'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி
"அதிமுக - திமுக இணைவது அரசியல் பிழை இல்லை. திமுகவுடன் இணைவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் பணிகளில் திமுகவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பது விவாதமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் மு. வீரபாண்டியனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் இங்கே!!!

திமுக, அதிமுக இணைவது அரசியல் பிழை கிடையாது என்று கூறியிருக்கிறீர்கள். இதன் பின்னணியில் உள்ள உங்களுடைய அரசியல் பார்வை என்ன?
திமுக, அதிமுக இரண்டுமே ஜனநாயக சக்திகள். பாஜக இல்லாமல் திமுக, அதிமுக ஆகியவை நெருங்கி வருவதிலும், உரையாடல் செய்வதிலும் என்ன அரசியல் பிழை இருக்க முடியும்? ஆனால், ஆரம்பத்தில் இது சம்பந்தமான காய்நகர்த்தல்களை பாஜக செய்ததுதான் பிழை. மற்றபடி இரு ஜனநாயக சக்திகள் நெருங்கி வருவதில் அரசியல் பிழை எதுவுமில்லை.
தேர்தல் பணிகளில் திமுகவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கூறியிருக்கிறீர்கள். இது தேர்தல் நேரத்திற்கான தற்காலிக முடிவா அல்லது கொள்கை ரீதியான அணுகுமுறையா?
திமுக, தவெக, அதிமுக போன்ற கட்சிகள் எங்களுக்குக் கொள்கை ரீதியிலான எதிரிகள் அல்ல. அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எங்களுக்கு ஒரே எதிரி ஆர்.எஸ்.எஸ் - பாஜக மட்டுமே. மற்றவை அனைத்துமே ஜனநாயக சக்திகளாகவே கருதப்படுகின்றன. தமிழ்நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும் திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து போராடவும் செயலாற்றவும் எங்களால் முடியும். அதுவே எங்களின் கொள்கை வழிப்பாடு.
திமுகவுடன் இணைவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?
தேர்தல் கூட்டணி என்பது கட்சி முடிவு செய்யும் விஷயம். ஆனால் கொள்கை அளவில் திமுகவும் கம்யூனிச இயக்கமும் எதிரிகள் அல்ல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். திமுகவின் ஜனநாயகப் பங்களிப்பையும் மதிக்கிறோம். எனவே, வகுப்புவாத சக்திகளை முறியடிக்க இத்தகைய ஜனநாயக சக்திகளுடன் இணைவது ஒரு கொள்கை நிலை. தேர்தல் சூழல் வரும்போது கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும்.

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு மதிப்பிடுகிறது?
நாங்கள் ஆரம்பத்தில் ஆதரவளித்தபோதே சில அரசியல் நிபந்தனைகளை முன்வைத்தோம். மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்க வேண்டும், தமிழக நலன்களைக் காக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே அவை. உழைக்கும் மக்கள், விவசாயிகள், துப்புரவுப் பணியாளர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதேவேளையில், தனியார்மயம் மற்றும் தாராளமயம் போன்ற ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை; அதனை அறிக்கைகள் மூலமாக எதிர்த்தும் கண்டித்தும் வருகிறோம். மக்களின் விருப்பத்திற்கு மாறாகப் பட்டினப்பாக்கத்தில் மீனவர் குடியிருப்புப் பகுதியில் அரசு அலுவலகம் அமைப்பதையோ, விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையோ எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எஸ்.ஐ.ஆர் (SIR) விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தயக்கம் காட்டுகிறாரா?
ஆம், நிச்சயமாக. 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று நாடே போராடுகிறது. இதில் மாநில முதலமைச்சர் மௌனம் சாதிப்பது சரியல்ல. அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் தமிழக அரசு எந்த அளவுக்கு அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ஒன்றிய அரசுடன் நிர்வாக ரீதியான தொடர்பை வைத்திருப்பது வேறு, அவர்களின் கொள்கையை ஏற்பது வேறு. ஒன்றிய அரசின் கொள்கைகளை ஏற்கக் கூடாது, அவற்றுக்கு இசைவு தெரிவிக்கக் கூடாது. தமிழக உரிமைகளுக்காகத் தயக்கமில்லாமல் முதலமைச்சர் தலைமையில் போராட வேண்டும்.

இரு திராவிடக் கட்சிகளை வீழ்த்தி வந்துள்ள தவெகவின் எதிர்காலம் மற்றும் கோட்பாடு குறித்து இடதுசாரிகளின் பார்வை என்ன?
காலம் செல்லச் செல்லத்தான் தெரியும். மதச்சார்பின்மைதான் தங்கள் கொள்கை என்று அவர்கள் சொல்கிறார்கள். இதை அமைச்சர்கள் சொல்வதை விட முதலமைச்சரே உறுதியாகச் சொல்ல வேண்டும். பெரிய எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், மதச்சார்பற்ற வழியில்தான் தவெகவும், முதலமைச்சரும் பயணிக்க வேண்டும்" என்று கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)