பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; நண்பனுடன் கைதான முன்னாள் ராணுவ வீரர்; கண்ணமங்கலத்தில் நடந்தது என்ன?

Oct 20, 2026 - 23:30
0
பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; நண்பனுடன் கைதான முன்னாள் ராணுவ வீரர்; கண்ணமங்கலத்தில் நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் - வேலூர் இடையிலான வல்லம் டோல்கேட் அருகாமையில் நேற்று இரவு காரை நிறுத்திவிட்டு, அதில் பயணித்த 2 பேர் மது குடித்திருக்கின்றனர்.

போதை தலைக்கேறியதும் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் இடையூறு ஏற்படுத்தியிருக்கின்றனர்.

வேலூரில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தையும் மடக்கி ரகளை செய்திருக்கின்றனர். அப்போது, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் தங்களின் செல்போனில் அவர்களை வீடியோ எடுத்திருக்கின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் ஓட்டுநரையும், நடத்துநரையும் தாக்க முயன்றிருக்கின்றனர். இதையடுத்து, பயணிகள் கீழே இறங்கி வந்து அவர்களைக் கண்டித்திருக்கின்றனர். பின்னர், பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

நண்பனுடன் கைதான முன்னாள் ராணுவ வீரர்
நண்பனுடன் கைதான முன்னாள் ராணுவ வீரர்

இது குறித்து தகவலறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கண்ணமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் அங்கு சென்று மதுபோதையில் அட்டகாசம் செய்த இருவரையும் பிடித்திருக்கிறார்.

கீழ்பள்ளிப்பட்டு கிராமத்திலுள்ள அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வாசுதேவன் (வயது 44), மற்றொருவர் அவரது நண்பன் குமரகுரு (28) எனத் தெரியவந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தகராறு சம்பந்தமாக விசாரித்தபோது, போலீஸாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனால், டென்ஷனான சப்-இன்ஸ்பெக்டர் கவிதா இருவரையும் தாக்கியதால், பதிலுக்கு இருவரும் சேர்ந்து கவிதாவின் முகத்தில் குத்துவிட்டு எட்டி உதைத்து தாக்கியிருக்கின்றனர். இதையடுத்து, இரவு முழுவதும் போலீஸார் தங்கள் பாணியில் இருவரையும் பயங்கரமாக கவனித்திருக்கின்றனர். கவனிப்பு முடிந்த பின்னர் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து இன்று சிறையிலடைத்திருக்கின்றனர்.

சொந்த ஊரில் போஸ்டிங்...

சப்-இன்ஸ்பெக்டர் கவிதாவுக்குச் சொந்த ஊர் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகிலுள்ள கொங்கராம்பட்டு கிராமம்தான். அவர் பிறந்து வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடித்தது எல்லாமே அங்குதான். திருமணமாகிச் சென்றது கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட ரெட்டிப்பாளையம் என்னும் கிராமம். சொந்த ஊரிலேயே போஸ்டிங் வாங்கி வந்துவிட்டதால், தனது சொந்தப் பகையையும் அதிகாரத்தைக் கொண்டு தீர்த்துக்கொள்வதாக கவிதா மீது தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சப்-இன்ஸ்பெக்டர் கவிதா
சப்-இன்ஸ்பெக்டர் கவிதா

இப்போது கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் வாசுதேவனும் கொங்கராம்பட்டு பகுதியில் வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறிவிட்டார். ஏற்கெனவே, எஸ்.ஐ கவிதாவுக்கும் அவர் நன்கு அறிமுகமானவர்தான். ஆனாலும், மதுபோதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றனர்.

அதைக் கேட்டதால்தால் `சீருடையில் இருக்கும் எஸ்.ஐ’ என்றும் பார்க்காமல் கவிதாவைத் தாக்கியிருக்கின்றனர். கவிதா காயமடைந்ததாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம், கண்ணமங்கலம், ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User