செங்கல்பட்டு மாவட்டம் மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி: நாகதோஷம் தீர்க்கும் வாசுகி நர்த்தனர் சந்நிதி!

May 16, 2026 - 08:30
0
செங்கல்பட்டு மாவட்டம் மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி: நாகதோஷம் தீர்க்கும் வாசுகி நர்த்தனர் சந்நிதி!

பெரும்பாலும் ஆலயங்களில் கருவறையில் ஈசன் லிங்க மூர்த்தமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். சில தலங்களில் மேற்கு நோக்கியும் ஈசன் அருள்பாலிப்பதுண்டு.

அப்படி மேற்கு நோக்கிய ஈசனைத் தரிசனம் செய்தால் ஆயிரம் சிவாலயங்கள் தரிசித்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு.

திருமயிலை, திருவான்மியூர் போல இந்த ஆலய ஈசனும் மேற்கு நோக்கியே எழுந்துள்ளார். ராவணேஸ்வரன் ஒருநாளில் நூறு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனத்தைக் கண்ட பிறகே உணவு எடுத்துக் கொள்வான் என்றும் அதற்காகவே அவன் புஷ்பக விமானத்தை உருவாக்கினான் என்றும் புராணத் தகவல் ஒன்று உண்டு.

மேற்கு நோக்கிய ஒரு சிவாலயத்தைத் தரிசித்தால் கயிலையைத் தரிசித்த புண்ணியம் உண்டு என்பர். அப்படி ஈசன் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஓர் ஆலயம்தான் மேலக்கோட்டையூர் மேகநாத சுவாமி திருக்கோயில்.

மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி
மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி

சென்னை தாம்பரம், வண்டலூர் தாண்டி கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கண்டிகை தாண்டியதும் மேலக்கோட்டையூர் வரும். இங்குதான் ஈசன் ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம். தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஆலயத்தில் இறைவன் மேகநாதேஸ்வரராய் மிக அழகாக கம்பீரமாக சதுர ஆவுடையராக மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

மேகாம்பிகை எழில் வடிவாக நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். இவளை வழிபட மாங்கல்ய வரமும், பலமும் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத்தலத்தில் ராமாயண கால நிகழ்வு ஒன்று என்கிறார்கள். சிவபக்தனான ராவணனின் மகன் இந்திரஜித் எனும் மேகநாதன், இங்கு வந்து நீண்ட ஆயுளைப் பெற உதவும், யம பயம் நீக்கும், மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்தைச் செய்தான் என்கிறார்கள். இதனால்தான் இந்த ஆலய ஈசனின் திருப்பெயர், 'மேகநாதேஸ்வரர்' என்றானது என்கிறார்கள்.

துர்வாசரின் வேள்வியைத் தடுக்க வருணன், விளையாட்டாக மழை பொழிந்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், குளிர்ந்த தேகம் கொண்ட வர்ணனுக்குக் கடுமையான வெப்புநோய் வருமாறு சபித்தார். இதனால் உடலெங்கும் வெப்பம் பெருகிய வருணன், இந்த ஆலயத்துக்கு வந்து, அவனுடைய வாகனமான மகரம் எனும் முதலையைக் கொண்டு மகரத் தீர்த்தம் உருவாக்கி ஸ்வாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து சாபவிமோசனமும் பெற்றான் என்கிறது தலபுராணம்.

மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி
மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி

சதுர ஆவுடை லிங்கம் என்றாலே அது மிக மிகப் பழைமையான ஆலயம் என்றும் சொல்வது உண்டு. மேலும் சதுர ஆவுடை ரிஷிகளால் ஸ்தாபிக்கப்படுவது என்ற ஐதிகமும் உண்டு. மேகநாதர் சதுர ஆவுடையராகத் திருக்காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள கல்வெட்டை வைத்துப் பார்க்கும்போது இது ராஜராஜ சோழனின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோயில் என்று தெரிய வருகிறது. 'ராஜராஜ கேசரி' என்று அந்தக் குறிப்பில் உள்ளதால் அது நிச்சயம் ராஜராஜனைத்தான் குறிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிவபெருமான் வாசுகி பாம்பின்மீது நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம் எனப்படும். அப்படிப்பட்ட அபூர்வ திருக்கோலத்தை இங்கே மட்டுமே தரிசிக்க முடியும். ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி சகலரையும் அஞ்சச் செய்த வாசுகி தலைமீது ஈசன் தன் திருப்பாதம் வைத்து நாட்டியம் ஆடினார்.

ஈசனின் வேகத்தால் நிலைகுலைந்த வாசுகி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் விமலானாம் ஈசன், வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார்.

மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி
மேல்கோட்டையூர் ஸ்ரீமேகநாதசுவாமி

வாசுகி நர்த்தனர் திருக்கோலம் மிகவும் அழகானது. இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்களாக மற்ற திருக்கரங்களில் மான், மழு, யோக முத்திரைகளோடு அருள கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஈசன். இவரை தரிசித்து வழிபட்டால் நாகதோஷம் விலகும், போட்டி பொறாமைகளில் இருந்து விலகி நலம் பெறலாம். வாட்டத்தை நீக்கும் இந்த வாசுகி நர்த்தனரை வணங்கி சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்கிறார்கள்.

வருணனின் வெம்மை நோய் தீர்த்த தலம் என்பதால், இன்றும் சீதளம், வெம்மை சம்பந்தமான நோய் கண்டவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கிப் பலன் பெற்று செல்கிறார்கள்.

கடுமையான தலைவலி, தலைப்பாரம் கொண்டவர்கள் இங்கு வந்து வழிபட நிவர்த்தி பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். நோய் தீர்க்கும் அற்புதத் தலமாக மேகநாதேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. அதேபோல மேகநாதன் இங்கு ஆயுள் பலம் வேண்டி வழிபட்டதால் இது ஆயுள் வரம் அருளும் தலமாகவும் உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User