சிவகங்கையில் மீண்டும் கொலை: மானாமதுரையில் பட்டப்பகலில் காதுகளை அறுத்து 8 பவுன் நகை கொள்ளை!

Oct 30, 2026 - 16:30
0
சிவகங்கையில் மீண்டும் கொலை: மானாமதுரையில் பட்டப்பகலில் காதுகளை அறுத்து 8 பவுன் நகை கொள்ளை!

சுள்ளான் மதன் விவகாரம் மற்றும் ரவுடி கும்பலின் அடுத்தடுத்த தொடர் கொலைகளால் சிவகங்கை மாவட்டமே நிலைகுலைந்து போயுள்ளது. இதன் பரபரப்பும் அச்சமும் பொதுமக்கள் மனதிலிருந்து இன்னும் அகலாத நிலையில், சிவகங்கையில் மீண்டும் ஒரு கொலையாக மானாமதுரையில் பட்டப்பகலில் நகைக்காக பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவர் அங்குள்ள தனியார் கண் கண்ணாடி கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்த மல்லிகா (வயது 56). இவர் பள்ளி விடுதி வார்டனாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மல்லிகா வீட்டிலேயே கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தளவாடப் பொருட்களை வாடகைக்கு விட்டு வந்தார்.

கொலை நடந்த வீடு

ரத்த வெள்ளத்தில் சடலம்

நேற்று காலை ஈஸ்வரன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் வசந்த மல்லிகா மட்டும் தனியாக இருந்துள்ளார். பிற்பகல் 2.30 மணி அளவில் உணவருந்துவதற்காக ஈஸ்வரன் வீட்டிற்கு வந்தபோது, அங்கு கண்ட காட்சி அவரையும் அக்கம் பக்கத்தினரையும் உறைய வைத்தது. வீட்டுக்குள் வசந்த மல்லிகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

காதுகளை அறுத்து கொடூரம்

வீட்டில் தனியாக இருந்த மல்லிகாவை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியுள்ளனர். மேலும், வசந்த மல்லிகாவின் 2 காதுகளையும் அறுத்து, அவர் அணிந்திருந்த 1 பவுன் கம்மல் மற்றும் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் சங்கிலி என மொத்தம் 8 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மானாமதுரை டி.எஸ்.பி. லோகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் 'லைலா' வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மெயின் ரோடு வழியாக அண்ணாத்துரை சிலை வரை ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர்.

இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மல்லிகா

இது தொடர்பாக மானாமதுரை டி.எஸ்.பி. லோகநாதனிடம்  நாம் கேட்டபோது, "சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல் அப்பகுதிக்கு வந்து சென்ற அனைத்து வாகனங்கள், செல்போன் அழைப்புகள் என ஒவ்வொன்றையும் துல்லியமாக சோதித்து வருகிறோம். விரைவில் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

அடுத்தடுத்த கொடூரச் சம்பவங்களால் சிவகங்கை மாவட்ட மக்கள் பெரும் பீதியிலும் சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User