’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ - அண்ணாமலை வலியுறுத்தல்!
கோவையில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் கல்வித்திறன் மற்றும் கற்றல் திறன் குறைந்து வருகிறது. குழந்தைகள் அதிக மொழிகளைக் கற்க விரும்புகின்றனர். மத்திய அரசு வெளிநாட்டு மொழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும், மாநில அரசு இந்திய மொழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும் தவறு. இந்தியாவில் 8, 10 வயதுக் குழந்தைகள்கூட இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை
தி.மு.க செய்த தவறுகளைத் தமிழக வெற்றிக் கழக அரசும் செய்து வருகிறது. தி.மு.க ஆட்சியின்போதே அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டனர். த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சிக்கத் தொடங்கியுள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் அடைக்கலம் தேடுகின்றனர். சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்து அழைத்துச் சென்றது ஏன்? காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கலாம். இது பெரிய வழக்கு அல்ல. காவல்துறை எதை நிரூபிக்க முயற்சிக்கிறது? ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல்துறை மாறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதை ஆதரிப்பது அந்தக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். வரம்பு மீறிய பிரசாரங்கள் தமிழகத்தில் இனி எடுபடாது.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது காங்கிரஸ் கட்சி எங்கே இருந்தது? தவறுகள் நடந்திருந்தால் அனைவரும் ஒன்றிணைந்து சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்ப வேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் அமைப்புகளைக் கேலிக்கூத்தாக்கக் கூடாது. எஸ்.ஐ.ஆர் குறித்து கேள்வி எழுப்ப ராகுல் காந்திக்கு முழு உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் செயல்படக் கூடாது. டெல்லி காவல்துறையினர் தலைவர்களைக் கையாளும் விதமும், அவர்களை அலைக்கழிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய அரசு மீது இளைஞர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

அடிப்படை மாற்றங்களை உருவாக்கவும் புதிய தலைவர்களை உருவாக்கவும் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே சிறந்தது. அப்போதுதான் தங்களது சிந்தனைகளையும் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். நாங்கள் அரசியலுக்கு வருவது உறுதி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவருவதில் தெளிவாக இருக்கிறோம். வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின் உரிமை. ராகுல் காந்தி பாஜக மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தால் போதுமானது. அவருடைய தனிப்பட்ட பயணத்தை விமர்சிப்பது தேவையற்றது. தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பதால், அந்த அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)