உ.பி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி - பாஜகவுக்கு சாதகமா? விரிவான அலசல்

Nov 12, 2026 - 17:30
0
உ.பி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி - பாஜகவுக்கு சாதகமா? விரிவான அலசல்
2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும், போட்டி அணிகளும் உருவாகியுள்ளன.

ஆளும் பாஜக-வை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதை விட, எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே தலைமைப் பதவி, தொகுதிப் பங்கீடு மற்றும் தலித்-முஸ்லிம் வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக் கொள்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

இதன் உச்சகட்டமாக, அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியும், நகீனா தொகுதி மக்களவை உறுப்பினர் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் (கன்ஷிராம்) இணைந்து ‘சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா’ என்ற புதிய கூட்டணியை லக்னோவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

லக்னோவில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அசாதுதீன் ஓவைசி, பாஜக-வைத் தடுக்க மாநிலத்தில் ஒரு வலுவான மாற்று அரசியலை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.

இந்தப் புதிய கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரசேகர் ஆசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி , காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்க ஓவைசி தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே, சந்திரசேகர் ஆசாத்துடன் கைகோர்த்ததாக AIMIM கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் சௌகத் அலி தெரிவித்துள்ளார்

தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகளை ஒரே குடையின் கீழ் திரட்டும் இந்த முயற்சி, பாரம்பரியமாக இவ்விரு சமூகங்களின் வாக்குகளை நம்பியிருக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அந்த வாக்குகள் சிதறும் பட்சத்தில் அது பாஜகவிற்கு பெரும் சாதகமாக போகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு இழுபறி

2024 மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியாகப் போட்டியிட்ட சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மொத்தமுள்ள 80 இடங்களில் 43 இடங்களை (சமாஜ்வாதி - 37, காங்கிரஸ் - 6) கைப்பற்றி பாஜக-வுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தன. ஆனால், 2027 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம், தங்கள் கட்சிக்கு 175 முதல் 200 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியிடம் முதற்கட்டப் பட்டியலை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

"மக்களவைத் தேர்தல் வெற்றி மற்றும் கட்சியின் கட்டமைப்பு பலத்தின் அடிப்படையில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது" என அவர் வாதிடுகிறார்.

தற்போது உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு வெறும் 2 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் வெற்றியைச் சட்டமன்ற இடங்களாக மாற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.

ராகுல் காந்தி - அகிலேஷ் யாதவ்
ராகுல் காந்தி - அகிலேஷ் யாதவ்

மக்களவைத் தேர்தல் முடிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதிக இடங்களை விட்டுக்கொடுக்க அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தயாராக இல்லை. நேரு-காந்தி குடும்பத்தின் கோட்டைகளாகக் கருதப்படும் ரேபரேலி - அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸின் தற்போதைய கள நிலவரம் மற்றும் வாக்கு வங்கி குறித்து சமாஜ்வாதி கட்சி ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரு கட்சிகளும் தனித்தனி குழுக்களை அமைக்கவுள்ளன.

தனித்துப் போட்டியிடும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி

மற்றொருபுறம், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எந்தக் கூட்டணியிலும் இணையாமல் 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.

கடந்த நவம்பர் 5-ம் தேதி, மாநிலத்தின் 75 மாவட்டத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் மாயாவதி ஆலோசனை நடத்தினார். வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்தவும், தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

2022 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1 இடத்தில் மட்டுமே வென்று 12.88% வாக்குகளைப் பெற்ற பி எஸ் பி, 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூடப் பெறவில்லை. இருப்பினும், மாநிலம் முழுவதும் பரவியுள்ள தனது அடிமட்டக் கட்டமைப்பு மற்றும் பாரம்பரிய தலித் வாக்குகள் மூலம் பல தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக பி எஸ் பி நீடிக்கிறது.

மாயாவதி

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக பார்க்கப்படும் உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கடைபிடிக்கும் இந்த முரண்பாடுகள் பாஜகவிற்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது பாஜகவின் தூக்கத்தை கெடுக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் பல விஷயங்களை செய்தாக வேண்டி உள்ளது.

குறிப்பாக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் பலத்தைச் சிதைத்துக் கொள்ளாமல் தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்க வேண்டும்.

அதே நேரத்தில், BSP, AIMIM மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை தலித் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே தனித்தனி அரசியல் தளங்களை உருவாக்க முயல்கின்றன. அதை அகிலேஷ் யாதவ் முன் நின்று முறியடிக்க வேண்டும்

உத்தரப்பிரதேசம் - யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசம் - யோகி ஆதித்யநாத்

மக்களவைத் தேர்தல் என்பது தேசிய அளவிலான விவகாரங்களை மையப்படுத்தியது. ஆனால், 403 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் உள்ளூர் தலைமை, வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையேயான வாக்குப் பரிமாற்றம் ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கும். பாஜக-வை வீழ்த்துவதற்கு முன்பாக, தங்களுக்குள் ஏற்படும் அதிகாரப் போட்டியால் தங்களின் அடிப்படை வாக்கு வங்கிகள் சிதறாமல் தடுப்பதே உத்தரப் பிரதேச எதிர்க்கட்சிகளின் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User