கேரளம்: பாலியல் புகாரை மறைக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்; மருத்துவரைத் தாக்கிய நடிகை கைது

Nov 06, 2026 - 11:00
0
கேரளம்: பாலியல் புகாரை மறைக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்; மருத்துவரைத் தாக்கிய நடிகை கைது

கேரள மாநிலம் கொச்சி திருப்பூணித்துறை ஹில்பேலஸ் பகுதியில் வசித்து வருபவர் நடிகை அதுல்யா சந்திரா. மும்பையில் பிறந்து வளர்ந்த அதுல்யா சந்திரா, கொச்சியில் உள்ள பிரபல குற்றவியல் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

நடிகை அதுல்யா சந்திராவின் நெருங்கிய பெண் உறவினர் ஒருவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் குரீக்காடு பகுதியைச் சேர்ந்த 41 வயது மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண், நடிகை அதுல்யாவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசில் புகார் அளிக்காமல் மருத்துவரைப் பழிவாங்கவும், பணம் பறிக்கவும் அதுல்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த திங்கள்கிழமை மாலை தனது உறவினருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகக் கூறி மருத்துவரை அதுல்யா வரவழைத்துள்ளார்.

இதனை நம்பி மருத்துவர் மாலை 6.30 மணியளவில், பொன்னுருன்னி ஜூனியர் ஜனதா சாலையில் உள்ள 'எஸ்ஸன் ஸ்பிரிங் டேல்' அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றார். இந்தக் குடியிருப்பு மலையாளத் திரையுலகின் முன்னணி இளம் நடிகர் ஒருவர், தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் தங்குவதற்காக எடுத்த இடமாகும்.

அங்கு சென்றபோது நோயாளி யாரும் இல்லாத நிலையில், அறையின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே பதுங்கியிருந்த கும்பல் மருத்துவரைச் சூழ்ந்துகொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியது.

நடிகை அதுல்யா சந்திரா
நடிகை அதுல்யா சந்திரா

சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவரைச் சிறைவைத்துத் தாக்கிய கும்பல், பாலியல் புகாரை வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டியுள்ளது. தொடர்ந்து தாக்கப்பட்டதால் வேறு வழியின்றி சம்மதித்த மருத்துவர், மறுநாள் முதற்கட்டமாக ரூ.25 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டதையடுத்து, இரவு 10.30 மணியளவில் அவரை அக்கும்பல் விடுவித்தது.

மேலும், அவரிடமிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 உயர்ரக செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இயர்பாட்ஸ் ஆகியவற்றையும் அவர்கள் பறித்துக் கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட நடிகை அதுல்யா சந்திரா
கைதுசெய்யப்பட்ட நடிகை அதுல்யா சந்திரா

தாக்குதலில் படுகாயமடைந்த மருத்துவர் உடனடியாக களமசேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் கடவந்தறா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடிகை அதுல்யா சந்திரா (32), நடிகர் மற்றும் தயாரிப்பு நிர்வாகியான பி. பிபின் பெரும்பள்ளி (பிபின் பேபி - 42), கே.பி. விஷ்ணு (31) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிபின் சுமார் 20 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எஞ்சிய 9 பேரைக் கைது செய்யப் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User