TVK: வார்டு செயலாளர் பதவி பறிப்பு; தற்கொலை செய்த தவெக நிர்வாகி; மாவட்ட செயலாளர் மீது மனைவி புகார்

Sep 23, 2026 - 11:00
0
TVK: வார்டு செயலாளர் பதவி பறிப்பு; தற்கொலை செய்த தவெக நிர்வாகி; மாவட்ட செயலாளர் மீது மனைவி புகார்

ராமேஸ்வரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

மனைவி தேவகியுடன் தாமோதரன்
மனைவி தேவகியுடன் தாமோதரன்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பிய இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். தேர்தலின் போது த.வெ.க வேட்பாளருக்காகத் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் 10-வது வார்டு செயலாளராக பரந்தாமன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குப் பின் பரந்தாமன் வார்டு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு ஒருவருக்கு அப்பதவி வழங்கப்பட்டது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பரந்தாமன், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸார் பரந்தாமனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதனிடையே தனது கணவரின் இந்த முடிவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலாதான் காரணம் எனப் புகார் கூறியுள்ளார்.

மாவட்ட செயலாளர் மலர்விழி
மாவட்ட செயலாளர் மலர்விழி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவகி, ''விஜய் மக்கள் கழகத்தின் உறுப்பினராக இருந்து ஆரம்பக் காலம் முதல் விஜய்க்காக உழைத்து வந்தோம். தேர்தலின்போது ராத்திரி பகல் பாராமல் கட்சி வேட்பாளருக்காக உழைத்தோம். கட்சிக்காகச் செலவு செய்து பல லட்ச ரூபாயினை இழந்துள்ளோம். இதனைத் தொடர்ந்து எனது கணவருக்கு வார்டு செயலாளர் பதவி கிடைத்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் எனது கணவரை வார்டு செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா, வேறு ஒருவருக்கு அப்பதவியைக் கொடுத்துள்ளார். இது குறித்து கேட்க சென்ற எனது கணவரை மாவட்ட செயலாளரும் அவரது கணவரும் சேர்ந்து தரக்குறைவாகப் பேசியுள்ளனர்.

மேலும் கட்சிக்காரர்கள் யாரும் என் கணவருடன் பேச கூடாது எனத் தடை போட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த எனது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனது கணவரின் இறப்புக்குக் காரணமான மாவட்ட செயலாளர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனப் புகார் கூறியுள்ளார்.

பதவி பறிபோனதால் த.வெ.க நிர்வாகி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User