துபாயிலிருந்து ஊர் திரும்பிய இளைஞர்; வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொலை... குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

Nov 27, 2026 - 15:32
0
துபாயிலிருந்து ஊர் திரும்பிய இளைஞர்; வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொலை... குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம், ​இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திங்கள்சந்தை அருகே உள்ள காட்டுவிளை சிறிய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மகன் சமீம் (27). சமீமிற்கும், அதே காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (கதிரவன்) மகன் முகேஷ் என்பவருக்கும், ஏற்கெனவே பைக் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ​இதற்கிடையில், வேலை நிமித்தமாக துபாய்க்குச் சென்ற சமீம், அங்கு கார் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். விடுமுறைக்காகக் கடந்த 15-ம் தேதிதான் அவர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ​இந்நிலையில், கதிரேசன் மகன் முகேஷின் நண்பர்களான மூர்த்தி மகன் முகேஷ் (மற்றொரு முகேஷ்) மற்றும் குமார் மகன் அகில் ஆகியோர் ஒன்றாகச் சுற்றிவந்தனர். மூர்த்தி மகன் முகேஷின் வீட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்குக் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் சமீம் வீட்டிற்கு முன்புள்ள பாதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதை சமீம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ​இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு மூர்த்தி மகன் முகேஷ் மற்றும் அகில் ஆகிய இருவரும் சமீமின் வீட்டிற்குச் சென்று அவரை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், கதிரேசன் மகன் முகேஷ் ஸ்கூட்டரில் சமீமின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டு முன்பு நின்றிருந்த சமீமைப் பிடித்து இழுத்த அவர், தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் அரிவாள்மனையால் சரமாரியாக வெட்டியதுடன், கூர்மையான ஆயுதத்தாலும் குத்தியுள்ளார். இதில் சமீமிற்கு இடது தொடையில் பலத்த வெட்டுக்காயமும், இடது மார்பு, இடது காதின் பின்புறம், இடது தோள்பட்டை மற்றும் வலது முதுகு ஆகிய பகுதிகளில் ஆழமான குத்துக்காயங்களும் ஏற்பட்டன.

சி சி.டி.வி காட்சி

சமீமின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் ஹயர் நிஷா பீவி (50) மற்றும் உறவினர்கள் பதறியடித்து ஓடி வந்தனர். அவர்களையும் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய முகேஷ், தான் வந்த ஸ்கூட்டரை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினார். உயிருக்குப் போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சமீமை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சமீம் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைசெய்யப்பட்ட சமீம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரணியல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து, அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கொலையாளி விட்டுச் சென்ற ஸ்கூட்டரைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். மேலும், சமீமின் தாய் ஹயர் நிஷா பீவி அளித்த புகாரின் பேரில், கதிரேசன் மகன் முகேஷ், மூர்த்தி மகன் முகேஷ் மற்றும் குமார் மகன் அகில் ஆகிய 3 பேர் மீதும் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவான மூவரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User