Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?

Mar 19, 2026 - 17:02
 0
Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?

10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது. 

Youth Rewiew | யூத் விமர்சனம்
Youth Rewiew | யூத் விமர்சனம்

மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன். 

இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் 'யூத்' திரைப்படத்தின் கதை.

பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், '3' காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி 'யூத்' நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்!

பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்!

மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார்.

மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார். 

சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள்.

Youth Rewiew | யூத் விமர்சனம்
Youth Rewiew | யூத் விமர்சனம்

சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.

2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம்.

'முட்ட கலக்கி', 'ஜில்பான்ஸோ', 'லவ்வ சொல்லிட்டாளே' ஆகிய பாடல்களில் காதலைக் கொண்டாட்டத்துடன் பரிமாறியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். அதேபோல, பின்னணி இசையிலும் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்துப் பாடங்களிலும் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ஜி.வி.

படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ்.

பதின்வயதில் துளிர்விடும் காதல் ஆசைகள், அந்த வயது இளைஞர்களின் எண்ணவோட்டம், அப்போது முதிர்ச்சியற்ற தன்மையுடன் காதலை அணுகுவது எனப் பதின்வயது இளைஞனின் 360 டிகிரி வாழ்க்கையையும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சொல்லிவிடுகிறார்கள். 

Youth Rewiew | யூத் விமர்சனம்
Youth Rewiew | யூத் விமர்சனம்

இரண்டு காதல்கள், அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நண்பர்களுடனான ஜாலி அரட்டைகள், அப்பாவி அம்மாவுடனான செல்லம் கொஞ்சல்கள், கறார் அப்பாவைக் கண்டால் ஏற்படும் ஜாலியான கோபம் என்பன போன்ற 'கலகல' பதில்களை எழுதி ரேங்க் ஹோல்டராக மேடை ஏறுகிறது திரைக்கதை. ஆனால், இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலை வைத்து கேலிகள் போன்றவை வகுப்பறையில் மாணவர்கள் செய்திருக்கும் க்ரைம் வேலைகள். அது அந்த வயதுக்குரிய இயல்பு என்றாலும், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் காட்சிகளோ, வசனங்களோ மிஸ்ஸிங்!

இரண்டாம் பாதியில் காதலுடன் சேர்த்து எமோஷனல் க்ளாஸையும் சேர்த்து சொல்கிறது திரைக்கதை. அம்மா மீதான அளப்பரிய பாசம், காதலை விட குடும்பமே முக்கியம் என உணரும் கிளைமேக்ஸ் நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால் நம்மை உருக்க வைத்தாலும், அவற்றை வழக்கமான திருப்பத்தைக் கொண்டு திரைக்கதையில் எழுதியிருப்பது குறைவான மதிப்பெண்களையே பெற வைத்திருக்கிறது.

தெளிவாகச் சொல்லப்படாத காதல் கதைகள், முதல் பாதிக்குப் பிறகு காணாமல் போன காதலிகள் ஆகியவை இரண்டாம் பாதி திரைக்கதையில் லாங் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றன. பெண்களின் பார்வையில் காதல்களை அணுகாமல், அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கதாநாயகன் கதாபாத்திரம் பெரும் குழப்பம்.

Youth Rewiew | யூத் விமர்சனம்
Youth Rewiew | யூத் விமர்சனம்

பள்ளிகளில் இதெல்லாம் செய்ய முடியுமா, அங்கு இப்படியான சுதந்திரங்கள் கொடுக்கப்படுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில்களை எழுதாமல் விட்டிருப்பது ஏனோ?!

சில குறைகள் இருப்பினும், பதின்வயது இளைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த 'யூத்', காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி டீசண்ட் மார்க் வாங்குகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0