தாயின் கனவை நனவாக்கிய GenZ மகள் - அசத்தும் சீர் தட்டுகள் டெக்கரேஷன் பிசினஸ்!

Sep 11, 2026 - 14:01
0
தாயின் கனவை நனவாக்கிய GenZ மகள் - அசத்தும்  சீர் தட்டுகள் டெக்கரேஷன் பிசினஸ்!

தன் தாயின் கனவுகளை நனவாக்குவதற்காக, GenZ மகள் புதிதாக ஒரு பிஸினஸைத் தொடங்கியுள்ளார்.

பெயர் மித்ர ப்ரத்திகா, முதுகலை இயற்பியல் படித்து வருகிறார்.

தனது அம்மாவின் புதைந்த கனவுகளை மீட்டெடுத்து, கோயம்புத்தூரில் மைதிலி ஆர்டிஸ்ட்ரி என்ற பெயரில் சீர் தட்டுகள் அலங்கரிக்கும் பிசினஸை தொடங்கி, அதில் வெற்றியும் கண்ட இந்த தாய் மகள் காம்போ பற்றி காண்போம்.

தாயின் கனவு

``என்னுடைய அம்மா M.phil முடித்துவிட்டு கம்பெனியில் ஹெச்.ஆர் ஆக வேலை பார்த்து வந்தார், நான் பிறந்த பிறகு குடும்பத்தையும் என்னையும் கவனித்துக் கொள்வதற்காக வேலையை விட்டு விட்டார். இது எனது மனதை நீண்ட காலமாக உறுத்திக் கொண்டே இருந்தது.

எனது அம்மாவிற்கு சிறுவயதிலிருந்தே கலைப் பொருள்கள் செய்வதில் ஆர்வம் மிகுதி. எங்களுடைய உறவினர் ஒருவரின் கல்யாணத்திற்காக சீர் தட்டுகளை கிரியேட்டிவாக டெக்ரேட் செய்து கொடுத்தோம். கல்யாணத்திற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் அந்த டெக்கரேஷனை வெகுவாக பாராட்டினர். அப்போதுதான் எனக்கு இதை ஒரு பிசினஸாக செய்தால் என்ன என்று தோன்றியது. அடுக்களையில் புதைந்து போன எனது தாயின் வாழ்க்கைக்கு புத்துயிர் அளிக்க இருந்த கடைசி விதையில் முளைத்த மரம் தான் இந்த மைதிலி ஆர்ட்டிஸ்டிரி என்ற சீர் தட்டுகள் டெக்கரேஷன் செய்யும் பிசினஸ்.

சீர் தட்டுகள் டெக்கரேஷன் தொழிலாக சாத்தியமா ?

இந்த தொழிலுக்கு முதலீட்டை தாண்டி பெரிதும் நம்ப வேண்டியது நமது திறனையும் உழைப்பையும் தான். பதினொரு சீர் தட்டுகளுக்கு 30,000 வரை turnover செய்துள்ளோம். இதில் மூலதனம் எங்களுடைய நேரமும் எனது அம்மாவின் கிரியேட்டிவிட்டியும் தான்.

ஒரு சீர் தட்டை டெக்ரேட் செய்ய 3 முதல் 12 மணி நேரம் வரை ஆகும், குறிப்பாக சீர் தட்டுகளில் உணவு பொருள்கள் தான் அதிகமாக இருக்கும். நாங்கள் செய்யும் டெக்கரேஷன் உணவு பொருளின் தன்மையை குலைத்து விடாதவாறு ஆர்கானிக் முறையில் செய்கிறோம்.

இதனாலேயே மக்களிடம் இந்த பிசினஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பிசினஸ் செய்ய விளம்பரமாக நாங்கள் கருதியது நேர்த்தியான வேலை தான். ஏனென்றால் ஒரு கல்யாணத்திற்கு நாங்கள் செய்யும் சீர் தட்டுகளை பார்த்து அங்கு விருந்தினராக வந்தவர்கள் அவர்களுடைய வீட்டுவிசேஷத்திற்கு எங்களை புக் செய்து விடுவார்கள். அதனால் எங்களுக்கு பெரியதாக விளம்பரம் தேவைப்படவில்லை.

நெகட்டிவிட்டியும் நம்பிக்கையும்

சீர் தட்டுகள் டெக்கரேஷன் என்ற பிசினஸ் ஐடியாவை கேட்டதும் எங்களை அதிகமாக கேலி செய்தது உறவினர்கள் தான். இதெல்லாம் ஒரு பிசினஸா இதற்கெல்லாம் யார் பணம் கொடுக்கப் போகிறார்கள், நேரத்தை விரயம் செய்கிறீர்கள் என்றார்கள்... ஆனால் அதே உறவினர்கள் தான் இன்று அவர்களின் வீட்டு விசேஷத்திற்கு எங்களை புக் செய்துள்ளனர். பிசினஸில் கிடைத்த லாபத்தை தாண்டி இதைத்தான் நான் சக்சஸ் ஆக பார்க்கிறேன்." என்கிறார்.

தொழில் தொடங்குவதற்கு வயது, முதலீடு, பணம் என எதுவும் தடை இல்லை... பிசினஸ் மாடலும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும் என்று நிரூபித்துள்ளனர் இந்த அம்மா, மகள். குழந்தைகளின் நலனுக்காக தன் கனவுகளை தியாகம் செய்த அம்மாக்கள் மீண்டு எழுவதற்கு இவர்களின் கதை ஒரு சான்று.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User