புதுச்சேரி போலி மருந்து மோசடி: முக்கிய குற்றவாளியின் ஜாமீன் ரத்து; நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

Sep 24, 2026 - 21:31
0
புதுச்சேரி போலி மருந்து மோசடி:  முக்கிய குற்றவாளியின் ஜாமீன் ரத்து; நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மத்திய தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளைத் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

போலி மருந்து தொழிற்சாலை
போலி மருந்து தொழிற்சாலை

இதையடுத்து சன் பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.200 கோடி மதிப்பிலான போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா உள்ளிட்ட 26 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

ராஜாவுக்கு பல்வேறு மாநிலங்களில் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனிடையே, ராஜா உள்ளிட்ட 26 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில், வழக்கை முடக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக ராஜாவை சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதுச்சேரியில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார்.

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு வழக்கு

இதையடுத்து, ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாமீன் நிபந்தனைகளின்படி ராஜா தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நிபந்தனைகளை மீறி சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ராஜா ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User