’சமூகநீதி பேசும் ஆ.ராசா பெண்ணை பொருளாக, கூட்டணி கட்சிகளை அடிமைகளாக பார்க்கிறார்’ - காங்கிரஸ் சாடல்

May 23, 2026 - 00:02
0
’சமூகநீதி பேசும் ஆ.ராசா பெண்ணை பொருளாக, கூட்டணி கட்சிகளை அடிமைகளாக பார்க்கிறார்’ - காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்ணை இழிவுபடுத்தும் சொல் பேசும் வாய், பண்பாட்டைப் பேச தகுதியற்ற வாய் என்று தமிழின் மரபே சொல்லும். ஆ.ராசா அவர்கள் தொடர்ச்சியாக வெளியிடும் கருத்துக்கள், அரசியல் விமர்சனத்தைத் தாண்டி பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்து வருகின்றன. ஒரு தருணத்தில் கூட்டணிக் கட்சிகளை ‘பொண்டாட்டிகள்’ என ஒப்பிட்டு அரசியல் நாகரிகத்தை களங்கப்படுத்தினார். எதிர்ப்பு கிளம்பியதும் பதிவை நீக்கினார். ஆனால் அதன்பின் வெளியிட்ட ‘என் வீட்டு தோட்டத்து இளநீர்’ என்ற உவமை, கூட்டணிக் கட்சிகளை தனக்குச் சொந்தமான சொத்தாகக் கருதும் ஆண்டான்–அடிமை மனநிலையையே வெளிப்படுத்துகிறது. அதிலும் ‘கூனி’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் அளவுக்கு தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலக சகோதரத்துவத்தைப் பாடிய தமிழ் மண்ணில், பெண்ணை அவமதிக்கும் மொழி பேசப்படுவது வெட்கக்கேடானது. ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என திருவள்ளுவர் கூறியுள்ளார். ஒரு அரசியல்வாதியின் வார்த்தை என்பது வெறும் சொல் அல்ல. அது சமூக மனநிலையை வடிவமைக்கும் சக்தி. அந்த வார்த்தைகள் பெண்களின் மரியாதையை காயப்படுத்தும் வகையில் இருந்தால், அது சாதாரண தவறு அல்ல - சமூகத்திற்கு எதிரான பொறுப்பற்ற செயல்.

சமூகநீதி, சமத்துவம் என்று மேடைகளில் பேசிக்கொண்டே, நடைமுறையில் பெண்களை பொருளாகவும் கூட்டணிக் கட்சிகளை அடிமைகளாகவும் பார்க்கும் மனநிலையே இன்று ஆ.ராசாவின் பதிவுகளில் வெளிப்படுகிறது. ‘அறம் செய விரும்பு’ என்று அவ்வையார் சொன்ன தமிழகம், ‘அவமதித்து அரசியல் செய்’ என்று ஒருபோதும் கற்றுக் கொடுக்கவில்லை. இப்போது தமிழகம் காத்திருப்பது அடுத்த பதிவை அல்ல... தன்னுடைய வார்த்தைகளுக்கான மனமாறிய மன்னிப்பைத்தான்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User