சட்டமன்றத்தில் விவிலய வசனங்களை வாசித்தது ஏன்? - விளக்கிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

May 15, 2026 - 17:02
0
சட்டமன்றத்தில் விவிலய வசனங்களை வாசித்தது ஏன்? - விளக்கிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 3 நாள்களுக்கு சட்டமன்றம் நடந்து முடிந்திருக்கிறது. புதிய சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் ஜே.சி.டி பிரபாகர் அவையில் பைபிள் வசனங்களையெல்லாம் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு வரவேற்பு விமர்சனம் என இரண்டு விதமான கருத்துகளும் கிடைத்திருந்தது.

JCD Prabhakar
JCD Prabhakar

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அழைத்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விவிலிய வாசகங்களை சபையில் வாசித்ததை குறித்தும் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியது, 'என்னை ஒரு பெரிய இடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். என்னை யாரென அறிமுகப்படுத்துகையில் நான் யாரோ அப்படித்தானே என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுதானே ஆத்மார்த்தமாக இருக்கும். மேலும் சபையில் நான் வாசித்த 'உனக்கு செய்யத்தக்க திராணி இருக்கும் போது செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே' 'உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறு.' போன்ற வசனங்கள் எல்லாருக்கும் பொதுவானதுதான். நம்மால் பிறருக்கு ஒரு காரியத்தை ஒரு உதவியை செய்ய இயலுமெனில் அதை செய்துவிட வேண்டும்.

JCD Prabhakar
JCD Prabhakar

அதேமாதிரி, நம்மை நேசிப்பைதைப் போலவே பிறரையும் நேசிக்க வேண்டும். இதெல்லாம் அனைவருக்குமான கருத்துதானே. 'ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.' இது என்னுடைய அனுபவத்தின் வழி கூறிய வசனம். 'நடுநிலைமை' பற்றி கூறும்போது பகவத் கீதை, பைபிள், குரான் என மூன்று மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களையும் எடுத்துப் பேசியிருந்தனே' என்றார்.

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ததைப் பற்றி பேசுகையில், 'அவையில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? இந்த நடைமுறை இனியும் தொடரும். அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் விஷயங்களும் அப்படியே நேரலையில் செல்வதை தவிர்க்க மட்டும் எதாவது செய்ய வேண்டும்' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User