தஞ்சை நிசும்பசூதனி : சோழ மன்னர்கள் வழிபட்ட இந்த அம்மனை வணங்கினால் இனி வாழ்வில் எப்போதும் வெற்றிதான்!

May 30, 2026 - 10:31
0
தஞ்சை நிசும்பசூதனி : சோழ மன்னர்கள் வழிபட்ட இந்த அம்மனை வணங்கினால் இனி வாழ்வில் எப்போதும் வெற்றிதான்!

சோழர்களின் போர்த்தெய்வம் என்று போற்றப்படுபவள் நிசும்ப சூதனி என்ப்படும் வடபத்ரகாளி. சோழ மன்னர்கள் இவளுக்குத் தஞ்சையில் கோயில் எழுப்பினர். தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் நிசும்பசூதனி என்னும் வடபத்ரகாளி கோயிலுக்கு ஒருமுறை சென்று வழிபட்டாலே வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்கிறார்கள் பெரியோர்கள்.

சும்ப-நிசும்பர்களை வதம் செய்த அன்னை பராசக்தியே நிசும்பசூதனி என்று வணங்கப்படுகிறாள். அசுரர் கூட்டம் அதிகரித்ததை அறிந்த சக்தி தேவி, சண்ட-முண்டர்கள், ரத்தபீஜன், தூம்ரலோசனன் உள்ளிட்ட அசுரர்களை அழித்தாள். தொடர்ச்சியாக கௌசீகி என்ற அழகிய பெண்ணாக உருமாறி சும்ப- நிசும்பர்களையும் அழித்தாள் என்கின்றன புராணங்கள். எதிரிகளை அழித்து நல்லவர்களைக் காக்கும் இந்த நிசும்பசூதனியை சோழர்கள் குலதெய்வமாகப் போற்றி, தென்னகம் எங்கும் அவளுக்கு ஆலயங்களை எழுப்பி வழிபட்டார்கள் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது.

தஞ்சை நிசும்பசூதனி

திருப்புறம்பியம் வெற்றிக்குப் பிறகு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களையும் வீழ்த்தி, தலைநகரைப் பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார் விஜயாலயச் சோழர். தனது வெற்றிக்குக் காரணமான நிசும்பசூதனிக்குத் தஞ்சையில் கற்றளி எழுப்பி `தங்கள் குலம் காக்கவும், தொடர்ந்து வெற்றியை அளிக்கவும்' வேண்டிக் கொண்டார். தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்கிலும் காவல் புரிய அஷ்ட காளிகளை பிரஷ்திட்டை செய்தார் என்கிறது வரலாறு. விஜயாலயருக்குப் பிறகு ராஜேந்திர சோழன் காலம் வரை நிசும்பசூதனியை வழிபட்ட பிறகே சோழர்கள் போருக்கும் செல்வர் என்கிறது வரலாறு. சோழர்களின் தொடர்ச்சியான வெற்றியால் நிசும்பசூதனியைக் குல தெய்வமாக வழிபட்டனர். இவளே தன்னை வணங்கும் பக்தர்களின் குலம் காக்கும் காவல் தெய்வமும் ஆனாள்.

தஞ்சை நிசும்பசூதனி ஆலயத்தில் தேவி, கருவறையில் வடக்கு நோக்கிக் கம்பீரமான திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள். இது, 'ராகுகால கோயில்' என்று தற்போது அழைப்படுகிறது. சுமார் ஏழு அடி உயரத்தில், எலும்புகள் வெளியே தோன்றும் அளவுக்கு மெல்லிய தேகம் கொண்டு, பாம்புகளைக் கச்சையாக அணிந்து, எட்டுத் திருக்கரங்கள், தீச்சுவாலையாகத் திருமுடி. நிசும்பனின் தலையைக் கொய்து அதன்மீது அழுத்திய திருவடி, தெற்றுப் பற்கள், மண்டையோட்டு மாலைகள், அழிக்கும் திரிசூலம் என ஆக்ரோஷ வடிவில் காட்சியளிக்கிறாள் அன்னை.

தஞ்சை நிசும்பசூதனி

சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியைக் கரங்களில் தாங்கி, தலையைச் சற்று சாய்த்தவாறு காட்சியளிக்கும் அன்னை அருளை வழங்குவதிலும் சிறப்பானவள் என்கிறார்கள். இங்கே வீழ்ந்து இருக்கும் சண்டன்- முண்டன் மற்றும் சும்ப - நிசும்பர்கள் சோம்பல், ஆணவம், பொய், தீய பழக்கங்கள் எனும் நான்கு குணங்களின் குறியீடுகளே என்கிறார்கள் பக்தர்கள். இவளை தரிசித்தால் இந்த நான்கு தீமையும் வீழ்ந்துவிடும். அஞ்சும் வகையில் அன்னை கோர ரூபம் கொண்டாலும் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக்கடலாய்த் திகழ்கிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.

வெள்ளி, செவ்வாய், ஞாயிறு, அமாவாசை, அஷ்டமி, நவமி, பௌர்ணமி, ராகுகால வேளைகளில் இவளை தரிசிக்க வரும் கூட்டமும் அதிகம்.

Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்

இணைய க்ளிக் செய்க... https://chat.whatsapp.com/Com072vzLdf91mdNSBzw27

தற்போதைய ஆலயம் விஜயாலய சோழனால் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனாலும் தற்போது இருக்கும் கோயில் சமீபகால கட்டுமானமே. இதே பகுதியில் கருவக்காடு, குயவர் தெருவில் அமைந்துள்ளது உக்கிர காளியம்மன் கோயில். இந்தக் கோயிலே விஜயாலயனால் கட்டப்பட்டது என்று ‘தமிழக வரலாற்றுச் செய்திகள்’ உள்ளிட்ட சோழர் கால புத்தகங்கள் பலவும் தெரிவிக்கின்றன. எனினும், பூமால் ராவுத்தர் தெருவில் உள்ள நிசும்பசூதனி ஆலயமே புகழ்பெற்று விளங்கி வருகிறது.

தஞ்சைக்குச் செல்பவர்கள் பெரிய கோயிலை தரிசித்துவிட்டு அப்படியே நிசும்பசூதனியையும் தரிசிக்கலாம். இதனால் உங்கள் குறைகளும் கவலைகளும் நிச்சயம் மாறும் என்கிறார்கள். குறிப்பாக ஆடியில் இவளை தரிசித்து வணங்கினால் உங்கள் பிரச்னைகள் யாவும் ஓடிப்போய்விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தஞ்சை நிசும்பசூதனி

சோழர்களுக்குப் பிறகு நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் அம்மனை வெற்றித் தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். தற்போது, இந்த ஆலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. காலை 7:30 - 11 மணி வரை; மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User