`படத்துக்கு 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'னு டைட்டில் வச்சதுக்கு காரணம் இதுதான்..!'- இயக்குநர் ரவி பிரசன்னா

Sep 24, 2026 - 19:31
0
`படத்துக்கு 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'னு டைட்டில் வச்சதுக்கு காரணம் இதுதான்..!'- இயக்குநர் ரவி பிரசன்னா

கோடம்பாக்கத்தின் ஹாட் ஆஃப் த டாபிக் ஆகியிருக்கிறது 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'. 'புரட்சி திருவினையாக்கும்', 'bite is the curse. fight is the cure' ஆகிய அடைமொழிகள் சூழ 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'யின் போஸ்டர்கள் பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநரான ரவி பிரசன்னாவிடம் பேசினோம்.

``பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்குள் வந்திருக்கேன். என்னோட சிறுகதைகள் ஆனந்த விகடன் உள்பட பல பத்திரிகைகள்ல வெளியாகியிருக்கு. அதன்பின், ஒரு வார இதழ்ல உதவி ஆசிரியராகவும் வேலை செய்திருக்கேன். என்னோட பதிப்பகம் மூலம், பல நூல்களும் வெளியிட்டிருக்கேன். அதன்பின் சினிமா கனவுகள்னால, பாக்யராஜ் சார் நட்பு கிடைச்சது. என்னோட சிறுகதை தொகுப்புகளை படிச்சிட்டு என்னை பாராட்டியதோடு, 'நீங்க வாங்க. படங்கள்ல வொர்க் பண்ணலாம்'னு கூப்பிட்டார். அவர்கிட்ட 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி', 'ஞானப்பழம்','வேட்டிய மடிச்சுக்கட்டு' உள்பட 5 படங்கள்ல வேலை செய்துருக்கேன். அதன்பின் பாக்யராஜ் சார் சின்னத்திரையில் 'கதையின் கதை' பண்ணும் போது, அதிலும் வொர்க் பண்ணினேன். கிட்டத்தட்ட 10 வருஷம் பயணிச்ச அனுபவத்தோடு, ஏவிஎம், ராடன், சரிகம மீடியானு பல நிறுவனங்கள் தயாரிச்ச சீரியல்களை இயக்கியிருக்கேன். இந்த சூழல்ல தனியா படம் இயக்க முயற்சி செய்துட்டிருந்தேன். அது இப்பத்தான் கைகூடியிருக்கு.

போஸ்டரில்..

படத்தின் போஸ்டர் பார்த்ததும் பலரும் எங்கிட்ட, 'இதுல பாக்யராஜ் சார் பட ' டச்' இருக்கே?'னு கேட்டாங்க. அப்படி இல்லாம இருக்கறது தான் ஆச்சரியம். படத்தின் இந்த தலைப்பை கேட்டவுடன், இது ஒரு அரசியல் கட்சியின் பெயரை நினைவு படுத்துற மாதிரி தோணலாம். ஆனா, இது முழுக்க முழுக்க அரசியல் படம் கிடையாது. அரசியலும் இருக்கும். அதே சமயத்துல ஜனரஞ்சகமாகவும் இருக்கும். ஒரு அரசியல் பின்னணியில் உள்ள ஒரு பையன், அடிப்படை தொண்டனான இருந்து கட்சிக்குள் அடியெடுத்து வைக்கிறான் . அப்போ அவன் சில அவலங்களை பார்த்து, அதிர்ச்சியானதோடு, அதையெல்லாம் சரி செய்யணும்னு நினைக்கறான். அதற்கிடையே அவன் காதலிலும் விழுகிறான்.

படப்பூஜையில்..

அதன்பிறகு என்னென்ன நடக்குது என்பது மீதிக்கதை. ஹீரோ அரசியல்கட்சி ஆரம்பிச்சதும், சில அவலங்களை கண்டு கொதித்தெழுந்து அதுக்கு தீர்வு காண நினைக்கிறார். கதையில இப்படி சில விஷயங்களும் இருக்கறதால, எல்லோரும் திரும்பி பார்க்கற மாதிரி ஒரு டைட்டிலை வச்சிருக்கோம். படத்தின் ஹீரோவா யுவன் நடிக்கறார். இதுக்கு முன்னாடி 'கிட்டி'னு ஒரு படம் செய்துருக்கார். ஹீரோயின் அஞ்சு கிருஷ்ணா, இதுக்கு முன்னாடி மலையாளத்துல சில படங்கள்ல நடிச்சிருக்கார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்குது. அதன்பிறகு படப்பிடிப்புக்கு கிளம்புறோம்.

ரவி பிரசன்னா

பாக்யராஜ் சார்கிட்ட பத்து வருஷம் பயணிச்சது மறக்க முடியாத தருணங்களாக இருக்கு. அவரோட ஞாபகசக்தி பிரமிக்க வைக்கும். அவர்கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள் எப்பவும் கைக்கொடுக்கும். அவர் இப்போ இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். என் படப்பூஜைக்கு முதல் ஆளாக வந்திருந்து வாழ்த்தியிருப்பார்'' என்கிறார் ரவி பிரசன்னா.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User