கனமழையால் மிதக்கும் கோவை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!

Oct 26, 2026 - 11:00
0
கனமழையால் மிதக்கும் கோவை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மதுக்கரையில் 13 செ.மீ., வாரப்பட்டியில் 12.8 செ.மீ, போத்தனூரில் 11.8 செ.மீ, கோவை தெற்கில் 10.5 செ.மீ மழை பதிவானது. இதேபோல பொள்ளாச்சி, வேளாண்மை பல்கலைக்கழகம், மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், வீடுகளை சூழ்ந்த மழைநீர்
சாலைகள், வீடுகளை சூழ்ந்த மழைநீர்

இந்த நிலையில் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி வழிவதால், செல்வபுரம் பகுதி இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது. பிரபு நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு செய்தார். இதன் காரணமாக அப்பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

குளத்தில் இருந்து வெளியேறும் நீர்
குளத்தில் இருந்து வெளியேறும் நீர்

இதேபோல கோவை மாநகராட்சி 80வது வார்டுக்கு உட்பட்ட சேதுமா வாய்க்கால் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், மழை நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User