தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடம்: அரசியல் கட்சிகளின் விமர்சனமும் தவெக அரசின் விளக்கமும்!

May 11, 2026 - 09:02
0
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடம்: அரசியல் கட்சிகளின் விமர்சனமும் தவெக அரசின் விளக்கமும்!

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு பதவியேற்ற நிகழ்வில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையாக வெடித்தது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், வழக்கமான நடைமுறைக்கு மாறாக, வந்தே மாதரம் முதலாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவுமே ஒலிக்கப்பட்டது.

மாலையில் நடைபெற்ற தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்விலும் இதே வரிசை பின்பற்றப்பட்டது. இது தமிழ்நாட்டின் நீண்டகால அரசு மரபுகளை மீறிய செயல் என விமர்சனங்கள் எழுந்தன.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த மாற்றத்திற்குத் தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளியது மரபு மீறிய செயல். இதற்கு ஆளுநர் மாளிகையின் அழுத்தமே காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மதிமுக தலைவர் வைகோ, தமிழ்நாட்டின் மரபை மீறி 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் அளித்ததை ஏற்க முடியாது. அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்திலேயே பாடப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தவெக-வின் கூட்டணியில் இருக்கும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், இது அதிகாரிகளின் கவனக்குறைவா அல்லது ஆளுநரை மகிழ்விக்கச் செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஐஎம், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையைச் சிதைக்கக் கூடாது என்றும், இனிவரும் காலங்களில் பழைய மரபையே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தன் எக்ஸ் பக்கத்தில், `` 'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.

TVK ஆதவ் அர்ஜுனா
TVK ஆதவ் அர்ஜுனா

இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும்.

அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User