'பழவங்காடி கணபதி ஆசியும் ஐயப்பன் அருளும் என்னை இங்கு சேர்த்தது'- சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி

Oct 18, 2026 - 13:30
0
'பழவங்காடி கணபதி ஆசியும் ஐயப்பன் அருளும் என்னை இங்கு சேர்த்தது'- சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மண்டல காலம் தொடங்கும் சமயத்தில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பது வழக்கம். ஓராண்டு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார். வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டலகால - மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்க உள்ளது. அதை முன்னிட்டு, சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மற்றும் மாளிகப்புறம் தேவி கோயிலுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்யப்பட்டனர். ​ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், சன்னிதானத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை குலுக்கல் நடைபெற்றது. பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த சிறுவர்கள் குலுக்கல் சீட்டுகளை எடுத்தனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் புதிய மேல்சாந்தியாக திருவனந்தபுரம் அரீக்கர இல்லத்தைச் சேர்ந்த அரீக்கர சுப்ரமணியன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாளிகப்புறம் தேவி கோயிலின் புதிய மேல்சாந்தியாக கண்ணூர் மணியூர் பாலயாடு பகுதியைச் சேர்ந்த ஏ. தாமோதரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாளிகப்புறம் மேல்சாந்தி ஏ.தாமோதரன் நம்பூதிரி

திருவனந்தபுரம் புளிமூடு அம்புஜவிலாசம் ரோட்டில் உள்ள அரீக்கர இல்லத்தைச் சேர்ந்த அரீக்கர சுப்ரமணியன் நம்பூதிரி, தற்போது புகழ்பெற்ற திருவனந்தபுரம் பழவங்காடி கணபதி கோயிலின் மேல்சாந்தியாகப் பணியாற்றி வருகிறார். மூன்றாவது முறையாக இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற இவருக்கு, இந்த முறை ஐயப்ப சுவாமிக்கு பூஜை செய்யும் பாக்கியம் கிட்டியுள்ளது. ​ மாளிகப்புறம் சன்னதி மேல்சாந்தியாக தேர்வுச் செய்யப்பட்டுள்ள ஏ.தாமோதரன் நம்பூதிரி கண்ணூர் மணியூர் ஆயடத்து இல்லத்தைச் சேர்ந்தவராவார். 52 வயதான இவர், தற்போது கீழூர் சிவன் கோயில் மேல்சாந்தியாக உள்ளார். சபரிமலை மேல்சாந்திக்கான இறுதிப் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், குலுக்கலில் மாளிகப்புறம் மேல்சாந்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5-வது முறையாக இறுதிப் பட்டியலில் இடம்பெற்று தற்போது தேர்வாகியுள்ளார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே பாலயாடு கோதமல்லீஸ்வரர் கோயிலில் பூஜைகள் செய்யத் தொடங்கிய இவர், பிலாத்திகுளம் வேட்டைக்கொருமகன் கோயில் உட்பட பல ஆலயங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூசாரியாக அனுபவம் பெற்றவர் ஆவார்.

செய்தியாளர்களிடம் பேசிய ​அரீக்கர சுப்ரமணியன் நம்பூதிரி, "இது ஐயப்ப சுவாமியின் எல்லையற்ற கருணை; வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெரும் பாக்கியம். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பட்டியலில் வந்தாலும், ஐயப்பனின் அழைப்பு எப்போது வருகிறதோ அப்போதுதான் இந்த வாய்ப்பு கிட்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஒரு வருடம் முழுவதும் சன்னிதானத்திலேயே தங்கி, சுவாமிக்கும் அங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் முழு மனதுடன் சேவை செய்வதே என் ஒரே நோக்கம். பழவங்காடி கணபதியின் ஆசியும், ஐயப்பனின் அருளுமே என்னை இங்கு கொண்டு சேர்த்திருக்கிறது" என்றார்.

அரீக்கர சுப்ரமணியன் நம்பூதிரி மற்றும் ஏ.தாமோதரன் நம்பூதிரி

​ஏ. தாமோதரன் நம்பூதிரி கூறுகையில், "ஐந்தாவது முறையாகப் பட்டியலில் என் பெயர் வந்தபோது, எல்லாம் தேவியின் விருப்பம் என்று விட்டுவிட்டேன். சபரிமலை ஐயப்ப சுவாமி சந்நிதிக்கான பட்டியலிலும் என் பெயர் இருந்தது, ஆனால் மாளிகப்புறத்தம்மன் என்னை அவரது சந்நிதிக்குத் தேர்ந்தெடுத்து அழைத்துக்கொண்டார். சிறுவயது முதலே இறைப்பணியில் கழித்த என் வாழ்க்கைக்குக் கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரம் இது. மாளிகப்புறத்து அம்மனின் பாதங்களில் நின்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்

கிறேன்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User