பெருந்துறை:தாலிக்கொடிக்காக இளம்பெண் துடிதுடிக்க கொலை - செவிலியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்
திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த செவிலியர் உத்ரா பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14- ம் தேதி மாலை திடீரென காணாமல் போனார். பணியை முடித்து விட்டு உத்ரா வீடு திரும்பாததால் பதறிய கணவர் ரஞ்சித், ஊத்துக்குளி காவல்நிலையத்தில் அன்றைய தினமே புகார் அளித்திருந்தார்.

உத்ராவை தேடி வந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகில் உள்ள பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் ஒரு காட்டில், இளம்பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் அழுகிக் கிடப்பதாக, பெருந்துறை காவல்துறையினருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். அருகில் கிடந்த உடைகள் மற்றும் காலணிகளை வைத்து உத்ராவின் உடல் என்பதை உறுதி செய்தனர்.
உத்ரா கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் பணியாற்றி வந்த அதே மருத்துவமனையில் வேலை செய்து வந்த சரவணன் என்ற இளைஞன் உத்ரா அணிந்திருந்த தங்கத்தினாலன தாலிக்கொடியை திருட திட்டமிட்டு பைக்கில் அழைத்துச் சென்று கொலை செய்து விட்டு அபகரித்துச் சென்ற கொடூரத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து பெருந்துறை காவல்துறையினர், " ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்த உத்ரா . திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளனர். உத்ரா பணிபுரிந்த மருத்துவமனையின் சக ஊழியரான 23 வயது சரவணன் பணி நிமித்தமாக டூவீலரில் அவரை அழைத்துச் சென்றுள்ளான். மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவரின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து 4 பவுன் தங்க தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளான். எதுவும் தெரியாதது போல் இயல்பாக இருந்த அவனை விசாரித்து கைது செய்தோம். அவனிடம் இருந்து தங்க நகைகளை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)