விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்ரமண்ய சுவாமி: நொச்சி மாலை... கடன் பிரச்னை தீர வேல் அர்ச்சனை!

Jun 24, 2026 - 09:01
0
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்ரமண்ய சுவாமி: நொச்சி மாலை... கடன் பிரச்னை தீர வேல் அர்ச்சனை!

முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலைத்தலங்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. ஒருமுறை சென்று தரிசனம் செய்தாலே வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் கிடைக்கும். அப்படி ஒரு தலம்தான் மயிலம்.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அழகிய மலைக்கோயில் தலம். 'மயிலம் பொம்மபுரி ஆதீனம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம்' மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மயிலம் சுப்ரமண்ய சுவாமி
மயிலம் சுப்ரமண்ய சுவாமி

சூரபத்மன், முருகனுக்கு எதிராகப் பல தந்திரங்களைப் பயன்படுத்தியும் போரில் தோற்றான். தோல்வியுற்ற சூரபத்மன், தன் தவற்றினை உணர்ந்து முருகப்பெருமானை மனம் உருகவேண்டிக் கொண்டான்.

எப்போதும் முருகனின் திருவடிகளிலேயே இருந்து அவரைச் சுமக்கும் வரம் வேண்டும் என்று வேண்டினான். மயிலாக சூரனை மாற்றினார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்தப் பதவி அவனுக்கு உடனே கிடைத்துவிடவில்லை. ஆதியில் முருகப்பெருமானுக்கு ஒரு மயில் வாகனம் உண்டு. அது இந்திரமயில்.

அதைவிடுத்து சூரனை வாகனமாக ஏற்கவேண்டும் என்றால் அவன் பக்குவப்பட வேண்டும். அந்தப் பக்குவத்தை தவமே அளிக்கும் என்பதால் முருகக் கடவுள், "நீ மயில் வடிவத்தை எடுக்க உறுதியுடன் தவத்தை மேற்கொள்வாயாக" எனக் கூறி மறைந்தாராம்.

அதன்படி, இங்கு சூரபத்மனும் தவம்புரிந்து மயிலாக முருகனின் வாகனமாகும் வரம் பெறுகிறான். அவ்வாறு அவன் தவம் புரிந்த இடம் மயூராசலம். சூரனின் தவத்துக்கு மகிழ்ந்து காட்சி கொடுத்த முருகனிடம், “இறைவா நான் மயில் வடிவமாக இருந்து தவம் புரிந்த இந்த மலையில் தாங்களும், எந்நாளும் வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும்” எனும் கோரிக்கைகளை வைத்தான் சூரபத்மன்.

அதற்கு முருகப்பெருமானோ, "எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு வந்து தவம் புரிவார். அப்போது உன் ஆசை நிறைவேறும்" எனக் கூறி மறைகிறார். சூரபத்மனும் இங்கு மயில்வடிவ மலையாக மாறிக் காத்திருந்ததாகக் கூறுகிறது தல வரலாறு. ‘மயூராசலம்’ என அழைக்கப்பட்ட இந்த இடம் நாளடைவில் மயிலம் என மாறியுள்ளது.

பொதுவாக முருகன் கோயில்களில் உள்ள மயில் தெற்கு நோக்கியபடியோ அல்லது நேர் திசையிலோ இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆலயத்தில் உள்ள மயில், வடக்கு நோக்கிபடி காணப்படுகிறது. இது சூரபத்மன் வழிபட்ட திசையைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

யாருக்கும் வணங்காத கந்தனின் வேல் இங்கு தவம் புரிந்த பாலசித்தரின் தவத்தைக் கண்டு வணங்கியதாகவும் நம்பப்படுகிறது. இதன் நினைவாக, இன்றளவும் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்திற்கு முருகன் புறப்படும்போது பாலசித்தரிடமிருந்தே முருகப்பெருமான் வேல் வாங்கிச் செல்கிறார். இந்தக் கோயிலில், பாலசித்தர் சந்நிதியும் உள்ளது.

மயிலம் சுப்ரமண்ய சுவாமி
மயிலம் சுப்ரமண்ய சுவாமி

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முருகனுடைய வேலாயுத பூஜையில், வேலாயுதத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களின் கடன் பிரச்னைகள் அகலும் என்றும், இந்த ஆலயத்தில் காட்சி தரும் முருகப்பெருமானின் படைத்தளபதி வீரபாகுவை செவ்வாய்தோறும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

இத்தகு சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி திருவிழாவின் 6வது நாளில் காலை பாலசித்தரிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை சூரசம்ஹாரமும், 7 வது நாள் அன்று தெய்வானை திருமணமும் நடைபெறும். இதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையேற்ற பாதையில் இடப்புறம் அமைந்துள்ளது விநாயக பெருமானின் சந்நிதி. அருகாமையில், ஸ்ரீ பாலசித்தர் அக்னி தீர்த்தக் குளம் உள்ளது. விநாயகரைத் தரிசித்ததைத் தொடர்ந்து முருகனின் சந்நிதி நோக்கி செல்ல வேண்டும்.

ஆலயத்தின் உள்சுற்று மண்டபத்தின் இடபுறமாகச் சென்றால் பாலசித்தரின் சந்நிதி உள்ளது. மேலும், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் காட்சி தருகின்றனர். கருவறைக்கு எதிர் திசையில் சற்று இடப்புறமாக நவகிரகங்கள் சந்நிதி உள்ளது. கருவறை அருகே விநாயகரும், சிவபெருமானும் தனி சந்நிதி கொண்டு வீற்றுள்ளனர். கருவறையில், வள்ளி - தெய்வானை உடன் நின்ற கோலத்தில் புன்னகை பொங்க அருள்பாளிக்கிறார் சுப்பிரமணியர்.

மயிலம் சுப்ரமண்ய சுவாமி
மயிலம் சுப்ரமண்ய சுவாமி

கோயிலின் உள்சுற்று மண்டபத்தில் அமைந்துள்ளது உற்சவர் சந்நிதி. விநாயகர், வள்ளி - தெய்வானை உடனான சுப்பிரமணியர் (சூரசம்ஹாரத்திற்கு செல்லும் உற்சவ மூர்த்தி), வீரபாகு, தீர்த்தவாரி செல்லும் முத்துக்குமார சுவாமி, ஆலயத்தின் பிரதான உற்சவ மூர்த்தி, பாலசுப்பிரமணியர், நடராஜர் ஆகிய உற்சவ மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை மயிலம் சென்று தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User