திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா... உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

Oct 18, 2026 - 09:00
0
திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா... உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்... அந்த நேரத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம பலரும் பதறிப் போயிடுவோம். “எதுக்காக என்னைக் கைது பண்றாங்க?”, “எங்கே கூட்டிட்டுப் போறாங்க?”, “வீட்டுக்குத் தகவல் சொன்னாங்களா?”ன்னு அடுத்தடுத்து பல கேள்விகள் வரும்.

முதலில் ஒரு சின்ன விளக்கம்...

கைது என்பது தண்டனை கிடையாது. ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவு செய்துவிட்டது என்பதற்கான அடையாளமும் கிடையாது. சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தும் சட்ட நடைமுறையே கைது. .

பொதுவாக போலீஸ்தான் கைது செய்வார்கள். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தனிநபர்களுக்கும், நீதிபதிக்கும் கூட சட்டப்படி கைது செய்யும் அதிகாரம் உள்ளது.

கைது பண்ணிட்டாங்க... இனி போலீஸ் என்ன வேணும்னாலும் பண்ணலாமா?

நிச்சயமாக இல்லை!

கைது செய்யப்பட்ட பிறகு உங்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் முடிஞ்சிடாது. இந்திய அரசமைப்புச் சட்டமும், தற்போது நடைமுறையில் இருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS)-ம் கைது செய்யப்பட்டவர்களுக்கு பல முக்கியமான பாதுகாப்புகளை வழங்குகின்றன.

அதில் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியமான உரிமைகள் இதோ...

1. “எதுக்காக என்னைக் கைது பண்றீங்க?” – காரணத்தைத் தெரிஞ்சுக்கிற உரிமை!

“என்ன குற்றத்துக்காக என்னைக் கைது செய்கிறீர்கள்?” என்று கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 22(1) மற்றும் BNSS பிரிவு 47, கைது செய்யப்பட்ட நபருக்கு அவர் கைது செய்யப்பட்டதற்கான முழுமையான காரணங்களையும் (grounds of arrest)தெரிவிக்க வேண்டும் என்பதை உறுதி செய்கின்றன. அதாவது, “உங்கள் மீது ஒரு வழக்கு இருக்கிறது” என்று பொதுவாகச் சொல்வது மட்டும் போதாது; எந்தக் குற்றம் அல்லது எந்தக் காரணத்தின் அடிப்படையில் கைது செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும், ஜாமீனில் விடக்கூடிய (bailable) குற்றமாக இருந்தால், கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கான உரிமை இருப்பதையும் போலீஸ் தெரிவிக்க வேண்டும்.

AI created image

2. வக்கீலைச் சந்தித்துப் பேசுற உரிமை!

“கைது பண்ணிட்டாங்க... இனிமேல் வக்கீலைப் பார்க்க முடியாது”ன்னு நினைக்க வேண்டாம்.

கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக, வழக்கறிஞரைச் சந்திக்கக்கூடாது என்று சொல்ல முடியாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 22(1) மற்றும் BNSS பிரிவு 38, கைது செய்யப்பட்ட நபருக்கு தனது விருப்பப்படி வழக்கறிஞரைச் சந்தித்து சட்ட ஆலோசனை பெறுவதற்கான உரிமையை வழங்குகின்றன.குறிப்பாக, போலீஸ் விசாரணையின்போது வழக்கறிஞரைச் சந்திக்கலாம்; ஆனால், விசாரணை முழுவதும் வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும் என்ற உரிமையை BNSS பிரிவு 38 வழங்கவில்லை

சொந்தமாக வழக்கறிஞரை நியமிக்க வசதி இல்லாதவர்களுக்கு, அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 39A அடிப்படையில் இலவச சட்ட உதவி (Free Legal Aid) பெறும் உரிமையும் சட்டப்பூர்வ ஏற்பாடுகளின் மூலம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவல்" அல்லது "ரிமாண்ட்” கோரப்படும் நிலையிலும், வழக்கறிஞர் இல்லாதவர்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளது.

3. “நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்” என்ற தகவல் வீட்டுக்குத் தெரியுமா?

தெரிவிக்க வேண்டும்!

BNSS பிரிவு 48-ன்படி, ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரின் உறவினர்‌ அல்லது நண்பருக்கு அவர் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும், இந்த உரிமை இருப்பதை கைது செய்யப்பட்ட நபருக்கும் போலீஸ் தெரிவிக்க வேண்டும்.

4. 24 மணி நேரத்துக்குள் நீதித்துறை நடுவர் (Magistrate) முன் ஆஜர்படுத்தும் உரிமை!

கைது பண்ணிட்டாங்கன்னு சொல்லி, போலீஸ் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பை மீறி ஒருவரைக் காவலில் வைத்திருக்க முடியாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 22(2) மற்றும் BNSS பிரிவுகள் 57 மற்றும் 58 இதற்கான முக்கியமான சட்டப் பாதுகாப்பை வழங்குகின்றன.

Ai created image

கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து நடுவர் (Magistrate) நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய பயண நேரத்தைத் தவிர்த்து, 24 மணி நேரத்துக்குள் அருகிலுள்ள நீதித்துறை நடுவர் (Magistrate) முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும். அதற்குப் பிறகும் காவலில் வைத்திருக்க வேண்டுமெனில், சட்டப்படி நீதிமன்றத்தின் உத்தரவு தேவைப்படும்.

5. உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமை!

கைது செய்யப்பட்டாலும், ஒருவருடைய மனித உரிமைகள் அங்கேயே முடிஞ்சிடாது.

“காவலில் இருக்கிறார்” என்பதற்காக அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அர்த்தம் கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21, ஒவ்வொருவரின் வாழ்வு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

மேலும், BNSS பிரிவு 43-ன் கீழ், கைது செய்யும்போது போலீஸ் சட்டப்படி செயல்பட வேண்டும்.

கைது செய்யப்படுபவர் கைது நடவடிக்கையை வலுக்கட்டாயமாக எதிர்த்தாலோ அல்லது தப்பிச் செல்ல முயன்றாலோ, கைது செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை போலீஸ் மேற்கொள்ளலாம்.

Ai created image

அதேபோல், BNSS பிரிவு 56, காவலில் உள்ள நபரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பது காவலில் வைக்கும் அதிகாரியின் கடமை என்பதை வலியுறுத்துகிறது.

மேலும், BNSS பிரிவு 53-ன் கீழ், கைது செய்யப்பட்ட நபருக்கு மருத்துவப் பரிசோதனை தொடர்பான சட்டப் பாதுகாப்பும் உள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் உடலில் காயங்கள் அல்லது வன்முறையின் தடயங்கள் இருந்தால், அவை பதிவு செய்யப்படுவதும் முக்கியமான பாதுகாப்பாகும்.

நீதிமன்றம் என்ன சொல்கிறது?

D.K. Basu v. State of West Bengal (1997) 1 SCC 416 என்ற முக்கியமான வழக்கில், கைது மற்றும் காவலில் இருப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் பல முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியது.

அதன்படி, அரெஸ்ட் மெமோ (Arrest Memo) தயாரித்தல், காவல் அதிகாரிகளின் அடையாளத்தைத் தெளிவாகக் காட்டுதல், உறவினர் அல்லது நண்பருக்குத் தகவல் தெரிவிப்பது, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தப் பாதுகாப்புகளில் பல தற்போது BNSS-ல் சட்டப்பூர்வமாகவும் இடம்பெற்றுள்ளன

இந்த வழிகாட்டுதல்களின் நோக்கம், கைது செய்யப்பட்ட நபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித கண்ணியம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது...

கைது என்பது ஒரு நபரின் சுதந்திரத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தலாம்... ஆனால், அவருடைய அடிப்படை மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பறித்துவிடாது .

அந்த உரிமைகள் என்ன என்பதை அறிந்திருப்பதே ஒவ்வொருவருக்கும் அவசியமான சட்ட விழிப்புணர்வு!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User