தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?" - மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை

May 15, 2026 - 15:32
0
தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?" - மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்னோவின். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த திருநங்கை ஒருவரைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது பெயர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ரெளடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவரது நண்பரான பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சூசை மீதும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் தாளமுத்துநகர் அருகிலுள்ள மேட்டுப்பட்டி அருகேயுள்ள கடற்கரையில் மறைவான பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்
தாளமுத்துநகர் காவல் நிலையம்

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ், முத்துக்குமார் ஆகியோர் அவர்களின் நண்பர்களுடன் அமர்ந்து அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அருகருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவருக்கொருவர் அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இருதரப்பில் யார் பெரிய ஆள் என, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, இதில் ஆத்திரமடைந்த சந்தனராஜ் கும்பல், ஸ்னோவின் மற்றும் சூசை ஆகிய இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்னோவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூசை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சந்தனராஜ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகளில் சிக்கிய ரெளடி சந்தனராஜை போலீஸார் தேடி வந்தனர். ஆனால், போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே இருந்துள்ளார். இந்த நிலையில்தான், இந்தக் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்
தாளமுத்துநகர் காவல் நிலையம்

பல வழக்குகளில் தொடர்புடைய சந்தனராஜ்ஜைப் பிடிக்காமல் போலீஸார் சுணக்கம் காட்டியதே இக்கொலைக்குக் காரணம் என்கின்றனர் அப்பகுதியினர். தூத்துக்குடி தாளமுத்துநகர், மேட்டுப்பட்டி, மொட்டை கோபுரம் ஆகிய பகுதிகள்தான் போதைப் பொருட்களின் புகலிடமாகவும், இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குப் பீடி இலைகள் உள்ளிட்டவற்றை கடத்தும் கேந்திரமாகவும் விளங்குகிறது. ஆனால், இங்கு பெரும்பாலும் உள்ளூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதே இல்லை என்கின்றனர் அப்பகுதியினர்.

கஞ்சா நடமாட்டமும், கஞ்சா புகைப்பவர்களும் இப்பகுதியில் அதிகம் சுற்றித் திரிவதால் பெண்கள், மாலை நேரத்திற்கு மேல் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User