``அம்பிகா இப்படியெல்லாம் பொறாமைப்பட்டால் நான் என்ன செய்வது?" - வெடித்து பேசும் நடிகை ராதா

Sep 24, 2026 - 20:31
0
``அம்பிகா இப்படியெல்லாம் பொறாமைப்பட்டால் நான் என்ன செய்வது?" - வெடித்து பேசும் நடிகை ராதா

1980-களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த அம்பிகா - ராதா சகோதரிகள், அண்மைக்காலமாக சொத்து விவகாரத்தில், ஒருவரையொருவர் குற்றம்சாட்டி மாறி மாறி புகார் அளித்துவருவது திரையுலகைத் தாண்டி அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

"42 கோடி ரூபாய்க்கு காசோலை மோசடி செய்ய முயற்சித்தார் அம்பிகா" என காவல்துறையில் நடிகை ராதா புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா, "காசோலை விவகாரத்தில் ராதா மீது நான் புகார் கொடுத்தால் அவர்தான் சிறை செல்ல நேரிடும். என் தங்க நகைகளை அபகரித்துக்கொண்டார் ராதா. பணத்துக்கு முன் அக்காள் - தங்கை பாசமெல்லாம் அழிந்துபோய்விட்டது" எனக்கூறி கண் கலங்கினார்.

இந்த நிலையில், நடிகை ராதாவிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

"அம்பிகா, காசோலை மோசடி செய்ய முயன்றார் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், அவரோ 'காசோலை விவகாரத்தில் ராதா மீது புகார் கொடுத்தால் அவர் சிறை செல்ல நேரிடும்' என்கிறாரே?"

"நானும் அம்பிகாவும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வளசரவாக்கம் வீட்டில் ஒன்றாக இருந்தபோது, வீட்டின் அடிப்படை செலவுகளுக்காக, என் கையெழுத்திட்டு நான் கொடுத்திருந்த வெற்றுக் காசோலைகள்தான் அவை. அந்தக் காசோலைகளில் 42 கோடி ரூபாயை நிரப்பி இப்போது கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

பணம் இன்றி, காசோலை திரும்பிவந்தால், அதை வைத்து என் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதுபோன்று, ஏதோ ஒரு திட்டத்தில்தான் இப்படி செய்திருக்கிறார்கள். அதனால்தான் இதுகுறித்து என் கவனத்துக்கு வந்ததும், காசோலையை நிறுத்திவைக்குமாறு வங்கிக்கு தகவல் கொடுத்தேன். இதுதான் நடந்த உண்மை.

நானே காசோலை கொடுத்திருந்தால், ஒன்றரை வருடங்களுக்கு முந்தைய காசோலையை ஏன் கொடுக்கப்போகிறேன்? ஆக, தவறு செய்யும் நோக்கத்தோடு காசோலை கொடுத்ததே அம்பிகாதான். இதில் என் மீது எப்படி அவர் புகார் கொடுக்க முடியும்?"

"உங்கள் குடுமபத்துக்குச் சொந்தமான 'ஏ.ஆர்.எஸ் கார்டனை' 'ஆர்.ஆர். கார்டன்' என நீங்கள் பெயர் மாற்றி அபகரித்துவிட்டதாக எதிர்த் தரப்பினர் சொல்கிறார்களே?"

"ஏ.ஆர்.எஸ் கார்டன் ஒரு காலத்தில் எங்கள் குடும்ப சொத்தாக இருந்தது. ஆனால், கடந்த வருடம் என் அம்மா மறைவதற்கு முன்பே சொத்துகள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே பிரித்துக் கொடுத்துவிட்டார். அந்த வகையில்தான் ஏ.ஆர்.எஸ் கார்டன் என் பங்காக வந்து சேர்ந்தது. அம்பிகாவின் பங்காகக் கிடைத்த மதிப்புமிக்க சொத்துகளில் சிலவற்றை விற்று, அமெரிக்காவில் சொந்தமாக வீடுகள் வாங்கியிருக்கிறார்.

குடும்பச் சொத்துகளை நான் அபகரித்துவிட்டதாக குற்றம் சாட்டுகிற அம்பிகா, குடும்பச் சொத்தாக தனக்குக் கிடைத்தவற்றைப் பற்றி மட்டும் மிகக் கவனமாகப் பொதுவெளியில் பேசாமல் தவிர்த்துவிடுகிறார். ஆக, உண்மைகளை மறைத்துப் பேசும் தந்திரம் குறித்து அவர்தான் விளக்க வேண்டும்.

அம்பிகா
அம்பிகா

எனக்குச் சொந்தமான ஏ.ஆர்.எஸ் கார்டனை 'ஆர்.ஆர் கார்டன்' எனப் பெயர் மாற்றம் செய்து, தொடர்ந்து தொழில் செய்துவருகிறேன். இதில் அவர் ஏன் வருத்தப்படுகிறார் என எனக்குத் தெரியவில்லை!"

"ஆனால், 'ஏ.ஆர்.எஸ் கார்டன் நிறுவனரே நான்தான்' என்கிறாரே அம்பிகா?"

"பாவம்... அதற்கு நான் என்ன பண்ண முடியும்? அவர்களது சொத்து என்றால் அதற்கான ஆவணங்களைக் கொண்டுவந்து அவர்கள்தான் நிரூபிக்க வேண்டும்!"

"தங்கத்தின் மீது ராதாவுக்கு பலவீனம். என்னுடைய தங்க நகைகள் நிறைய ராதாவிடம் இருக்கிறது என்கிறாரே அம்பிகா?"

"வீடு, ஸ்டூடியோ பிரச்னைகளைப் பேசிப்பேசி அலுத்துவிட்டதால், இப்போது தங்க நகை என்று புது பிரச்னையை சொல்லி திசை திருப்புகிறார். அம்பிகாவுக்கும் எனக்கும் தேவையான நகைகளைப் போட்டுத் திருமணம் செய்துவைத்ததோடு, எங்களுக்குத் தேவையான சொத்துகளையும் கொடுத்ததே எங்கள் அம்மாதான். உண்மை இப்படியிருக்கும்போது அவருடைய நகைகளை நான் எப்போது, எங்கே எடுத்துப்போனேன்?

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவர்களின் எதிர்காலத்தைக் கருதி நான் தங்க நகைகள் சேமித்து வைத்துள்ளேன். அந்த நகைகளைப் போட்டுத்தான் மகளுக்கு திருமணமும் செய்துவைத்தேன். அதைப் பார்த்துக்கூட இப்படியெல்லாம் பொறாமைப்பட்டால் நான் என்ன செய்வது?"

"அக்காள் - தங்கை பாசத்தைக்கூட பணம் தோற்கடித்துவிடுகிறது என்றெல்லாம் உணர்ச்சி வசப்படுகிறாரே அம்பிகா?"

"ஆமாம்... அதற்காக அம்பிகாதான் வருத்தப்பட வேண்டும். எனக்கும் எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்கத்தான் ஆசை. ஆனால், என் மகள் திருமணத்தின்போதுகூட அவ்வளவு அன்பாக இருந்த அம்பிகா, இப்போது ஏன் இப்படி மாறிப்போனார் என்றுதான் எனக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. என் தம்பி மல்லிகார்ஜூன் இதன் பின்னணியில் இருக்கிறார். அவர் மீது ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அதற்குள் போக நான் விரும்பவில்லை!"

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User