அலங்காநல்லூரில் சட்டவிரோதமாக செயல்படுகிறதா குவாரி? எஸ்பி ஆய்வு!

Oct 09, 2026 - 10:00
0
அலங்காநல்லூரில் சட்டவிரோதமாக செயல்படுகிறதா குவாரி? எஸ்பி ஆய்வு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்தக் கல்குவாரியில் இரவு பகலாக வெடி வைத்து பாறையைத் தகர்ப்பதோடு கற்களை வெட்டி எடுக்கின்றனர்.  அதனை லாரிகள் மூலம் கொண்டு செல்ல நீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து பாறைகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக பாதையும் அமைக்கத்திருக்கின்றனர். 

இதனால் நீர் செல்ல சரியான வழித்தடம் இல்லாமல் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து வருவதோடு, இயற்கைக்குச் சொந்தமான மலைகளை தனிநபர்களின் சுயஇலாபத்திற்காக சிதைப்பதும் வெட்டி எடுத்துச்செல்வதும் தண்டனைக்குரிய செயலாகும்.

குவாரி உரிமையாளர்களின் இச்சட்டவிரோத கனிமவள கொள்ளையின் காரணமாக அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கும் அவலநிலையை உண்டாக்கியிருக்கிறது.

எஸ்பி தேவநாதன் ஆய்வு

இத்தொடர் செயலை தட்டிக்கேட்ட பொதுமக்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் கொலை மிரட்டல் விடப்படுகிறது. இக்கல்குவாரி குறித்த செய்தி நமது விகடன் பத்திரிகையில் இரண்டுமுறை வெளியானது. இந்நிலையில் திடீரென மதுரை மாவட்ட எஸ்.பி. தேவநாதன் கல்குவாரிக்கு நேரில் சென்று, வெட்டி எடுத்த கற்களையும், வெட்டப்பட்ட மலைப்பகுதிகளையும் ஆய்வு செய்தார். 

எஸ்.பி. ஆய்வுக்கு வருவதை அறிந்த கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், எஸ்.பி. வருவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறியதாக சொல்லபடுகிறது. 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த எஸ்.பி. தேவநாதன், "இப்பகுதியில் இரவு பகலாக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரி பற்றிய புகார் எழுந்ததால் இங்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்து கல்குவாரி உரிமையாளர்களின் ஆவணங்களையும், உள்ளூர் காவல் நிலையத்தில் குவாரி குறித்த ஆவணங்களையும் சரிபார்க்க வந்ததாகவும் கூறினார். 

அதனைத் தொடர்ந்து இதுபோன்று சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளைப் பற்றிய தகவல்களை உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமோ, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, காவல்துறை எஸ்.பி அலுவலகத்திலோ, என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கோ, 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார். 

ஆவணங்களை சரிபார்க்க வந்ததாக கூறிய மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வுக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களோ பணியாளர்களோ, வருவாய்த் துறையினரோ இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், கனிமவளத்துறை அமைச்சர் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளின் மீது விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என கூறியதையடுத்து, எஸ்.பி. ஆய்வு செய்த குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறதா? என கனிமவளத்துறை தலைமையிலான குழு ஓர் ஆய்வினை நடத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User