தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8-ம் ஆண்டு நினைவுநாளில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

May 22, 2026 - 14:32
0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8-ம் ஆண்டு நினைவுநாளில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துள்ளத் துடிக்க உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரிடம் இன்னமும் கண்ணீர் நிரம்பி வழிகிறது. 8-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட  நிலையில்,  தூத்துக்குடி படுகொலை நடந்து 8 ஆண்டுகளாகியும் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது  குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கும் குடும்பத்தினர், புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றிருகும் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

8-ம் ஆண்டு நினைவுதினம்

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினரிடம் பேசினோம், “துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்போதைய அ.தி.மு.க ஆட்சிக்கு  எதிர்கட்சிகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டதால்  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  3 ஆண்டுகளாக  36 கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதில் 1,048 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.  1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. 3,000-க்கும்  மேற்பட்ட  பக்கங்கள் உடைய  முழுமையான விசாரணை அறிக்கை கடந்த 2022, மே 18-ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதில், “யாருடைய  உத்தரவும்,  தூண்டுதலுமின்றி  துப்பாக்கிச்சூடு  நடந்துள்ளது.  தமிழ்நாடு  இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை  நடவடிக்கைகளில்  ஒன்று.   அப்போது  பொறுப்பு வகித்த  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர்  வெங்கடேஷ், தூத்துக்குடி  எஸ்.பி. மகேந்திரன், தென் மண்டல  ஐ.ஜி  சைலேஷ்குமார் யாதவ்,  நெல்லை சரக  டி.ஐ.ஜி கபில்குமார்  சரட்கார்,  வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட  17  பேர்தான்  இதற்கு  முழுப்பொறுப்பு” எனவும், குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரின் தவறுகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு  நடந்த   சட்டமன்ற  தேர்தல் பிரசாரத்தின்போது  தூத்துக்குடி  வந்த  முன்னாள் முதல்வர்  ஸ்டாலின்,   ”அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு  நேர்ந்து  நடத்திய  பச்சைப்  படுகொலைதான்  துப்பாக்கிச்சூடு சம்பவம், குற்றம் சாட்டப்பட்டவர்கள்  மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

8-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

நாங்கள்  ஆட்சிக்கு  வந்தால் சிறப்புச்சட்டம்  இயற்றி  ஸ்டெர்லைட்  ஆலையை  நிரந்தரமாக  அகற்றிட  நடவடிக்கை  எடுப்போம்.  துப்பாக்கிச்சூடு  படுகொலைக்கு  காரணமானவர்கள்  எவராக  இருந்தாலும்  எந்த  உயர் பதவியில்  இருந்தாலும்  தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறினார். நாங்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால், இதுவரை அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  சாத்தான்குளம் சம்பவத்தில் குடும்பத்தினருக்கு கிடைத்த நீதி ஏன் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர்களைப் பறிகொடுத்த குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை? புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.” என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User