மாணவிகள், ஆசிரியைகளின் படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்து விற்பனை - பாலிடெக்னிக் மாணவர் மீது வழக்கு!

Oct 09, 2026 - 08:30
0
மாணவிகள், ஆசிரியைகளின் படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்து விற்பனை -
பாலிடெக்னிக் மாணவர் மீது வழக்கு!

கேரள மாநிலம் புனலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து டெலிகிராம் குழுக்கள் மற்றும் ஆபாச வலைத்தளங்களுக்கு விற்றதாக, அதே கல்லூரியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ மாணவர் அச்யுத் மீது புனலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்லூரி ஏ.பி.வி.பி அமைப்பின் துணைத் தலைவராக இருந்த அச்யுத், மார்பிங் செய்வதில் வல்லவராக இருந்தாலும் படிப்பில் பின்தங்கியவர் என்று கூறப்படுகிறது. ​கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி ஆண்டு விழாவின் போது மதிய வேளையில், அச்யுத்தின் செல்போனை வாங்கிய சக மாணவர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது செல்போன் கேலரியை சோதித்தபோது, சக மாணவிகளின் முகங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டிருந்த படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மார்பிங் புகார்

இந்த விவகாரம் உடனே மற்ற மாணவர்களுக்கும் தெரியவந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

​புகாரைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அச்யுத்தை அழைத்து அவரது செல்போனை ஆய்வு செய்ததில் குற்றச்சாட்டு உறுதியானது. உடனடியாக அவரது பெற்றோரை கல்லூரிக்கு வரவழைத்த நிர்வாகம், அவர்கள் முன்னிலையிலேயே அச்யுத்திடம் விசாரணை நடத்தியது. அப்போது மாணவிகள் மட்டுமின்றி, அங்கு முன்பு பணியாற்றிய விரிவுரையாளர்களின் படங்களையும் மார்பிங் செய்து, ஆபாச டெலிகிராம் குழுக்களுக்கு விற்று 'கூகுள் பே'  மூலம் பணம் பெற்றதாக அச்யுத் பெற்றோரின் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரது டெலிகிராம் கணக்கிலும் அதுபோன்ற குழுக்கள் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட மாணவன் அச்யுத்

இதையடுத்து, செவ்வாய்க்கிழமையே கூடிய கல்லூரி கவுன்சில் கூட்டத்தில் அச்யுத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் புனலூர் போலீஸில் புகார் அளித்து மாணவனின் செல்போனையும் ஒப்படைத்தது. பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், படங்களை மார்பிங் செய்து தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அவமானம் விளைவித்தல் ஆகியவற்றுக்காக பி.என்.எஸ் சட்டப்பிரிவுகள் 356, 79 மற்றும் மின்னணு முறையில் ஆபாசப் படங்களைப் பரப்பியதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் அச்யுத் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User