போட்டு கொடுத்த நேரு தரப்பு?| சிக்கலில் மருமகன் | அன்புமணிக்கு எதிராக ஸ்ரீகாந்தி ஸ்கெட்ச் | கழுகார்

Sep 24, 2026 - 11:31
0
போட்டு கொடுத்த நேரு தரப்பு?| சிக்கலில் மருமகன் | அன்புமணிக்கு எதிராக ஸ்ரீகாந்தி ஸ்கெட்ச் | கழுகார்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் இலைக்கட்சிக்கு ஆதரவாக பழக் கட்சி இருக்குமென எதிர்பார்த்த நிலையில், தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது அக்கட்சித் தலைமை. ஆளும்தரப்புடன் மறைமுக டீல் போட்டுக் கொண்டுதான் பழக் கட்சித் தலைமை அப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆனால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் இலைக்கட்சியுடன் நெருக்கமாக இருக்கவே விரும்புகிறார்களாம். ஒருசிலரோ, இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கல்லாகட்டிவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில், ஆளும்கட்சி புள்ளிகளை சந்தித்து, 'எங்க வாக்கு உங்களுக்குத்தான்.. அதுக்கு நாங்க பொறுப்பு. எங்களுக்கு லட்டுகளை கொடுத்துவிடுங்கள்' என ஒரு தரப்பினர் வசூலித்திருக்கிறார்கள். பழக் கட்சியின் இன்னொரு டீம் அறிவாலய புள்ளிகளை சந்தித்து, 'எங்க ஆட்களை சூரியனுக்கு போடச் சொல்லிட்டோம்' என அங்கேயும் வசூலை போட்டிருக்கிறார்கள். இலைக்கட்சியிடமிருந்தும் அன்பளிப்புகளை வாங்க முயற்சி நடக்கிறதாம்.

கடந்த தி.மு.க ஆட்சியில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் எல்லாமுமாக இருந்து அட்ராசிட்டி செய்தவர் தி.மு.க பகுதி செயலாளர் ராம்குமார். கோயிலுக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ததாக, அவர்மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட ராம்குமார், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுக்கு நெருக்கமானவராம். ஒருகாலத்தில் கே.என்.நேரு ஆதரவாளராக இருந்த ராம்குமார், அதன்பிறகு சேகர்பாபு மூலம் கடந்த ஆட்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் அறங்காவல் குழு தலைவராக ஆக முயன்றார்.

கே.என் நேரு
கே.என் நேரு


தனது ஊரில் வேறு அமைச்சர் தலையிடுவதை விரும்பாத கே.என்.நேரு, அதை தடுத்துவிட்டார். அதிலிருந்து ராம்குமார் தரப்புக்கும் கே.என் நேரு தரப்புக்கும் முட்டல் மோதல் தொடங்கியிருக்கின்றன. கட்சி மறுசீரமைப்பிலும் ராம்குமாரை ஓரம்கட்ட பார்த்திருக்கிறார்கள். இச்சூழலில், ராம்குமாரின் நிலமோசடி விவகாரத்தை அமைச்சர் ரமேஷ் பூதாகாரமாக்குவதாக சொல்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தரப்புதான் ராம்குமாரை போட்டுக்கொடுத்து வழக்கில் சிக்க வைத்திருக்கிறது என சந்தேகிக்கிறார்கள் திருச்சி உடன்பிறப்புகள்!

மலைக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு தோற்ற ஆளும்கட்சியின் புல்லாங்குழல் பிரமுகர், தற்போது வாரியப் பொறுப்பில் அமர்ந்துவிட்டார். 'நம்மால்தான் மாண்புமிகு ஆகமுடியவில்லை, நமது வாரிசை மாண்புமிகுவாக்க வேண்டும்' என்ற கணக்கில்,  முதன்மையானவர் ராஜினாமா செய்த தொகுதியை மகனுக்கு வாங்கிவிட காய் நகர்த்திவந்தார். இந்நிலையில், அவர் ஆசையில் கல் விழுந்ததுபோல ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறதாம்.

பயிற்தொழில் துறையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றிவரும் அவரது மருமகன், உரம் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து துறைசார்ந்த மாண்புமிகுவுக்கு ஸ்வீட் பாக்ஸுகளை பெற்றுதரும் ஏஜெண்ட்டாக செயல்பட்டாராம். விஷயமறிந்த மேலிடம் அவரை தூக்கியடித்துவிட்டது. 'வாரிசுக்கு சீட் கேட்டுவரும் சூழலில் மருமகன் மாட்டிக் கொண்டாரே!' என கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் புல்லாங்குழல் பிரமுகர். இதையே காரணமாக வைத்து மகனுக்கு சீட் கிடைக்காமல் செய்துவிட்டால் என்ன செய்வது என கண்ணீர் வடிக்கிறாராம்.


'த.வெ.க தலித் மக்களுக்கான அரசு' என நிறுவினால், ஓ.பி.சி சமூக மக்களை விஜய்க்கு எதிராக திருப்பிவிடலாம் என சில அரசியல் கட்சிகள் கணக்குப்போட்டு வருகின்றன. அதற்கு அவல் போட்டிருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு. சென்னை எம்.சி ராஜா சமுகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட வன்னியரசுவிடம், 'மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டும்' என கோரிக்கை எழுந்திருக்கிறது. 'இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்' எனச் சொல்லியிருந்தார் அமைச்சர். அமைச்சரின் இந்த பேச்சுக்கு சமூதாய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, 'தமிழகத்தில் மாட்டிறைச்சி பொதுவான உணவு அல்ல; அது நம் கலாசாரத்திலும் இல்லை' என கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுவரை தமிழக அரசின் எந்த விடுதிகளிலும் மாட்டுக்கறி வழங்கப்படாத நிலையில் அமைச்சரின் பேச்சு அரசியல்ரீதியாக தவெகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

தந்தை - மகன் மோதலிலிருந்து மீண்ட பா.ம.க, அக்கா - தம்பி மோதலுக்கு ஆயத்தமாவதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பா.ம.க-வை முழுமையாக தனது மகன் அன்புமணியிடம் ஒப்படைந்த ராமதாஸ், தனது மகள் ஸ்ரீகாந்தி, ஜி.கே மணி, சேலம் அருள் உள்ளிட்ட ஆதரவாளர்களை கைவிட்டுவிட்டார். அன்புமணியும் அவர்களை அரவணைக்க முன்வராததால் அவர்களது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, ராமதாஸால் கைவிடப்பட்ட அந்த மூவரணி இணைந்து வன்னியர் சங்கத்தை தொடங்குவோம் என ஆலோசித்திருக்கிறார்களாம்.

ராமதாஸ் மகள் காந்திமதி

'சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான அணிக்கே பல தொகுதிகளில் 500 வாக்குகள்தான் கிடைத்தது. இதில் நாம் சங்கம் தொடங்கி அரசியல் செய்தால் யார் நம்மை ஆதரிப்பார்கள்...' என ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துமுரண் கிளம்பியிருக்கின்றன. 'ரிச்ல்ட் எப்படியும் இருக்கட்டும். நாம் சங்கம் தொடங்குவோம்.. நம்மை ஓரம்கட்டும் அன்புமணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவோம்' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாராம் ஸ்ரீகாந்தி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User