உக்ரைன் என்னவாகுமோ? ரஷ்யா உடன் 'டீல்' - ரூட்டை மாற்றும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?
“ரஷ்ய அதிபர் புதினுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு டீசல் கிடைக்க உள்ளது.”
இது கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட பதிவு.
ரஷ்யாவிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது; வாங்கினால் அந்த நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரிகள் விதிக்கப்படும்...
ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிக்கிறது என்று கூறியவரும், இப்போது டீசல் ஒப்பந்தம் போட்டிருப்பவரும் ஒருவரே.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவிற்கு என்ன பயன்?
தற்போது ட்ரம்ப் - புதின் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் உலக சந்தைக்கு உடனடியாக 3 லட்சத்திற்கும் அதிகமான டன் டீசல் கிடைக்கப் போகிறது.
வருகிற நவம்பர் மாதத்தில், மேலும் 5 லட்சம் டன்னும், அதன் பிறகு, 10 லட்சம் டன்னும் கிடைக்க உள்ளது.

முன்... பின்...
உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை 2025-க்கு முன், 2025-க்குப் பின் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
2022-ம் ஆண்டு இந்தப் போர் தொடங்கியபோது, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் ஆட்சி இருந்தது. பொதுவாக அமெரிக்காவும், ரஷ்யாவும் எதிர் எதிர் துருவங்கள்.
வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் முட்டலும், மோதலும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
2022-ம் ஆண்டு உக்ரைனை ரஷ்யா தாக்கியவுடன், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது.
உக்ரைனுக்கு நிதியுதவி செய்வது, ஆயுதங்களைச் சப்ளை செய்வது என இருந்தது. கூடுதலாக, ரஷ்யா மீது பல தடைகளை அடுக்கிக்கொண்டே போனது.
தேர்தலுக்குப் பின்...
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தேர்தல் பிரசாரத்தின் போதே, “நான் அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் நிறுத்த முயற்சி எடுப்பேன்” என்று அறிவித்தார் ட்ரம்ப்.
விருப்பமே இல்லையென்றாலும், அமெரிக்க தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருந்தபோதே, ட்ரம்ப்பைச் சென்று சந்தித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
அப்போது அவரிடம் ‘அதிபராவதற்கு முன்பே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுப்பேன்’ என்று உறுதியளித்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் இந்த நம்பிக்கைக்குக் காரணம் புதின். என்னதான் இரு நாடுகளும் இரு துருவங்களாக இருந்தாலும், ட்ரம்ப்பும், புதினும் நல்ல நண்பர்கள்.
நட்பின் அடிப்படையில் பேசிப்பார்த்தால், புதின் கொஞ்சம் இறங்கி வருவார் என்று கணக்குப் போட்டார் ட்ரம்ப்.

ஆனாலும், வேலைக்கு ஆகவில்லை!
சொன்னதுபோலவே, நவம்பர் மாதம் முடிவுகள் வெளியானதிலிருந்து, ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்க இருந்த இடைப்பட்ட காலத்தில், ட்ரம்ப் அனைத்து முயற்சிகளையும் செய்தார்.
ஆனாலும், எதுவும் பலனளிக்கவில்லை.
2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ட்ரம்மைச் சந்திக்க வெள்ளை மாளிகை சென்றிருந்தார் ஜெலன்ஸ்கி. ‘உங்களுக்கு இதுவரை தேவையில்லாமல் பல பில்லியன் டாலர் செலவழித்திருக்கிறோம்’ என்று ட்ரம்ப் கூற, அந்தச் சந்திப்பு பெரும் அதிருப்தியோடு முடிந்தது.
முன்னர் முறுக்கிக்கொண்டாலும், பின்னர் ‘வேறு வழி இல்லை’ என்று ரஷ்யா போர் செய்வதை எதிர்த்து ட்ரம்ப்பும், ஜெலன்ஸ்கியும் கைக்கோத்தனர்.
ஆனால், நேட்டோவில் உக்ரைனுக்கு இடமில்லை என்பதில் ட்ரம்ப் தெளிவாக இருந்தார்... இருக்கிறார்.
அவ்வப்போது புதினுக்கு சாதகமாகப் பேசி, புதினையும் வழிக்குக் கொண்டுவரப் பார்த்தார் ட்ரம்ப்.
புதினை அமெரிக்காவிற்கு அழைத்துப் பேசினார். புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பை நடத்த முயன்றார். ஆனாலும், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
‘ட்ரம்புடன் நட்பு’ என்பதைத் தாண்டி, ‘என்னுடைய நாடு... என்னுடைய எல்லை’ என்பதில் தெளிவாக இருந்தார் புதின்.
செக்
இறங்கி வராத புதினுக்கு ‘இரண்டாம் கட்ட வரி’ விதித்து நெருக்கடி கொடுக்கலாம் என்று செக் வைக்கப் பார்த்தார். இந்தப் பேச்சு கடந்த ஆண்டே தொடங்கினாலும், கடந்த மாதத்தில் தீவிரமாக்கியது அமெரிக்கா.
ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் டாப் 5 நாடுகளுக்கு ‘இரண்டாம் கட்ட வரி’ விதிக்கும் மசோதா அமெரிக்காவின் கீழ்சபை, மேல்சபை மற்றும் அதிபர் என மூன்று கட்டத்திலும் ஒப்புதல் பெற்றது.
அமலுக்குக் கொண்டுவரலாம் என்கிறபோது, சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த மாதம் அமெரிக்க பயணம் மேற்கொண்டார்.
மேலே சொன்ன மசோதாவை அமலுக்குக் கொண்டு வந்தால், முதலில் பாதிக்கப்படுவது என்னவோ சீனாதான். காரணம், ரஷ்யாவிடம் இருந்து அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் நாடே சீனாதான்.
ஜின்பிங்கின் வருகையையொட்டி, இரண்டாம் கட்ட வரிவிதிப்பைத் தள்ளிப்போட்டார் ட்ரம்ப்.
முற்றிலும் ரூட் மாறிய ட்ரம்ப்!
ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்த, ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க நினைத்த ட்ரம்பே இப்போது முற்றிலும் ரூட் மாறியுள்ளார்.
அதுதான், மேலே கூறியிருக்கும் ஒப்பந்தம்.
ட்ரம்பின் இந்த முடிவை ஜெலன்ஸ்கி எதிர்க்கிறார். ஆனால், ட்ரம்ப் ஜெலன்ஸ்கியின் இந்தக் கோபத்தை ‘உக்ரைனுக்கு வேறு அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது போலும்’ என்று மடைமாற்றிவிட்டார்.
ட்ரம்ப்: இப்போது ஏன் இந்த முடிவு?
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஈரான் போரைத் தொடங்கியது அமெரிக்காவும், இஸ்ரேலும். இஸ்ரேல் ஆரம்பத்திலேயே கொஞ்சம் விலகிக்கொண்டாலும், ஈரானை முற்றிலும் தாக்கியதெல்லாம் அமெரிக்காதான்.
ஈரான் போர் தொடங்கியதுமே, உலக நாடுகளின் பொதுசொத்து மற்றும் தங்களது எல்லையில் விரிந்த ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது ஈரான்.இது இன்னும் திறக்கப்படவில்லை.
உலக நாடுகள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன. அப்போது அமெரிக்கா மட்டும் விதிவிலக்கு ஆகுமா என்ன...
அமெரிக்காவிலும் பெட்ரோல், டீசல் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் அச்சத்தால் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை வேறு ஏற்றியுள்ளது.
இதை அமெரிக்க மக்கள் சற்றும் விரும்பவில்லை.

வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவின் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் தன்னுடைய கட்சிக்கு வாக்குகள் வர வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலையை முதலில் குறைக்க வேண்டும்.
இதற்கான ஏற்பாடாகத்தான் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் ட்ரம்ப். ரஷ்யாவில் இருந்து பெரிய அளவில் டீசல் எண்ணெய் சந்தைக்குள் வரும்போது, டீசல் விலை குறையும். இது தனக்குச் சாதகமாக அமையும்.
ஈரான் போரை அமெரிக்க மக்கள் சற்றும் விரும்பவில்லை. இதனால், தேர்தல் வரை ஈரான் மீது எந்தத் தாக்குதலும் இல்லை என்று போரையும் ‘ஆஃப்லைன்’ மோடிற்குள் கொண்டுசென்றுள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப் ஒரு பக்கா பிசினஸ்மேன். அதிபராக இருந்தாலும் அவரது பல நிலைபாடுகளில் இதைக் காண முடியும்.
இதனால், தனக்கு என்ன தேவை... எது சாதகம் என்று பார்த்து, ரஷ்யாவுடன் ‘டீல்’ போட்டு, அமெரிக்காவை நம்பியிருந்த ஜெலன்ஸ்கியை ‘டீலில்’ விட்டிருக்கிறார் ட்ரம்ப்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)