அம்மா குடிநீர்: ``தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தவெக அரசு முடக்கி வைத்திருக்கிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், ``சென்னை மாநகர மக்களுக்குச் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்கும் உயரிய நோக்கில், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தற்போது செயல்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக நாளிதழ்களில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்நிலையங்கள் முடங்கியிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களின் அன்றாடக் குடிநீர்த் தேவைக்காகத் தனியார் நிறுவனங்களிடம் ரூ.40 வரை கொடுத்து ஒரு கேன் தண்ணீரை வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஏற்கெனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி வழங்குவதாக அறிவித்துவிட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் பாலிஷ் செய்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார்களும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் தோல்வியடைந்துள்ள தவெக அரசு, தற்போது இலவசக் குடிநீர் வழங்கி வந்த திட்டத்தையும் முடக்கி, மக்கள் தனியாரிடம் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலையை உருவாக்கியிருப்பது, தனியார் தாராளமயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசின் நோக்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது?
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதிலேயே மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் சூழலில், அவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முடங்கச் செய்திருப்பது தவெக அரசின் மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்து, அவற்றைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)