விசுவாசமான உளவாளிக்கான அடையாளம். இப்படி இரு அணிகளையும் குழப்பி அந்தக் குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைத்த ஜேசனின் அணுகுமுறை தவறானது. 


ஜேசனுடனான டீலை தங்களின் சொந்த அணியிடமே சொல்லாமல் இருந்தது வினோத்தின் சரியான அணுகுமுறை. ஏனெனில் அங்குள்ள கறுப்பு ஆடுகளின் மூலம் இந்த ரகசியம் வெளிப்பட்டு விடலாம் என்று அவர் நினைத்தது சரியானது. ஓர் அணி இப்படிப்பட்ட விஷயங்களில் தங்களின் தலைவரை முழுமையாக நம்ப வேண்டும். அனைத்து ரகசியங்களும் பகிரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. எப்படியோ, தன்னையொரு ‘துரந்தராக’ நினைத்துக் கொண்ட ஜேசனுக்கு கடைசியில் குழப்பவாதி பட்டம்தான் கிடைத்தது. 

முனியம்மாள் - ஜேசன் மோதல் விவகாரம்

மற்றவர்களை டிரிக்கர் செய்வதில் முனியம்மாளுக்கு ஆர்வம் அதிகம் என்பது நாம் எப்போதும் பார்த்ததுதான். அன்சரும் முனியும் நெருக்கமான நண்பர்கள் என்ற போதிலும், அன்சர் லீடரான சமயத்தில் ‘உன்னோட கோபமான முகத்தை நான் வெளிப்படுத்துவேன்’ என்று சபதம் ஏற்றார் முனி. 

இதே போல்தான் ஜேசனின் விவகாரத்திலும் நடந்தது. ‘இருக்கிற கட்சி மேடைல இருந்தே எதிரணிக்குத் தாவும் தைரியம் எனக்கு ஒருவனுக்குத்தான் இருக்கிறது’ என்கிற வடிவேலு காமெடி போல ‘இந்த டீம்ல எனக்கு மரியாதை இல்ல. நான் எதிர் டீமுக்கு போறேன்’ என்று தாவியவர் ஜேசன். 

பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ஜேசனிடம் வழக்கம் போல் ஒரண்டை இழுத்தார் முனி. ‘எங்க டீம்ல மரியாதை இல்லைன்னு போயிட்டு இங்க வந்து பாத்திரம் கழுவிட்டு இருக்கீங்க?” என்று முனி வம்பிழுக்க, “வேலை செய்யறதுல அசிங்கம் ஒண்ணுமில்ல’ என்று சரியாக பதில் அளித்துக் கொண்டிருந்த ஜேசன், ஒரு கட்டத்தில் நாக்கை துருத்தி ‘அவ்ளதான் மரியாதை’ என்று கோபமடைந்தது ஏன் என்று தெரியவில்லை. முனியம்மாள் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டு கோபப்பட்டார் என்பது கூட ஓகே. ஆனால் அதற்குப் பிறகு ‘am a man’ என்று நெஞ்சில் தட்டிக் கொண்டு கூவினார் என்பது புரியவில்லை. இப்படி ஜேசன் கூவுவது முதன்முறையல்ல. 

தானொரு ஆண் என்கிற superiority complex ஜேசனிடம் இருக்கிறது. இந்த சீசனில் நானே அதிபுத்திசாலி என்கிற எண்ணமும் ஜேசனிடம் இருக்கிறது. அவர் ஒரு நல்ல போட்டியாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உயர்வு மனப்பான்மையால் ஏற்படும் பிரச்சினைகள் அவரை பலவீனமானவராக காட்டுகிறது. 

BB Tamil 10
BB Tamil 10

சண்டையின் போது கோபப்பட்டதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வார இறுதியில் தொகுப்பாளர் இதை சுட்டிக் காட்டுகிற போதும், ஈகோ காரணமாக ஏற்றுக் கொள்ளாமல் ‘நான் ஆட்டத்திலிருந்து வெளியேறுகிறேன்’ என்று அறிவிப்பது முட்டாள்தனமானது. ‘எனக்காக நான்தான் நிக்கணும்’ என்று ஜேசன் நினைப்பது சரிதான். ஆனால் அது சரியான நிலைப்பாடா என்று யோசித்திருக்க வேண்டும். ‘மக்களைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்ல’ என்று உணர்ச்சி வேகத்தில் சொல்வதெல்லாம் அறிவீனம். 

வாசன் மற்றும் அவினாஷின் ஆக்ரோஷமான கோபத்தை RK கண்டித்தது சரியான செயல். நல்ல வேளையாக வாசன் பிறகு ஜாலியான குறும்புகள் செய்ததால் தப்பித்தார். முகேஷிடம் செய்த அதே மூர்க்கத்தனத்தை மீண்டும் செய்திருந்தால் பார்வையாளர்கள் ரசித்திருக்க மாட்டார்கள். எப்படியோ முனியும் ஜேசனும் இறுதியில் தங்கள் தரப்பு நியாயங்களை பேசி சமாதானம் ஆனது நல்ல விஷயம். இந்த விவகாரத்தில் ‘வீட்டு வேலை செய்கிறவர்களை’ முனி தவறாகப் பேசினார் என்கிற ஜேசனின் புரிதல் தவறானது. அப்படி அவர் நினைப்பதால்தான் கோபம் வருகிறது என்பது இதிலுள்ள லாஜிக். 

முத்தழகி, LP, அஷ்மிதா, அக்ஷிதா போன்ற சுமாரான போட்டியாளர்கள் உள்ளேயிருக்கும் போது ஷமா போன்ற திறமைசாலிகள் வெளியே அனுப்பப்படுவது எவிக்ஷன் பிராசஸஸின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. 

ஷமாவின் எவிக்ஷன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User