அதிமுக-வின் 2வது உறுப்பினர் குடும்பத்துக்கு சீட் இல்லை! - ஆயிரம் விளக்கு வளர்மதிக்கு வந்தது எப்படி?

Mar 31, 2026 - 17:30
 0
அதிமுக-வின் 2வது உறுப்பினர் குடும்பத்துக்கு சீட் இல்லை! - ஆயிரம் விளக்கு வளர்மதிக்கு வந்தது எப்படி?

மூன்று முறை மு.க.ஸ்டாலின் நின்று வென்ற தொகுதி என்பதால், சென்னை ஆயிரம் விளக்கு ஒரு நேரத்தில் விஐபி தொகுதியாகாப் பார்க்கப்பட்டது.

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பிறகு ஸ்டாலின் கொளத்தூருக்கு மாறி விட்டார். ஆனால் ஸ்டாலினை இதே ஆயிரம் விளக்கில் 1991ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரான தேர்தலில், தோற்கடித்தவர் கே.ஏ.கே என அழைக்கப்பட்ட கே.ஏ கிருஷ்ணசாமி.

அண்ணாவின் நெருங்கிய நண்பராகவும், தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்த கே.ஏ மதியழகனின் தம்பி இவர். மதியழகனைப் பின் தொடர்ந்து அரசியலுக்கு வந்த கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கி கட்சியின் முதல் உறுப்பினர் கார்டைப் பெற்ற போது அதற்கடுத்த அதாவது இரண்டாவது உறுப்பினரானார். அதிமுகவின் முதல் அமைப்ப்புச் செயலாளராகவும் இவரை நியமித்தார் எம்.ஜி.ஆர்.

பிறகு அதிமுகவின் முதல் அதிகாரபூர்வ பத்திரியகையாக வெளிவந்த 'தென்னகம்' பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர்.க்கு புரட்சித் தலைவர் பட்டத்தைச் சூட்டியது இவர்தான்.

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் நிற்பதற்கு முன்பே மூன்று முறை வென்றவர். எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

m k stalin

ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக பொறுப்பு வகித்தார். சட்ட இலாகாவைக் கவனித்து வந்தார். இத்தகைய பாரம்பரிய பின்னணியைக் கொண்ட கே ஏ கிருஷ்ணசாமியின் வீடு ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வரும் கோபாலபுரத்தில்தான் இருக்கிறது.

இந்தப் பின்னணியில் இந்த தேர்தலில் அதிமுகவில் ஆயிரம் விளக்கு தொகுதியைக் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார் கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே முகில். கட்சியில் தற்சமயம் இளைஞரணிப் பொறுப்பிலிருக்கிறார்.

Valarmathi

இவருக்கு சீட் தர எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம்தானாம்.

ஆனால் 'எனக்கு வயசாயிடுச்சு. இன்னொரு தேர்தல்லலாம் போட்டியிட முடியுமா தெரியலை.. அதனால இந்த ஒரு முறை எனக்கு சீட்டைக் கொடுத்துடுங்க என அடம்பிடித்து தொகுதியை வாங்கி விட்டாராம் வளர்மதி.

எனவே, 'திரும்பவும் நம்ம ஆட்சிதான். களம் நமக்குச் சாதகமாகவே இருக்கு. அதனால் தேர்தல் முடியட்டும் செய்ய‌ வேண்டியதைச் செய்திடலாம்' என முகிலுக்கு மேலிடத்திலிருந்து சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0