"பார்வையற்றவர்களின் கனவில் என்ன தெரியும?" - பார்வைசவாலை வென்று RJ-வாக கலக்கும் சண்முகவேல்

Oct 11, 2026 - 11:00
0
"பார்வையற்றவர்களின் கனவில் என்ன தெரியும?" - பார்வைசவாலை வென்று RJ-வாக கலக்கும் சண்முகவேல்

“கண்களால் பார்க்க முடியலன்னா என்ன… நம்மால முடியாதுனு நாமளே நினைக்கக்கூடாது!”

இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் 50 வயது சண்முகவேலின் வாழ்க்கை இருக்கிறது. பிறந்தது முதலே பார்வையில்லை. ஆனால், அந்தப் பார்வையின்மை அவருடைய கனவுகளுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் தொடங்கி, ரேடியோவில் RJ-வாக ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசுவது வரை, தன்னுடைய வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். சிறுவயதில் பெற்றோர் அன்போடு வைத்த பெயர் ‘தங்கம்’. இன்று அந்தப் பெயரே அவரது ரேடியோ நிகழ்ச்சியோடு இணைந்து பலருக்கும் பரிச்சயமாகிவிட்டது.

பல ஆண்டுகளாக வீட்டைச் சுற்றியுள்ள சிறிய தோட்டத்தில் வாழை, தென்னை உள்ளிட்ட செடிகளை வளர்த்து வருகிறார். கிணற்றைச் சுத்தம் செய்வது, தண்ணீர் ஊற்றுவது, பூக்களைப் பறிப்பது போன்ற வேலைகளையும் தன்னால் முடிந்தவரை அவரே செய்கிறார்.

“யாராவது வந்து தண்ணி ஊத்தணும்னு காத்திருக்க மாட்டேன். என்னால முடிஞ்சதை நானே செய்துக்குவேன்” என்பதுதான் அவருடைய வாழ்க்கை அணுகுமுறை.

15 வயதில் விதைத்த கனவு!

சண்முகவேலுக்கு ரேடியோ மீதான ஆர்வம் சுமார் 15 வயதிலேயே தொடங்கிவிட்டது. அப்போது ரேடியோவில் ஒலித்த பல அறிவிப்பாளர்களின் குரலும், அவர்கள் பேசும் விதமும் அவரை ஈர்த்திருக்கிறது.

RJ சண்முகவேல்
RJ சண்முகவேல்

“நானும் ஒரு நாள் RJ ஆகணும்னு ஆசைப்பட்டேன்”

அந்தக் கனவு பல ஆண்டுகளுக்குப் பிறகு நிஜமானது. ஒருநாள் தோட்ட வேலை செய்துகொண்டிருந்தபோது கடலோசை ரேடியோவைச் சேர்ந்த லெனின் ராஜ் என்பவர் அவரைச் சந்தித்து, அவரது ஆசையைப் பற்றி கேட்டிருக்கிறார். எந்தத் தயக்கமும் இல்லாமல், “நான் RJ ஆகணும்” என்று பதிலளித்திருக்கிறார்.

சில மாதங்களுக்குப் பிறகு ரேடியோ நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. மூன்று மாதப் பயிற்சிக்குப் பிறகு நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்த பயம், தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துள்ளது. தற்பொழுது தங்கமான வாழ்த்து என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இன்று Live நிகழ்ச்சிகளையும் தன்னம்பிக்கையுடன் நடத்துகிறார்.

கனவுக்குப் பின்னால் இருந்த மனிதர்கள்!

சண்முகவேலின் RJ பயணத்தில் அவருடைய திறமை மட்டுமல்ல, அவரை நம்பி வாய்ப்பு கொடுத்தவர்களின் பங்களிப்பும் முக்கியமானது.

ரேடியோ நிலையத்தின் Managing Director Armstrong Fernando அவருக்கு முக்கியமான ஆதரவாக இருந்துள்ளார். Station Director Gayathri, ரேடியோ துறையில் தனது அனுபவத்தின் மூலம் மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து, நிகழ்ச்சியை நடத்துவதற்குத் தயார்படுத்தியுள்ளார்.

RJ சண்முகவேல்
RJ சண்முகவேல்

அதேபோல், ஆரம்பக் காலத்தில் அவருடன் பணியாற்றிய சில RJ-களும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் சுமார் நான்கு ஆண்டுகளும், நிவாசினி சுமார் ஒரு வருடமும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

“எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தவர்களைமறக்கவே மாட்டேன்” என்கிறார் சண்முகவேல்.

குரலுக்கு அப்பால் இருக்கும் தொழில்நுட்ப உலகம்!

சண்முகவேலின் இன்னொரு பலம் தொழில்நுட்பம். செல்போனில் இருக்கும் Voice Guidance வசதியைப் பயன்படுத்தி YouTube, WhatsApp, Instagram, Spotify போன்ற செயலிகளைத் தானாகவே பயன்படுத்துகிறார்.

ரேடியோ நிகழ்ச்சிக்குத் தேவையான தகவல்களையும் செல்போன் வழியாகத் தேடிக்கொள்கிறார். அதில் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்.

“எல்லாத்தையும் பேசணும்னு நினைக்கக்கூடாது. தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டு பேசணும்” என்பதே அவரது அணுகுமுறை.

Live நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கேட்பவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, தயாரித்துக் கொண்டுவந்த தகவல்களை நினைவில் வைத்திருப்பது என அதிக கவனம் தேவை. சக RJ-கள் சொல்லும் விமர்சனங்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவே எடுத்துக்கொள்கிறார்.

“முதலில் நம்மை நாமே நம்பணும்!”

தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு சண்முகவேல் சொல்லும் முக்கியமான செய்தி தன்னம்பிக்கை.

“நம்மால முடியாது என்று நாமளே சொல்லிக்கக்கூடாது. வீட்டுல இருக்கிறவங்களும் ‘உன்னால முடியாது’ன்னு சொல்லக்கூடாது. முதல்ல நம்மை நாமே நம்பணும்” என்று கூறினார்.

அதே நேரத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். சிறுவயதில் படிப்பைத் தொடராதது இன்று அவருக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது.

“நான் நல்லா படிச்சிருந்தா, இப்போ என்னால நிறைய விஷயங்களை நானே படிச்சுக்க முடிஞ்சிருக்கும்” என்கிறார். அதனால் தன்னைப் போன்றவர்கள் முடிந்தவரை கல்வியைத் தொடர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள்.

RJ சண்முகவேல்
RJ சண்முகவேல்

வாழ்க்கையின் இன்னொரு பக்கம்!

சண்முகவேல் திருமணம் செய்துகொள்ளவில்லை. தன்னுடைய பார்வையின்மையால் எதிர்காலத்தில் ஒரு பெண் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்திலேயே திருமணத்தைத் தவிர்த்ததாகக் கூறினார்.

அவருக்கு இன்னும் ஒரு முக்கியமான ஆசை இருக்கிறது. தனக்கென ஒரு சிறிய வீடு. தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டில் தன்னால் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே அவரது கனவு.

“சூப்பர்ஸ்டாரைப் பார்த்துப் பேசணும்!”

சண்முகவேலுக்கு ரஜினிகாந்த் மீது தனி ஈர்ப்பு. ரஜினியின் குரல், பஞ்ச் வசனங்கள், நடிப்பு, பாடல்கள் என அனைத்தையும் ரசிக்கும் தீவிர ரசிகர்.

அவருடைய மிகப்பெரிய ஆசைகளில் ஒன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்பதுதான்.

இசையிலும் அவருக்கு பரந்த ரசனை இருக்கிறது. எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் எனப் பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையையும் ரசிக்கிறார்.

சண்முகவேலிடம், “உங்கள் வாழ்க்கையே ஒரு ரேடியோ நிகழ்ச்சியாக இருந்தால், அதற்கு என்ன தலைப்பு வைப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

சிறிது யோசித்த அவர் சொன்ன பதில்,

“கண் தெரியாதவர்களின் வாழ்க்கை வரலாறு.”

அவரிடம் இன்னொரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப்பட்டது, “உங்களுக்கு கனவு வருமா?”

“கனவு எல்லாருக்கும் வருவதுதான். நாம ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து யோசிச்சுக்கிட்டிருந்தா, சில நாட்களுக்குப் பிறகு அது கனவுலயும் வரலாம்” என்று கூறினார்.

பார்வையுள்ளவர்களுக்கு கனவில் உருவங்கள் தெரியும். பார்வையற்றவர்களுக்கு?

அவருடைய பதில், “குரல்.”

அவர் கேட்கும் மனிதர்களின் குரல்களே அவரது கனவுகளாக மாறுகின்றன.

பார்வை இல்லாத கண்கள்… எல்லையில்லாத கனவுகள்!

தனக்கென ஒரு வீடு வேண்டும். ரேடியோவில் தொடர்ந்து பேச வேண்டும். தன்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். ஒருநாள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேச வேண்டும்.

இப்படி சண்முகவேலின் ஆசைகளுக்கு முடிவே இல்லை.

வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து, ஆட்டோ பிடித்து ரேடியோ நிலையம் செல்லும் ஒவ்வொரு நாளும் அவர் தன்னுடைய வாழ்க்கையிடம் சொல்லும் செய்தி ஒன்றுதான்

“என்னால முடியாது என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை… நானே என்னை நம்பினால், என் குரலுக்கு ஒரு உலகம் இருக்கிறது!”

கண்களால் உலகத்தைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால், கனவு காண கண்கள் தேவையில்லை. அந்தக் கனவை நம்பி அதை நோக்கி நடக்க ஒரு தன்னம்பிக்கை மனம் போதும்.

அந்த மனதோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் சண்முகவேல்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User