மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம்

Oct 27, 2026 - 09:30
0
மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம்

மும்பையில் நேற்று கஞ்சூர்மார்க்கில் உள்ள சிக்னலிங் ரிலே அறையில், மின்சார ஏற்ற இறக்கம் மற்றும் வெப்ப அதிகரிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

இதனால் மத்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகள் நாள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் ஒன்பது மணிநேரம் ஆனது. இந்தத் தீ விபத்தினால் பாண்டூப் மற்றும் விக்ரோலிக்கு இடைப்பட்ட ஆறு வழித்தடங்களிலும் சிக்னல் அமைப்பு பாதிக்கப்பட்டது.

மேலும், இது போன்ற வேறு இரண்டு தனித்தனி தொழில்நுட்பக் கோளாறுகளால் 80 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதோடு மெயின் லைன் மற்றும் ஹார்பர் லைன் வழித்தடங்களில் ரயில்கள் 60 முதல் 90 நிமிடங்கள் வரை தாமதமாக இயங்கின.

மேலும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதாலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாலும், ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ரயில்கள் ஆங்காங்கே அப்படியே பல மணி நேரம் நின்றது. இதனால் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர். வாரத்தில் முதல் நாள் என்பதால் வேலைக்குச் சென்ற பயணிகள், இரு திசைகளிலும் (செல்லும் மற்றும் வரும் பாதைகளில்) ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

அதிகமான பயணிகள் பொறுமையில்லாமல் ரயிலில் இருந்து இறங்கி பக்கத்து ரயில் நிலையத்திற்கு தண்டவாளத்தில் நடக்க ஆரம்பித்தனர். இதில் பயணிகள் மீது ரயில் மோதியது. இதனால் 3 பயணிகள் ரயிலில் அடிபட்டு இறந்து போனார்கள்.

ரயில்வே ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டனர். கேபிள்களை மாற்ற சுமார் நான்கு மணிநேரம் ஆனது. இதனால் ரயில் போக்குவரத்து சீரடைய இரவு ஆனது. இந்தத் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய மத்திய ரயில்வே நிர்வாகம் ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User