`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

Jul 18, 2026 - 18:31
0
`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத் தொடங்கி கல்வி, சமூகம் சார்ந்த அறப்பணிகளை செய்து வந்த நான், எனது பொதுப் பணிகளை இன்னும் விரிவாக செய்யலாம் என்கிற எண்ணத்தோடும் ஆசையோடும்தான் தி.மு.க-வில் இணைந்தேன். சாமானிய இளைஞர்களால் மக்களுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் தி.மு.க. ஆனால், இன்றைக்கு தி.மு.க சாமானியர்களின் கட்சியாக இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறி இருக்கிறது. இங்கே சாமானியன் ஒருவன் எந்தக் காலத்திலும் உண்மையான மக்கள் தொண்டாற்றும் பொறுப்புக்கோ, உயர் பதவிக்கோ வரவே முடியாது.

தி.மு.க-வின் உண்மையான அடையாளமாக இருந்த உள்கட்சி ஜனநாயகம், ஸ்டாலின் காலத்தில் துடைத்தெறியப்பட்டுவிட்டது. கட்சித் தேர்தலே நடத்தாமல் நியமன பதவிகள் மட்டுமே போடப்படுகிறது. ஒரு சர்வாதிகார நிலையிலேயே கட்சி வழிநடத்தப்படுகிறது. ஸ்டாலின் கட்சித் தலைவர் என்கிற அடையாளத்தோடு மட்டும்தான் இருக்கிறார். தி.மு.க-வின் சி.இ.ஓ-வாக இருப்பது அவரது மாப்பிள்ளை சபரீசன்தான். கட்சியின் தலைமைக்கு நிர்வாகிகள் அனைவரும் வேலைக்காரர்களாகவே இருக்கிறார்கள். மேல்மட்டத்திற்கு கப்பம் கட்ட கணக்கு போடத் தெரிந்தவர்களே, கட்சியில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஒரு கோடித் தொண்டர்களின் உழைப்பை தி.மு.க தலைவர்கள் குடும்பமும், பத்திருபது அமைச்சர்களின் குடும்பங்களும் அனுபவிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கோவை பாபு செல்வக்குமார்
கோவை பாபு செல்வக்குமார்

எனது கவுன்சிலர் பதவியையும், கட்சி பதவியையும் வைத்து ஒரு வீட்டு வரி ரசீதை கூட பார்ட்டி ஃப்ண்ட இல்லாமல் செய்து கொடுக்க முடியாது என்றால் நான் இந்த கட்சியில் ஏன் இருக்க வேண்டும்? கவுன்சிலரான எனது வேலைக்கே பார்ட்டி ஃப்ண்ட் கேட்டார்கள்.கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்த பிறகு, கோவை மாவட்டத்தில் கட்சி கரூர் கம்பெனியாகவே மாறிப்போனது. கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் செந்தில் பாலாஜி கம்பெனியின் வேலைக்காரர்களைப் போலவே நடத்தப்பட்டோம். அனைத்து பணிகளையும் மானிட்டர் பண்ணுவதற்கும் கரூரில் இருந்து ஒரு சூப்பர்வைசர் வருவார் என்றால், இந்த ஊரில் இருக்கும் நிர்வாகிகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்?

கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்களை நீக்க செந்தில் பாலாஜிக்கு அதிகாரம் கொடுத்து தலைமை வேடிக்கை பார்த்தது. இதனால் உண்மையான விசுவாசிகள், பிரதிபலன் பார்க்காத தொண்டர்கள் அதிருப்திக்கும் அவமானத்திற்கும் ஆளானார்கள். என்னை போன்றவர்கள் கருத்தைக் கேட்கிற மனநிலையில் தி.மு.க தலைமை இல்லை. இனியும் திமுகவில் இருந்து பொது தொண்டு செய்யலாம், மக்களுக்கு பணியாற்றலாம், அரசியல் செய்யலாம் என்று கருதுவது பயனற்றது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்  கூட. எனவே தி.மு.க-வில் இருந்து விலகும் நான் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி எனது அடுத்த கட்ட அரசியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். என்னை போல இன்னும் 20 கவுன்சிலர்கள் தி.மு.க-வில் இருந்து விலக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User