Tuticorin Day: ஐவகை நிலம், முத்துக் குளித்தல், உப்பு உற்பத்தி... அகவை 40-ஐ எட்டிய தூத்துக்குடி!

Oct 20, 2026 - 20:30
0
Tuticorin Day: ஐவகை நிலம், முத்துக் குளித்தல், உப்பு உற்பத்தி... அகவை 40-ஐ எட்டிய தூத்துக்குடி!

ஒருங்கிணைந்த திருநெல்வேலி  மாவட்டத்திலிருந்து, 20.10.1986 அன்று அப்போதைய முதல்வர்  எம்.ஜி.ஆர் அவர்களால் தூத்துக்குடி, தனி மாவட்டமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.  

இம்மாவட்டம்.., ’குறிஞ்சி’  (வல்லநாடு - குருமலை), ’முல்லை’ (பாஞ்சாலங்குறிச்சி), ’மருதம்’ (ஸ்ரீவைகுண்டம்), ’நெய்தல்’ (தூத்துக்குடி), ’பாலை’ (தேரிக்குடியிருப்பு) ஆகிய ஐவகை நிலங்களைக் கொண்டுள்ளது. தென் மாவட்டங்களிலேயே.., தரை வழி, நீர் வழி, வான் வழி என, மூவகைப் போக்குவரத்து வசதிகளையும் பெற்றுள்ளது.  

விவசாயம், மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி, தீப்பெட்டி, பஞ்சாலை உற்பத்தி ஆகியவை பெரும்பாலானோருக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. ’நவ திருப்பதி’, ’நவ கைலாயங்கள்’ உட்பட பல்வேறு சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களும் இங்கு இடம்பெற்றுள்ளது.

மக்ரூன்

தூத்துக்குடி ’மக்ரூன்’, முதலூர் ‘மஸ்கோத் அல்வா’, கடம்பூர் ’போளி’, ஒட்டநத்தம் ’சேவு’, ஈரால் ’சேவு’, கோவில்பட்டி ’கடலைமிட்டாய்’ காயல்பட்டினம் ’தம்மடை’ ஆகியவை பிரசித்தி பெற்ற இனிப்பு பண்டங்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயில், தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயம் ஆகியவை புகழ்பெற்ற ஆலயங்கள். மணப்பாடு, தேரிக்காடு, கழுகுமலை ஆகியவை சுற்றுலாத் தலமாகவும் சினிமா படப்பிடிப்புத் தலங்களகவும் விளங்குகின்றன.    

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக்கோட்டை- மணி மண்டபம், எட்டயபுரம் பாரதியார் பிறந்த இல்லம்- மணி மண்டபம், வ.சி.சி பிறந்த இல்லம், உமறுப்புலவர் மணி மண்டபம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் நினைவு மண்டபம் ஆகியவை முக்கியமான நினைவுச் சின்னங்கள். ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகியவை முக்கியமான அகழாய்வு பகுதிகளாக விளங்குகின்றன.  

முத்தாலங்குறிச்சி காமராசு
முத்தாலங்குறிச்சி காமராசு

தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பு, பெருமை குறித்து முத்தாலங்குறிச்சையைச் சேர்ந்த எழுத்தாளர் காமராசு, “கடல் தண்ணீர் நிறைந்த உப்பு நிலத்தைத் தூர்த்து, துறைமுகமும் குடியிருப்புகளும் தோன்றிய ஊர் என்பதால் இது "தூத்துக்குடி" என்றழைக்கப்பட்டது.

பழங்காலக் கல்வெட்டுகளில் இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு அதிகமாகக் கிடைத்த முத்துக்களை மீனவர்கள் மூச்சை அடக்கி முத்து எடுத்தல் காரணமாக இது "முத்து நகர்" எனவும் பெயர் பெற்றது.

தூத்துக்குடியின் நடு நாயகமாக விளங்கும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலின் இறைவன், இறைவிக்கு மந்திர உபதேசம் செய்ததால், இந்தவூருக்கு புராண  நம்பிக்கையில் ”திருமந்திரநகர்” என்ற பெயரும் உண்டு.

போர்ச்சுக்கீசியர்கள் கி.பி. 1,532-ல் முதன்முதலாக இங்கு வந்து முத்துக்குளித்தலையும் வாணிபத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். டச்சுக்காரர்கள் கி.பி. 1,658-ல் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.

உப்பு
உப்பு

ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி கி.பி. 1782-ல் டச்சுக்காரர்களிடமிருந்து இப்பகுதியைக் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூத்துக்குடி மாவட்டம், இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியப் பங்காற்றிய வீரர்களின் தாயகமாகும்.

ஆங்கிலேயருக்கு எதிராக பாளையக்காரர் புரட்சியை வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் வழியைத் தொடர்ந்த ஊமைத்துரை, வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம் உள்பட பல போராட்ட வீரர்கள் முன்னெடுத்தனர்.

எட்டயபுரத்தில் பிறந்து தனது புரட்சிகரமான கவிதைகளால் விடுதலை நெருப்பை மூட்டினார் மகாகவி பாரதியார். ஆங்கிலேயரின் கப்பல் வணிக ஏகபோகத்திற்கு எதிராக, கடந்த 1906-ல் முதன்முறையாக “சுதேசி நாவாய்ச் சங்கம்” தொடங்கி, 1907 ஜூன் -1 அன்று தூத்துக்குடி - கொழும்பு இடையே சுதேசிக் கப்பலை இயக்கினார் வ.உ.சிதம்பரனார்.  

மணப்பாடு சுற்றுலாத்தலம்
மணப்பாடு சுற்றுலாத்தலம்

அழகுமுத்துக்கோன், வாஞ்சிநாதன் போன்றோருடன், குலசேகரன்பட்டினம் லோன்துரையைக் கொன்று தூக்குமேடையை முத்தமிட்டுத் திரும்பிய ராஜகோபால், காசிராஜன் ஆகியோருடன் இம்மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள்  குறித்து "தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்" என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நூலாக வெளியிட்டேன்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கி. ராஜநாராயணன், அழகிரிசாமி, பூமணி, சோ. தர்மன், உதயசங்கர் உள்பட பல எழுத்தாளர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அரசு சார்பில் கி.ரா., சிவந்தி ஆதித்தனார், வெள்ளையத்தேவன், குருஸ் பர்னாந்து உள்பட பலரின் நினைவுச் சின்னங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

திருச்செந்தூர்

தூத்துக்குடி வ.உசிதம்பரனார் துறைமுகம், ஏற்றுமதி - இறக்குமதியில் இந்தியத் துறைமுகங்களிலேயே சிறப்புடன் இயங்கி வருகிறது. குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம், உடன்குடி அனல் மின் நிலையம், உலகின் முதல் பர்னீச்சர் பூங்கா, சர்வதேச விமான நிலையமாக உருவெடுத்து வரும் தூத்துக்குடி விமான நிலையம் ஆகியவற்றால் மேலும் சிறப்புறுகிறது தூத்துக்குடி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User