45 நிமிடங்கள் காத்திருந்து துப்பாக்கிச்சூடு; டைகர் ஷெராப்பை சுட்ட 3 பேர் ராஜஸ்தானில் கைது!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நேற்று இரவு இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் உயிர் தப்பியபோதிலும், அவரது கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டைகர் ஷெராப் கார் மீது 5 முதல் 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. ஏழு ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், ஐந்து தோட்டாக்கள் காரைத் தாக்கியதாகவும், இரண்டு குறி தவறியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர், ஆரம்பத் துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு காரின் பக்க ஜன்னலை அணுகி, டைகர் ஷெராப்பை நெருங்கிய தூரத்தில் சுட முயன்றார்.
ஆனால் அவரது நாட்டுத் தயாரிப்பான கைத்துப்பாக்கி சுடாமல் ஜாமாகி செயல்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால் ஆயுதம் செயல்படவில்லை.

இது தொடர்பாக வெளியான காணொலியில், துப்பாக்கி வைத்திருந்த நபர் கார் கண்ணாடிக்கு மிக அருகில் இருந்தபோது துப்பாக்கியால் சுட போராடுவதைக் காண முடிந்தது.
இதனால் டைகர் ஷெராப் பலத்த காயமின்றி தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இரண்டு வாரங்களாக டைகர் ஷெராப்பை பின் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். எனவேதான் அவர் கால்பந்து கிளப்பிற்கு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வந்து 45 நிமிடமாக காத்திருந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
குற்றவாளிகள் ராஜஸ்தானில் கைது
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பிடிபட்டுள்ளனர். அவர்களை பொறி வைத்து கைது செய்ய கோட்டா போலீஸாருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆனது என்று ராஜஸ்தான் போலீசார் தெரிவித்தனர். ரயிலில் பயணித்த குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், ரயிலில் சோதனை நடத்தியதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
கோட்டா போலீஸ் கண்காணிப்பாளர் தேஜஸ்வானி கவுதம் இது குறித்து கூறுகையில், துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேக நபர்கள் ரயிலில் பயணம் செய்து கோட்டாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்த 15 நிமிடங்களில் அதிரடி சோதனை செய்து மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹரியானாவில் உள்ள சோனிபட்டைச் சேர்ந்த ரெஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ரோஷன் என்ற மற்றொருவர் பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கடந்த சில ஆண்டுகளாக இவர் மும்பையில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு மைனரும் பிடிபட்டுள்ளார். அவர்கள் மும்பையில் இருந்து டெல்லியை நோக்கி சென்ற போது பிடிபட்டனர். அவர்கள் மும்பை வசாய் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறினர். அவர்கள் மும்பைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
அவர்களிடம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்கள் டெல்லி சென்று அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டது தெரிய வந்தது. அவர்கள் புனேயில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் பயணம் செய்தனர். காலை 10.30 மணிக்கு ரயில் கோட்டா ரயில் நிலையம் வந்ததும் 15 நிமிடத்தில் ஒட்டுமொத்த ரயிலையும் சோதித்து 3 பேரையும் பொதுமுன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்து கைது செய்தனர்.
இதற்கிடையே நடிகர் சல்மான் கானுடன் தற்போது எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்று டைகர் ஷெராப் தெரிவித்துள்ளார். சல்மான் கானுடன் தொடர்பு வைத்து இருப்பதால்தான் துப்பாக்கியால் சுடுவதாக அவரை சுட்ட லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தெரிவித்து இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)