யோவான் விசா : முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ரொனால்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோவின் நாயகன் யார்?

Jun 19, 2026 - 12:02
0
யோவான் விசா : முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ரொனால்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோவின் நாயகன் யார்?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து காங்கோ அணி களம் இறங்கியது.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி முதல் கோல் அடித்து மிரட்டியதால், காங்கோ அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர்.

ஆனால், ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில், யாரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம் மைதானத்தில் நடந்தது.

காங்கோ அணியின் நட்சத்திர வீரர் யோவான் விசா, எதிரணியின் தடுப்பு அரணை மிக அழகாக உடைத்து பாய்ந்து வந்து ஒரு சூப்பரான கோல் அடித்து, பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியையே நிலைகுலையச் செய்தார்.

யோவான் விசாவின் இந்த ஒற்றை கோல், உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ நாட்டின் 52 ஆண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. தனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே காங்கோ அணி பதிவு செய்த முதல் கோல் இதுவே ஆகும்.

உலகக் கோப்பையை வெல்லும் தகுதி படைத்த போர்ச்சுகல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய வைத்து, ஒட்டுமொத்த உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள யோவான் விசாவின் இன்றைய பெரிய கொண்டாட்டத்திற்குப் பின்னால், கண்ணீரும் வலியும் நிறைந்த காலம் ஒளிந்துள்ளது.

போர்ச்சுகல் அணிக்கு எதிராக விசா காட்டிய இந்த அசாத்தியமான போராட்டக் குணம் மைதானத்தில் மட்டும் திடீரென உருவானது அல்ல, அது அவரது நிஜ வாழ்க்கையிலிருந்து பிறந்தது தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு யோவான் விசா தனது வீட்டில் இருந்தபோது, ஆட்டோகிராப் வாங்குவது போல வந்த ஒரு பெண், எதிர்பாராத விதமாக விசாவின் முகத்தில் கொடூரமான முறையில் ஆசிட் வீசினார். இந்த பயங்கர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பார்வையை இழக்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உடனடியாக முகத்திலும் கண்களிலும் அவசர அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, பல மாதங்கள் கடுமையான போராட்டத்திற்குப் பின்பே அவருக்கு மீண்டும் பார்வை திரும்பியது.

அன்று ஆசிட் வீச்சால் ஏற்பட்ட தழும்புகள் அவரது முகத்தை சிதைத்தாலும், அவரது கால்பந்து கனவையும் மன உறுதியையும் கொஞ்சம் கூட சிதைக்க முடியவில்லை.

``இது எனது வாழ்க்கையின் ஒரு பகுதி" என்று பெருமிதத்துடன் கூறிய விசா, கடுமையான உழைப்பிற்குப் பின் மீண்டும் கால்பந்து மைதானத்திற்குள் நுழைந்து, இன்று உலகக் கோப்பை மேடையில் தனது நாட்டின் மாபெரும் சரித்திர ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த இவரது வாழ்க்கை, இன்று உலகக் கோப்பையில் அவர் அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கோலை விடப் பல மடங்கு உலக மக்களுக்குப் பெரும் ஊக்கமாக மாறியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User